அ.தி.மு.க தலைமையில்தான் கூட்டணி; எதுவாக இருந்தாலும் நாங்கதான் முடிவு செய்வோம் - ஓ.எஸ் மணியன் அதிரடி!
நேற்று சென்னையில் நடந்த பா.ஜ.க கூட்டத்தில் கூட்டணி பற்றி தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை பேசியிருப்பது, அ.தி.மு.க வட்டாரங்களிலும் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது. பா.ஜ.கவுடனான கூட்டணிக்கு அ.தி.மு.கதான் தலைமை. யாருடன் கூட்டணி, யாருக்கு எத்தனை இடங்கள் என்பதை அ.தி.மு.கதான் முடிவு செய்யும் என்று முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் அதிரடியாக கருத்து தெரிவித்திருக்கிறார்.
திராவிட கட்சிகளுடன் இணைந்து எந்த தேர்தலையும் சந்திக்க பாஜக விரும்பவில்லை. தேர்தலின் போது யாருக்கும் சால்வை போட்டும் குனிந்து செல்ல எனக்கு விருப்பமில்லை. தனித்து போட்டியிடுமளவுக்க பா.ஜ.க.வை வலுப்படுத்த வேண்டும் என்பதுதான் என்னுடைய எண்ணம் என்று அண்ணாமலை பேசியிருப்பது கட்சிக்குள்ளேயே பல குழப்பங்களை தந்திருக்கிறது.
இந்நிலையில் அ.தி.மு.கவின் பொதுச்செயலாளரை தேர்ந்தெடுக்கும் தேர்தல் பணிகள் ஆரம்பமாகியுள்ளன. இன்று முதல் வேட்புமனு தாக்கல் ஆரம்பமாகிறது. கட்சியின் தலைமையகத்திற்கு வந்திருந்த அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியனிடம் செய்தியாளர்கள் இது குறித்து கேள்வி எழுப்பினார்கள்.
இதற்கு பதிலளித்த ஓ.எஸ். மணியன், தமிழ்நாட்டில் யாருடன் கூட்டணி சேர்வது என்பது குறித்து அ.தி.மு.கதான் முடிவுவெடுக்கும். அ.தி.மு.கதான் கூட்டணிக்கு தலைமை ஏற்கும். அ.தி.மு.கதான் கூட்டணியை வழி நடத்தும் என்று குறிப்பிட்டார். இது குறித்து மேலும் பேசியர், யாருடன் கூட்டணி என்பதோடு, யாருக்கு எத்தனை சீட் தரவேண்டும் என்பதையும் அ.தி.மு.கதான் முடிவு செய்யும் என்றும் தெரிவித்தார்.
தேசிய அளவில் அ.தி.மு.க எந்தக்கூட்டணியில் இடம்பெறும் என்கிற கேள்விக்கு பதிலளிக்க மறுத்துவிட்டார். பா.ஜ.க தலைவர்களின் பேச்சு, அவர்களது உள்கட்சி விவகாரம். அது குறித்து அவர்களிடம்தான் கேட்கவேண்டும். எங்களைப் பொறுத்தவரை கூட்டணி விஷயத்தில் தெளிவாக இருக்கிறோம். தமிழ்நாட்டில் அ.தி.மு.க தலைமையில் கூட்டணி அமைத்து நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொள்வோம் என்று குறிப்பிட்டார்.
நேற்றைய அண்ணாமலையின் பேச்சும், இன்று அ.தி.மு.க தலைவர்களின் பேச்சும் ஒரு விஷயத்தை உறுதிப்படுததிவிட்டது. அ.தி.மு.கவுக்கும் பா.ஜ.கவுக்கும் இடையே கூட்டணி என்பது பெயரளவில் மட்டுமே உள்ளது. இன்றைய நிலையில் தேர்தல் நடந்தால் இரு தரப்பாலும் தேர்தல் உடன்பாட்டை கூட ஏற்படுத்திக் கொள்ள முடியாத அளவுக்கு விரிசல் விழுந்திருக்கிறது. இதை சரி செய்தால் மட்டுமே கூட்டணி என்பது முழுமையான வடிவத்தை அடையும் என்கிறார்கள், அரசியல் விமர்சகர்கள்.