கர்நாடக முதல்வர் சித்தராமையாவை விமர்சித்த ஆசிரியர் பணியிடை நீக்கம்!
சித்ரதுர்கா மாவட்டம், ஹோசதுர்கா தாலுக்காவில் உள்ள கானுபெனஹள்ளியில் உள்ள அரசு கீழ்நிலைப் பள்ளியின் ஆசிரியர் ஒருவர், புதிதாகப் பதவியேற்றுள்ள முதல்வர் சித்தராமையாவை அவரது நிதிக் கொள்கைகளுக்காக விமர்சித்து பேஸ்புக்கில் பதிவு செய்திருந்தார். இதற்காக அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டதாகத் தகவல்.
ஆசிரியர் எம் ஜி சாந்தமூர்த்தி தனது முகநூல் பதிவில், “முன்னாள் முதல்வர்கள் எஸ்.எம்.கிருஷ்ணா காலத்தில் ரூ.3,590 கோடி, தரம் சிங் காலத்தில்ல் ரூ.15,635 கோடி, எச்.டி.குமாரசாமி ரூ.3,545 கோடி, பி.எஸ். எடியூரப்பா ரூ.25,653 கோடி, டி.வி.சதானந்த கவுடா ரூ.9,464 கோடி கடன். ஜெகதீஷ் ஷெட்டர் ரூ 13,464 கோடி மற்றும் சித்தராமையா ரூ 2,42,000 கோடி ”. என்று அந்தந்த முதல்வர்கள் ஆட்சியிலிருந்து காலத்தில் மாநிலத்துக்கு ஏற்பட்ட கடன் தொகையைக் குறிப்பிட்டிருந்தார் .
அத்துடன் கிருஷ்ணா காலத்திலிருந்து ஜெகதீஷ் ஷெட்டர் வரை முதல்வர்கள் பெற்ற கடன் ரூ.71,331 கோடி என்றும், சித்தராமையாவின் ஆட்சியில் அது ரூ.2,42,000 கோடியைத் தொட்டது என்று கூறியதோடு, இத்தனை கடன் இருக்கும் போது " இலவசங்களை அறிவிப்பது அவருக்கு எளிதானது" என்றும் அந்த பதிவில் அவர் கூறியிருந்தார் .
சித்ரதுர்கா மாவட்டத்தின் பொதுப் பயிற்றுவிப்பு துணை இயக்குநர் கே.ரவிசங்கர் ரெட்டி, “பேஸ்புக் பதிவின் அடிப்படையில், 1966 ஆம் ஆண்டு முதல் நடைமுறையில் இருக்கும் கர்நாடக சிவில் சர்வீசஸ் (நடத்தை) விதிகளை மீறியதால், ஆசிரியரை சஸ்பெண்ட் செய்யுமாறு ஹோசதுர்கா தாலுகாவின் தொகுதிக் கல்வி அதிகாரி எல்.ஜெயப்பாவுக்கு நான் உத்தரவிட்டுள்ளேன்”. மேலும் நடவடிக்கை எடுப்பதற்கு முன் துறை ரீதியான விசாரணையும் நடத்தப்படும். - எனத் தெரிவித்துள்ளார்.