காணாமல் போன எல்லைப் பிரச்னை; கன்னட மக்களுக்கு உதவி செய்ய வந்த மகாராஷ்டிரா அரசு!

காணாமல் போன எல்லைப் பிரச்னை; கன்னட மக்களுக்கு உதவி செய்ய வந்த மகாராஷ்டிரா அரசு!

வட கர்நாடக பகுதியைச் சேர்ந்த 865 கிராமங்களில் புதிய மருத்துவமனைகள் கட்டுவதற்கும், பல்வேறு சுகாதார திட்டங்களுக்கும் மகாராஷ்டிரா அரசு நிதி ஒதுக்கீடு செய்ய முன்வந்திருக்கிறது.

கர்நாடகா - மகாராஷ்டிராவின் எல்லைப் பகுதிகளில் உள்ள 865 கிராமங்கள், எப்போதும் சர்ச்சைக்குரிய பகுதியாகவே இருந்து வந்திருக்கின்றன. இங்கு கன்னடம் பேசும் மக்களும், மராத்தி பேசும் மக்களும் வசிக்கிறார்கள். ஆனாலும், இந்தப்பகுதி முழுவதும கர்நாடகா மாநில எல்லைக்குள் வருகிறது.

1966 தொடங்கி, இரு மாநிலங்களுக்கும் இடையே எல்லைப் பிரச்னை இருந்து வருகிறது. பிடார், பெலகாவி, கார்வார், காலாபுரகி மாவட்டங்களை மகாராஷ்டிரா தனக்கு சொந்தமான இடங்களாக குறிப்பிட்டு வருகிறது. இந்நிலையில் இரு மாநிலத்து அரசுகளும் கைகோர்த்து வளர்ச்சித் திட்டங்களை முன்னெடுப்பது சம்பந்தப்பட்ட பகுதியைச் சேர்ந்த மக்களுக்கு மகிழ்ச்சியை தந்திருக்கிறது.

கர்நாடகாவில் நாடாளுமன்றத் தேர்தல் இன்னும் இரண்டு மாதங்களில் வரவிருக்கிறது. பா.ஜ.கவுக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் நேரடியாக மோதிக்கொள்ளும் ஒரே தென்னிந்திய மாநிலமாக கர்நாடகா இருந்து வருகிறது. கர்நாடகா பா.ஜ.கவுக்கு கைகொடுக்கும் பணிகளில் மகாராஷ்டிரா பா.ஜ.கவும் ஷிண்டே தலைமையிலான சிவசேனா அரசும் களத்தில் இறங்கியிருக்கின்றன.

மகாராஷ்டிரா அரசின் ஆரோக்கிய யோஜனா திட்டத்தை, சம்பந்தப்பட்ட 865 கிராமங்களில் நடைமுறைப்படுத்தும் பணிகளில் மகாராஷ்டிரா அரசு இறங்கியிருக்கிறது. 54 கோடி ரூபாய் செலவில் மகாராஷ்டிரா அரசு முன்னெடுக்கும் திட்டம், சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ள தயராக இருக்கும் பா.ஜ.கவுக்கு பெரும் உதவியாக இருக்கும்.

மகாராஷ்டிராவில் இல்லாவிட்டாலும் மராத்தி பேசும் மக்களின் நலனுக்காக வளர்ச்சித் திட்டங்களை கொண்டு வருவது எங்களுடைய கடமை. அதன்படி, கர்நாடாகாவில் இருந்தாலும் மராத்தி மொழி பேசும் மக்கள் அதிகமாக வசிக்கும் 865 கிராமங்களையும் தத்தெடுத்துக் கொள்கிறோம். சுகாதாரத் திட்டம் மட்டுமல்ல இன்னும் பல திட்டங்களும் கூடிய விரைவில் அமலுக்கு கொண்டு வரப்படும் என்று சிவசேனாவின் மூத்த நிர்வாகி ஒருவர் தெரிவித்தார்.

கர்நாடகா அரசும், மகாராஷ்டிரா எல்லையோரத்தில் உள்ள கிராமங்களில் பல வளர்ச்சித் திட்டங்களை முன்னெடுக்கிறது. மகாராஷ்டிராவில் கன்னட மொழி பேசும் மக்கள் வசிக்கும் பகுதிகளில் கன்னட மீடியம் புத்தகங்களும் ஸ்மார்ட் டிவிகளுக்கும் தரப்பட்டுள்ளன.

கர்நாடகாவில் பா.ஜ.க ஆட்சியில் இருக்கிறது. மகாராஷ்டிராவில் பா.ஜ.கவின் உதவியால் சிவசேனா ஆட்சியில் இருக்கிறது. மத்திய, மாநில அரசுகள் ஒத்த கருத்துடன் இருந்தால் சர்ச்சைக்குரிய இடத்திலும் வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்ள முடியும் என்பதற்கு இதுவே உதாரணம் என்கிறார்கள், டெல்லி வட்டாரத்தினர்.

இது போன்ற முயற்சிகளை வேறெந்த தென்னிந்திய மாநிலங்களாலும் முன்னெடுக்க முடியாது என்பது உண்மைதான்.

Related Stories

No stories found.
logo
Kalki Online
kalkionline.com