தி.மு.க ஆட்சியை கூட்டணிக்கட்சிகள் கேள்வி கேட்பதில்லை, ஆனால், தேர்தல் வந்தால் மக்கள் கேள்வி கேட்பார்கள் - எடப்பாடி காட்டம்!
நிதியமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் சம்பந்தப்பட்ட ஆடியோ பற்றி முதல்வர் ஸ்டாலின் கருத்து தெரிவிக்காதது ஏன் என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி கேள்வி எழுப்பியிருக்கிறார். 2 ஆண்டு காலத்தில் ரூ.30 ஆயிரம் கோடியை குவித்திருப்பதாக நிதியமைச்சரே பேசியிருந்தும் முதல்வர் மௌனமாக இருப்பது ஏன்? அப்படியென்றால் உண்மைதானா என்று கேட்டிருக்கிறார்.
சென்ற வாரம் நிதியமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜர் பேசியிருந்ததாக இரண்டு வாட்ஸ் அப் வீடியோக்கள் வெளியாகியிருந்தன. ஸ்டாலின் குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு முக்கியமான நபர்களிடம் ஏராளமான சொத்து இருப்பதாக நிதியமைச்சர் பேசியது பதிவு செய்யப்பட்டிருந்தது. சம்பந்தப்பட்ட ஆடியோ போலி என்றும் நிதியமைச்சர் விளக்கமளித்திருந்தார்.
இந்நிலையில் மே தின கூட்டத்தில் பேசிய எடப்பாடி பழனிசாமி, நிதியமைச்சரின் ஆடியோ குறித்து முதல்வர் விளக்கமளிக்கவேண்டும் என்று பேசியிருக்கிறார். சேலம் மாநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் மே தின பொதுக்கூட்டம் நடந்தது. இதில் கலந்து கொண்டு பேசிய எடப்பாடி பழனிச்சாமி, தி.மு.க ஆட்சியின் குறைகளை உறுதியாக சுட்டிக்காட்டும் இடத்தில் அ.தி.மு.க இருப்பதாகவும், கூட்டணிக்கட்சியினர் எதிர்ப்பு தெரிவிக்காத நிலையில் தான் மட்டுமே குறைகளை ஆக்கப்பூர்வாக சுட்டிக்காட்டுவதாக பேசியிருக்கிறார்.
தி.மு.க ஆட்சியின் தவறான நடவடிக்கைகள் குறித்து தி.மு.க கூட்டணிக்காரர்கள் கேள்வி கேட்பதில்லை. ஆனால், அடுத்த தேர்தல் வரும்போது மக்கள் நிச்சயம் கேட்பார்கள். கூட்டணிக் கட்சிகள் அனைத்தும் காணாமல் போய்விடும். ஆட்சியின் குறைகளை சுட்டிக்காட்டினால் உடனடியாக அவதூறு வழக்கு போடுவார்கள். ஆட்சி மாறினால் நிச்சயம் காட்சி மாறிவிடும். மக்கள் தகுந்த பதிலடி தருவார்கள்.
தி.மு.க. பொறுப்பேற்றதில் இருந்து கமிஷன், கலெக்சன், கரப்சன் ஆகியவற்றை மட்டும் சரியாக செய்து வருகிறது. அனைத்துத் துறைகளிலும் லஞ்சம் தலைவிரித்தாடுகிறது. எங்கு பார்த்தாலும் கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை நடக்கிறது. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு நிலைமை சீரழிந்துவிட்டது. மக்களின் வரி பணத்தில் ரூ.88 கோடியில் மெரினா கடலில் கருணாநிதிக்கு பேனா சிலை எதற்கு? அறிவாலயத்திலயே கட்டிவிடலாம்
சட்டமன்றத்தில் காவல்துறை மானியக் கோரிக்கை விவாதத்தில் இருந்தபோது 2 மணி நேரம் புள்ளி விவரத்துடன் எடுத்துரைத்தேன். அதை மட்டும் ஒளிபரப்பு செய்திருந்தால் மக்கள் முதல்வர் ஸ்டாலினை பார்த்து எள்ளி நகையாடி இருப்பார்கள். ஆனால், என்னுடைய பேச்சை நேரலையில் ஒளிபரப்பு செய்யாமல்
தடுத்துவிட்டார்கள் என்றும் பேசியிருக்கிறார், எடப்பாடி பழனிச்சாமி. நாடாளுமன்றத்தில் என்னை பேச அனுமதிக்கவில்லை என்று ராகுல் காந்தி பேசியது அதே தொனியில்தான் எடப்பாடியும் பேசியிருக்கிறார்.