தெலுங்கானா தலைமைச் செயலக திறப்பு விழா - காங்கிரஸ் அல்லாத கட்சிகளுக்கு சந்திரசேகர் ராவ் அழைப்ப! ஸ்டாலின் பங்கேற்பரா?
நாடாளுமன்றத் தேர்தலுக்கு ஓராண்டு உள்ள நிலையில் மூன்றாவது அணிக்கான முயற்சிகள் ஆரம்பித்துள்ளன. தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் மூன்றாவது அணிக்கான பிள்ளையார் சுழியை இட்டிருக்கிறார். அவரது கட்சியான டி.ஆர்.எஸ் கட்சி, பி.ஆர்.எஸ் என்னும் தேசியக் கட்சியாக பிரமோஷன் ஆகியிருக்கிறது.
காங்கிரஸ் அல்லாத எதிர்க்கட்சிகளோடு சந்திரசேகர் தொடர்பு கொள்ள ஆரம்பித்திருக்கிறார். சென்ற மாதம் நடைபெற்ற பி.ஆர்.எஸ் தொடக்க விழாவில் கேரள முதல்வர் உள்ளிட்ட முக்கியமான எதிர்க்கட்சிகள் கலந்து கொண்டிருந்தன.
கர்நாடகாவில் ஜனதா தளத்தின் குமாரசாமி, எப்படியும் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி சேருவார் என்று டெல்லி காங்கிரஸ் தலைமை எதிர்பார்த்து காத்திருக்கிறது. திரிபுரா சட்டமன்றத்தேர்தலில் காங்கிரஸ் கட்சியும் இடது சாரிகளும் வெற்றிகரமாக ஒரு கூட்டணியை அமைத்து போட்டியிட முடிந்திருக்கிறது.
அரவிந்த் கேஜ்ரிவால், மம்தா பானர்ஜி போல் சந்திரசேகர் ராவுக்கும் தேசியத் தலைவராகும் ஆசை வந்திருக்கிறது. டெல்லியைத் தாண்டி வந்த கேஜ்ரிவால், பஞ்சாபில் ஆட்சியை பிடிக்க முடிந்தது. ஆனால், குஜராத்திலும் இமாச்சாலப் பிரதேசத்திலும் போட்டியிட்டு காணாமல் போய்விட்டார். முன்னதாக மம்தா பானர்ஜியும் அப்படியொரு முடிவெடுத்து கோவாவில் களமிறங்கினார். ஆனால், அரசியல் சூழல் கைகொடுக்கவில்லை. இது சந்திரசேகர் ராவ் முறை.
600 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள தெலுங்கானா தலைமைச்செயலகத்தை திறந்து வைக்க தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின், ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன், பீகார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் உள்ளிட்ட காங்கிரஸ் அல்லாத எதிர்க்கட்சிகள் பங்கேற்க இருக்கின்றன.
முன்னதாக தலைமைச் செயலக திறப்பு விழா, பிப்ரவரி 17 அன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் உள்ளூர் தேர்தல்கள் அறிவிக்கப்பட்டதால் விழா, மார்ச் 16 அன்று தள்ளி வைக்கப்பட்டுள்ளது. பிப்ரவரி 17 சந்திரசேகர் ராவ் பிறந்த நாள் என்பதால் விமரிசையான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. திடீர் தேர்தல் அறிவிப்பால் அனைத்தும் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
டாக்டர் அம்பேத்கர் நினைவு மண்டபமாக தெலுங்கானா தலைமைச்செயலகம் உருவாக்கப்பட்டுள்ளது. திறப்பு விழா அன்று வாஸ்து பூஜை, சண்டி ஹோமம், சுதர்சன ஹோமம் உள்ளிட்டவை நடைபெற இருக்கின்றன. அன்று மாலை செகந்திரபாத்தில் நடைபெறம் பொதுக்கூட்டத்தில் ஸ்டாலின் பங்கேற்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது.
ஸ்டாலின் நிச்சயம் விழாவில் பங்கேற்பார் என்று அறிவாலய வட்டாரங்கள் உறுதிப்படுத்துகின்றன. பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதோடு, சந்திரசேகர் ராவின் மூன்றாவது அணி முயற்சிக்கு மு.க. ஸ்டாலின் ஆதரவு தருவாரா என்கிற கேள்வி எழுந்திருக்கிறது