அதிமுக அலுவலகம் தாக்கப்பட்டதை தி.மு.க அரசு தடுத்திருக்க வேண்டும் - வேதனை தெரிவித்த ஓ.பன்னீர்செல்வம்!
சென்ற ஆண்டு அ.தி.மு.க பொதுக்குழு கூடியபோது, ராயப்பேட்டை அ.தி.மு.க தலைமை அலுவலகத்தில் ரவுடிகள் உள்ளே நுழைந்து அலுவலகத்தை தாக்கிய சம்பவம் குறித்து நேற்று சட்டமன்றத்தில் விவாதிக்கப்பட்டது. ஒன்றரை ஆண்டுகளாக ஊடங்களில் தினமும் விவாதப்பொருளாக இருந்த எடப்பாடி பழனிசாமி vs ஓ.பன்னீர்செல்வம் மோதல் நேற்று சட்டமன்றத்திலும் இடம்பெற்றிருக்கிறது.
ராயப்பேட்டையில் ரவுடிகள் உள்ளே புகுந்து அலுவலக பொருட்களை சேதப்படுத்தியது தொடர்பாக நேற்று முதல்வருக்கும் எதிர்க்கட்சித் தலைவருக்கும் இடையே விவாதம் ஏற்பட்டது. இது குறித்து பேசிய எடப்பாடி பழனிசாமி, முன்கூட்டியே புகார் அளித்தும் அ.தி.மு.க தலைமை அலுவலகத்திற்கு தகுந்த பாதுகாப்பு வழங்கப்படவில்லை. சிலர் திட்டமிட்டு தாக்க முயன்றதை தி.மு.க அரசு தடுக்கவில்லை என்று குற்றம் சாட்டினார்.
கட்சி அலுவலகம் தாக்கப்பட்டபோது பாதுகாப்பு தரவேண்டிய தி.மு.க அரசு, கைகட்டி வேடிக்கை பார்த்தது என்று அ.தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் பொள்ளாச்சி ஜெயராமன் பேசினார். இது குறித்து விளக்கமளித்த முதல்வர் ஸ்டாலின், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தாராளமாக குறைகளை சொல்லலாம். ஆனால், தகுந்த ஆதாரத்துடன் சொல்லவேண்டும். ஆதாரம் தந்தால் உறுதியாக நடவடிக்கை எடுப்போம் என்றார், முதல்வர்.
ஏதேனும் தவறுகள் நடந்திருந்தால் நடவடிக்கை எடுக்க முடியும். ஆதாரமில்லாமல் காவல்துறை அதிகாரிகளை இடமாற்றம் செய்வது, பழிவாங்குவது, அரசியல் ரீதியாக செயல்படுவதை அனுமதிக்க மாட்டோம். இது உள்கட்சி விவகாரம். தலைமை அலுவலகத்திற்கு காவல்துறை பாதுகாப்பு கேட்டதும் உரிய நேரத்தில் கொடுத்தோம். அலுவலகத்திற்குள் நடந்த சம்பவத்திற்கு அரசு பொறுப்பேற்க முடியாது என்றார்.
இது குறித்து முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பேசும்போது, யார் அலுவலகத்திற்குள் புகுந்த அத்து மீறல் செய்தது என்பதை விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டியது காவல்துறையின் கடமை. யார் வெறியாட்டம் நடத்தினார்கள் என்பதை தனி மேடை போட்டு கூட பேசத் தயாராக இருக்கிறேன். அ.தி.மு.க தலைமை அலுவலகம் தாக்கப்பட்டது வேதனையளிக்கிறது. யார் அந்த வன்முறையாளர்கள் என்று விசாரிக்கும் பொறுப்பு நிச்சயம் அரசுக்கு இருக்கிறது என்று குறிப்பிட்டார்.
பின்னர் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, யார் அலுவலகத்தை தாக்கினார்கள் என்பது சிசிடிவி காட்சிகளில் பதிவாகி உள்ளது. யார் அலுவலகத்தில் இருந்து பொருட்களை திருடிச்சென்றது என்பது தமிழக மக்களுக்கு தெரியும் என்றவர், தி.மு.கவில் உள்கட்சி மோதல்கள் நடந்தபோது அ.தி.மு.க அரசு தகுந்த பாதுகாப்பை தந்தது என்று குறிப்பிட்டபோது அதை மறுத்த முதல்வர், தி.மு.கவில் பிரச்னை வந்தபோது யாரும் மோதல் போக்கை கடைப்பிடிக்கவில்லை. ரகளையில் ஈடுபட்டதில்லை என்று குறிப்பிட்டார்.
எது எப்படியோ, அ.தி.மு.க தலைமை அலுவலகம் தாக்குதல் குறித்து நீதிமன்றம் உள்ளிட்ட பல இடங்களில் பேசப்பட்டிருக்கிறது. இம்முறை சட்டமன்றத்திலும் பேசப்பட்டுள்ளது. இது தொடர்பாக 16 பேர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். விசாரணை குறித்த முழு விபரங்களும் இன்னும் சில நாட்களில் வெளியாக இருப்பதாக பேசப்படுகிறது.