ஆந்திரா அரசியலை அதிர வைத்த சூப்பர் ஸ்டாரின் வாய்ஸ்!

ஆந்திரா அரசியலை அதிர வைத்த சூப்பர் ஸ்டாரின் வாய்ஸ்!

தெலுங்கு தேசம் கட்சியின் தலைவரான சந்திரபாபு நாயுடு பற்றி விஜயவாடாவில் நடந்த நிகழ்ச்சியொன்றில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பேசியிருந்தார். ஐ.டி என்றால் என்னவென்று தெரியாத காலத்தில் ஐ.டி துறையை ஐதராபாத்திற்கு கொண்டு வந்தார் என்று ரஜினி பேசியது ஆந்திர மக்கள் மத்தியிலும் சந்திரபாபு நாயுடுவின் ஆதரவாளர்கள் மத்தியிலும் பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது.

என்.டி.ஆர் நூற்றாண்டு விழாவில் கலந்து கொண்ட ரஜினி, என்.டி.ஆர் பற்றி பேசியதோடு சந்திரபாபு நாயுடுவுக்கும் தனக்கும் உள்ள நெருக்கம் குறித்தும் மேடையில் பகிர்ந்து கொண்டார். பெரிய தலைவராக சந்திரபாபு நாயுடு வருவார் என்று மோகன் பாபு என்னிடம் அடிக்கடி கூறுவார். இந்திய அரசியல் மட்டுமின்றி உலக அரசியலும் அவருக்குத் தெரியும் என்றவர் ஐதராபாத்தை ஹைடெக் நகரமாக சந்திரபாபு உருவாக்கியதை நினைவுகூர்ந்தார்.

ஐ.டி. என்றால் என்ன என்று கூட தெரியாத காலத்திலேயே அவர் ஐ.டி.யை ஐதராபாத்திற்கு கொண்டு வந்தார். தற்போது லட்சக்கணக்கானோர் ஐ.டி துறையில் பணியாற்றி வருகின்றனர். பில் கேட்ஸ் உள்ளிட்டவர்கள் சந்திரபாபுவை பாராட்டியிருக்கிறார்கள். 22 ஆண்டுகளுக்குப் பிறகு ஐதராபாத்தை சுற்றிப் பார்த்தபோது, ஐதராபாத்தில் இருக்கிறேனா அல்லது நியூயார்க்கில் இருக்கிறேனா என்று தோன்றியது என்றவர் சந்திர பாபுவின் 2047 தொலைநோக்கு திட்டம் செயல்படுத்தப்பட்டால், நாட்டிலேயே ஆந்திரா முதன்மை மாநிலமாக மாறும். ஆந்திராவின் வளர்ச்சி உச்சத்திற்கு சென்றுவிடும் என்றார்.

சந்திரபாபு நாயுடு குறித்து ரஜினி புகழ்ச்சி தற்போது ஆட்சியில் உள்ள ஒய். எஸ். ஆர். காங்கிரஸ் கட்சியின் ஆதரவாளர்களிடையே எரிச்சலூட்டியிருக்கிறது. ஆளுங்கட்சியினர் ரஜினியை பேச்சை கண்டித்து, ஆர்ப்பாட்டம், கண்டன அறிக்கை என்று களத்தில் குதித்துள்ளனர். சந்திரபாபு நாயுடுவை ஆந்திர மக்கள் கடந்த தேர்தலின்போதே நிராகரித்துவிட்டார்கள். சூப்பர் ஸ்டார் ரஜினி ஏன் அவரை திரும்பவும் மக்கள் மத்தியில் திணிக்கப் பார்க்கிறார் என கேள்வி எழுப்பியிருக்கிறார்கள்.

சந்திரபாபு நாயுடுவின் விஷன் பற்றியும் அவருக்கு என்.டி.ஆரின் ஆசி உண்டு என்றும் ரஜினி தெரிவித்த கருத்தை நடிகை ரோஜா, ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.க்கள் கோடாலி நானி, மதுசூதன்ரெட்டி உள்ளிட்டோரும் விமர்சித்திருக்கிறார்கள். ஆந்திர அரசியல் பற்றி ரஜினிக்கு என்ன தெரியும்? என்.டி.ஆருக்கு துரோகம் செய்தவர் சந்திரபாபு நாயுடு. அவர் உயிரிழக்கவும் காரணமாக இருந்தவர். ஜெகன் மோகன் ஆட்சியில்தான் என்.டி.ஆருக்கு மாநிலம் முழுவதும் சிலைகள் நிறுவப்பட்டுள்ளன. என்.டி.ஆர் இருந்திருந்தால் தன்னுடைய அரசியல் வாரிசாக ஜெகன்மோகனைத்தான் கொண்டாடியிருப்பார் என முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டியின் ஆதரவாளர்கள் பேசியிருப்பது ஆந்திராவில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

தெலுங்கு தேசம் கட்சியும் ஆளுங்கட்சியினரை எதிர்த்த களமிறங்கியிருக்கிறது. தொடர்ந்து ரஜினியை விமர்சனம் செய்தால் ஆந்திரா, தமிழகம் ஆகிய மாநிலங்களுக்கு இடையே பகை, கருத்து வேறுபாடு ஏற்படும் அபாயம் உள்ளது. இரு மாநில மக்களின் நன்மையைக் கருதி முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி மன்னிப்பு கேட்க வேண்டும். ஆந்திர மாநில மக்கள் தலைகுனியும்படி ஆளுங்கட்சி தலைவர்கள் குடிகாரர்கள் போல பேசுகிறார்கள் இதனை நிறுத்த வேண்டும் என்று தெலுங்கு தேசம் கட்சியின் நிர்வாகியான ராமையா தெரிவித்திருக்கிறார்.

இணையத்தில் ரஜினியிடம் ஜெகன் மன்னிப்பு கேட்கவேண்டும் என்ற சந்திரபாபு நாயுடுவின் டிவிட்டர் வைரலாகியிருக்கிறது. இதுவரை சர்ச்சை குறித்து சூப்பர் ஸ்டார் ரஜினியோ, ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியோ கருத்து தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com