ஐந்தாவது முறையாக பிரதமரை புறக்கணித்த தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவ்!
கடந்த ஓராண்டு காலமாவே தெலங்கானா வருகை தரும் பிரதமர் மோடியை சந்திக்காமல் முதலமைச்சர் சந்திரசேகர ராவ் புறக்கணித்து வருகிறார். ஏற்கனவே, 4 முறை புறக்கணித்த நிலையில் தற்போது தொடர்ந்து ஐந்தாவது முறையாக பிரதமரை வரவேற்காமல் முதலமைச்சர் சந்திரசேகர ராவ் புறக்கணித்துள்ளார்.
பல்வேறு திட்டப்பணிகள் தொடக்க விழாக்களில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி இன்று தெலங்கானா வருகை தந்துள்ளார். சென்னை வருவதற்கு முன்பாக தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்திற்கு சென்று ரூ.11,360 கோடி மதிப்பிலான திட்டங்களைத் தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி. செகந்திராபாத் - திருப்பதி வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலை செகந்திராபாத் ரயில் நிலையத்தில் பிரதமர் மோடி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
தொடர்ந்து, பரேட் மைதானத்தில் நடைபெறும் பொது நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்து கொள்கிறார்.தலைநகர் ஐதராபாத்திற்கு விமானம் மூலம் வருகை தந்த பிரதமர் மோடியை மாநில ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி, மாநில பாஜக தலைவர் பண்டி சஞ்சய் குமார் ஆகியோர் வரவேற்றனர்.

அங்கிருந்து செகந்திராபாத் ரயில் நிலையம் சென்ற பிரதமர் மோடி, செகந்திராபாத்-திருப்பதி வந்தே பாரத் விரைவு ரயிலை கொடியசைத்து தொடங்கிவைத்தார். தொடர்ந்து, பிரதமர் ஐதராபாத் அணிவகுப்பு மைதானத்தில் நடைபெறும் பொது நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். அங்கு ஐதராபாத் பிபி நகர் எய்ம்ஸ் மருத்துவமனை, 5 தேசிய நெடுஞ்சாலைத் திட்டங்கள், செகந்திராபாத் ரயில் நிலைய மறுமேம்பாட்டுத் திட்டம் ஆகியவற்றுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.
இந்நிலையில், தெலங்கானா வருகை தந்த பிரதமரை வரவேற்காமல் அம்மாநில முதலமைச்சர் சந்திரசேகர ராவ் மீண்டும் புறக்கணித்துள்ள செய்தி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.. தெலங்கானாவில் சந்திரசேகர ராவ் தலைமையில் பாரதிய ராஷ்டிரிய சமிதி கட்சியின் ஆட்சி நடைபெறுகிறது. ஆளும் அரசுக்கும் பாஜகவுக்கும் இடையே கடுமையான மோதல் நிலவி வருகிறது. இன்னும் ஓராண்டுக்குள் அங்கு சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், மாநில பாஜக தலைவர் பண்டி சஞ்சய் குமார் சமீபத்தில் கைது செய்யப்பட்டார்.
அதேபோல், டெல்லி மதுபான ஊழல் விவகாரத்தில் சந்திரசேகர ராவ்வின் மகள் கவிதா அமலக்கத்துறையின் தீவிர விசாரணை வளையத்தில் உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. தெலுங்கானாவில் பிரதமர் மோடி இன்று பங்கேற்கும் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள முதல்வர் சந்திரசேகர ராவுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால், இந்த விழாவில் அவர் கலந்து கொள்ளவில்லை. தெலுங்கானாவிற்கு வரும் பிரதமர் மோடியை, அம்மாநில முதல்வர் கேசிஆர் நேரில் சென்று வரவேற்காமலும் புறக்கணித்துள்ளார்.