233 தேர்தல்களில் போட்டியிட்டு தோல்வியுற்ற தேர்தல் மன்னன்... வாக்களித்த 9 பேருக்கு நன்றி தெரிவித்தார்!
நாட்டில் நடக்கும் எந்த தேர்தலாக இருந்தாலும் அதில் போட்டியிட்டு வருபவர் பத்மராஜன். அந்த வகையில், தற்போது ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலிலும் அவர் போட்டியிட்டு, 9 வாக்குகள் மட்டுமே வாங்கிய நிலையில், தனக்கு வாக்களித்த 9 பேருக்கும் நன்றியை தெரிவித்துள்ளார்.
சேலம் மாவட்டத்தைச் சேர்ந்தவர்தான் பத்மராஜன். இவர் இளைஞராக இருக்கும்போது விளையாட்டாக தொடங்கிய வேட்புமனுத்தாக்கல் பின்னாளில் இந்தியாவின் பெரும் தலைவர்களையும் எதிர்த்து போட்டியிடும் அளவுக்கு கொண்டுவந்துள்ளது. 1996 ஆம் ஆண்டு தமிழ்நாடு, கேரளா, உள்ளிட்ட 5 மாநிலங்களில் நடைபெற்ற நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற தேர்தலின்போது, 5 நாடாளுமன்ற தொகுதி மற்றும் 3 சட்டமன்ற தொகுதிகளிலும் போட்டியிட்டுள்ளார்.
2011 ஆம் ஆண்டு தமிழக முதல்வர் ஸ்டாலின் போட்டியிட்ட கொளத்தூர் தொகுதியிலும் இவர் போட்டியிட்டு 114 வாக்குகளை பெற்றுள்ளார். இதேபோல், முன்னாள் முதல்வர்கள் ஜெயலலிதா, கருணாநிதி, எடப்பாடி பழனிசாமி உட்பட முதல்வர்களை எதிர்த்தும் போட்டியிட்டு உள்ளார்.
2019ல் நாடாளுமன்றத் தேர்தலின் போது கேரள மாநிலம் வயநாட்டில் ராகுல் காந்தியை எதிர்த்து போட்டியிட்டு 1,885 வாக்குகள் பெற்றுள்ளார்.
இப்படி எந்த தேர்தலிலும் போட்டிட்டு வரும் பத்மராஜனுக்கு தேர்தல் மன்னன் என்ற பெயரும் உண்டு.
இந்நிலையில், தற்போது நடந்து முடிந்த ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியிட்ட நிலையில், வழக்கம்போல் அவர் தோல்வியைத் தழுவினாலும், அவருக்கு 9 வாக்குகள் கிடைத்துள்ளன. இதுகுறித்து அவர் கூறும்போது, தற்போது நடைபெற்ற தேர்தலில் தனக்கு இது 233வது தோல்வி எனவும், இந்த தோல்வியும் தனக்கு மகிழ்ச்சி அளித்துள்ளது எனவும் கூறியுள்ள்ளார்.
மேலும் இந்த தேர்தலில் தனக்கு வாக்களித்த 9 பேருக்கும் நன்றியைத் தெரிவித்துள்ளார்.