12 மணி நேர பணி நேரத்திற்கு தயாரான தமிழ்நாடு! மற்ற மாநிலங்களில் நிலைமை என்ன?

12 மணி நேர பணி நேரத்திற்கு தயாரான தமிழ்நாடு! மற்ற மாநிலங்களில் நிலைமை என்ன?

எதை தி.மு.க எதிர்த்து வந்ததோ, அதையே ஆதரிக்க வேண்டிய சூழலில் தி.மு.க அரசு தள்ளப்பட்டிருக்கிறது. நேற்று தி.மு.க கூட்டணிக் கட்சிகளின் கடும் எதிர்ப்பையும் மீறி, பணி நேர மாற்றத்தை முன்வைக்கும் மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. ஒரு சில தொழில்களுக்கு மட்டும் பொருந்தும். தனியார் நிறுவனங்களுக்கு மட்டும் பொருந்தும் என்றெல்லாம் தமிழக அரசு விளக்கம் தந்ததை தி.மு.க கூட்டணிக் கட்சிகளே ஏற்றுக்கொள்ளவில்லை.

8 மணி நேர வேலை என்பது தொழிலாளர்களின் பிறப்புரிமை, அதில் கை வைக்கமாட்டோம். தொழிலாளர்களுக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால் முதல் குரல் முதல்வரிடமிருந்து வரும். எங்களை நம்பி ஆதரவளியுங்கள் என்று அமைச்சர் துரைமுருகன் பேசியிருக்கிறார்.

ஒரு சில தொழில்களுக்கு மட்டுமே என்றெல்லாம் அறிவிக்கப்பட்டாலும் கூடிய விரையில் அனைத்து துறைகளிலும், அனைத்து தொழில்களிலும், தனியார், அரசுத்துறை ஏன் கல்வித்துறையில் கூட நடைமுறைக்கு கொண்டு வருவதற்கு வாய்ப்பிருப்பதாக தி.மு.க கூட்டணிக்கட்சிகள் விமர்சனம் செய்து வருகின்றன. தி.மு.கவினரும் அவர்களை சமாதானப்படுத்தும் முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறார்கள்.

பா.ஜ.கவின் ஆட்சி நடைபெறும் உத்திரப் பிரதேசத்தில் பணி நேரத்தை 12 மணிநேரம் உயர்த்தும் மசோதா அமலுக்கு கொண்டு வரப்பட்டது. அதை எதிர்த்து நாடு முழுவதும் கண்டனங்கள் எழுந்தன. இது குறித்து அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இதனால் பணி நேர திருத்த மசோதாவை தற்காலிகமாக திரும்பப் பெற்றிருக்கிறது.

உத்திரப் பிரதேசம் மட்டுமல்ல பா.ஜ.க ஆளும் பல மாநிலங்களில் கொள்கை அளவில் பணி நேரத்தை உயர்த்துவதற்கான முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளது. ஒரு சில மாநிலங்களில் ஏற்கனவே இதை நடைமுறையில் கொண்டு வந்திருக்கிறார்கள். பா.ஜ.க மட்டுமல்ல காங்கிரஸ் கட்சி ஆளும் மாநிலங்களிலும் ஏற்கனவே அமல்படுத்தப்பட்டிருக்கிறது.

பஞ்சாபில் முன்பு ஆட்சியில் இருந்த காங்கிரஸ் கட்சி, வேலை நேரத்தை நாளொன்றுக்கு 12 மணி நேரமாகவும், வாரத்துக்கு 72 மணிநேரமாகவும் அதிகரிக்கும் வகையில் சட்டங்களை திருத்தும் மசோதாவை கொண்டு வந்தது. ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, ஜார்கண்ட், அசாம், ஹரியானா, குஜராத் ஆகிய மாநிலங்களில் பா.ஜ.க. அரசு செய்தவற்றை காங்கிரஸ், மாநிலக்கட்சிகளும் கொண்டு வந்திருக்கின்றன.

பன்னாட்டு நிறுவனங்களின் முதலாளிகளுக்கு ஆதரவான அமைப்புகள், வணிக சங்கங்கள் உள்ளிட்ட அமைப்புகள் இத்தகைய கோரிக்கைகளை மத்திய, மாநில அரசுகளிடம் முன்வைத்துள்ளன. மாறி வரும் பொருளாதார சூழலில், இதை தவிர்க்க முடியாத நிலைக்குத்தான் பல அரசுகள் தள்ளப்பட்டிருக்கின்றன. ஆனால், இப்படியொரு சட்டத் திருத்ததை கொண்டு வந்ததால் ஏதாவது பலன் இருந்திருக்கிறதா? நிச்சயமாக இல்லை.

பணி நேரத்தை மாற்றும் சட்டத் திருத்தங்களால் பெரும் முதலீடுகள் ஈர்க்கப்படவோ, தொழில்மயமாக்கலை அதிகரிக்கச் செய்யவோ, வேலைவாய்ப்பை உருவாக்கவோ இல்லை என்பதை பல்வேறு ஆய்வுகள் உறுதி செய்திருக்கின்றன. தொழிலாளர் சட்டங்களில் மாற்றங்களை ஏற்படுத்துவது என்பது சாதாரண விஷயமல்ல.

தொழிலாளர் சட்டங்களும் உரிமைகளும் நீண்ட நெடிய வரலாறு உடையவை. பணி நேரத்தை உயர்த்துவது, குறைப்பது உள்ளிட்ட விவாதங்கள் 150 ஆண்டுகளாக உலகம் முழுவதும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. மாற்றம் என்பது தவிர்க்க முடியாததுதான்!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com