நடுத்தெருவுக்கு வரப்போகும் நாலு விஷயங்கள்!

நடுத்தெருவுக்கு வரப்போகும் நாலு விஷயங்கள்!

மீபத்தில் ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினரும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவனின் மகனுமான ஈவெரா திருமகன் காலமானதைத் தொடர்ந்து, அந்தத் தொகுதிக்கு பிப்ரவரி 27ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்றும், தேர்தல் முடிவுகள் மார்ச் 2ம்தேதி வெளியாகும் என்றும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்த இடைத்தேர்தல் அடுத்து 2024ல் நடைபெறப்போகும் நாடாளுமன்றத் தேர்தலுக்கான ஒரு முன்னோட்டமாகவே அனைத்து அரசியல் கட்சிகளாலும் பார்க்கப்படுகிறது. அதோடு, ஆளும் கட்சியின் மீது மக்களின் மனநிலை எப்படி இருக்கிறது? என்பதை உணர்த்தும் தேர்தலாகவும் இது அமையவிருக்கிறது.

இந்த இடைத்தேர்தல் நான்கு முக்கியமான விஷயங்களை நடுத்தெருவில் வெளிச்சமிட்டுக் காட்டவிருக்கிறது. முதலாவதாக, கடந்த சட்டமன்ற பொதுத்தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சியின் சார்பாக ஈவெரா திருமகன் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அதன்படி பார்த்தால் மறுபடியும் இந்தத் தொகுதியில் காங்கிரஸ் கட்சிக்குத்தான் போட்டியிட வாய்ப்புக் கொடுக்க வேண்டும். அந்த வகையில் ஈவிகேஎஸ் இளங்கோவன் அந்தத் தொகுதியில் போட்டியிட அதிகம் வாய்ப்புள்ளது. அப்படியில்லாவிடில், அவரது குடும்பத்தில் இருந்து ஒருவர் போட்டியிடவும் வாய்ப்பு உள்ளது. இப்படி இளங்கோவன் குடும்பத்தினர் போட்டியிடும் பட்சத்தில் திமுக அவர்களுக்கு அந்தத் தொகுதியை விட்டுக்கொடுக்கும். அப்படி அவர்கள் யாரும் போட்டியிட முன்வராத பட்சத்தில் காங்கிரஸை ஓரம்கட்டிவிட்டு திமுகவே அந்தத் தொகுதியில் போட்டியிட வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. அப்படி திமுக போட்டியிட்டடால் காங்கிரஸின் அடுத்த நிலைப்பாடு என்னவாக இருக்கும் என்பது அரசியல் வட்டாரம் எழுப்பும் முதல் கேள்வி.

இரண்டாவதாக, இந்த இடைத்தேர்தலில் அதிமுகவின் முடிவு என்ன என்பதும் அனைவராலும் கவனிக்கப்பட்டு வருகிறது. ஏனென்றால், சென்ற சட்டமன்ற பொதுத் தேர்தலைப் போன்று இபிஎஸ்-ஓபிஎஸ். இரு அணிகளைச் சேர்ந்தவர்களும் ஒன்று சேர்ந்து இந்த இடைத்தேர்தலை சந்திப்பார்களா? அல்லது நீதிமன்ற தீர்ப்பு சாதகமாக வருபவர் சார்பில் அந்தத் தொகுதி வேட்பாளர் நிறுத்தப்படுவாரா? அல்லது இவர்கள் இருவரது மோதலால் அதிமுக சின்னமே முடக்கப்படுமா? போன்ற பல்வேறு கேள்விகள் அரசியல் நோக்கர்களால் அடுத்த கேள்வியாக முன்வைக்கப்படுகிறது.

அதேபோல், மூன்றாவதாக கடந்த சட்டமன்ற பொதுத்தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாமக இருந்தது. பாமக ஆதரவு இருந்ததால் இந்தத் தொகுதியில் கொங்கு வெள்ளாள கவுண்டர்கள் மட்டுமின்றி, வன்னியர்கள் ஆதரவால் கூட்டணியில் இடம் பெற்றிருந்த தமிழ்மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் யுவராஜா இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு ஒன்பதாயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் இரண்டாம் இடம் பிடித்து தோல்லி கண்டார். ஆனால், தற்போது அதிமுக கூட்டணியில் பாமக இல்லை. இந்த நிலையில் அதிமுக என்ன செய்யப்போகிறது என்ற கேள்வி மூன்றாவதாக எழுந்துள்ளது.

நான்காவதாக, ‘கொங்கு மண்டலத்தில் நாங்களே கிங்’ என்று மார்தட்டிக்கொள்ளும் பாஜக இந்த இடைத் தேர்தலில் தனித்துப் போட்டியிடுமா என்கிற கேள்வியும் எழுந்துள்ளது. காரணம், இந்தத் தேர்தலில் தாங்கள் வாங்கப்போகும் வாக்கு சதவிகிதத்தைக் கொண்டுதான் அடுத்து நடைபெறப்போகும் நாடாளுமன்றத் தேர்தலில் கூட்டணிக் கட்சிகளிடம் அதிக தொகுதிகளைக் கேட்டுப் பெற இது பெரிதும் உதவும் என்ற காரணத்தால் இந்த இடைத் தேர்தலில் பாஜக தனித்துப் போட்டியிடுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

ஆக மொத்தம், இந்த இடைத்தேர்தலில் திமுக-காங்கிரஸ் கூட்டணி, அதிமுக உட்கட்சி பிரச்னை, பாஜக அரசியல் நிலைப்பாடு, இதர கட்சிகளின் கூட்டணி ஆதரவு முடிவு போன்ற அனைத்து விஷயங்களும் நடுத்தெருவுக்கு வரப்போவது உறுதி. இந்த ஒரு இடைத்தேர்தல் தமிழ்நாட்டின் பலவித அரசியல் கேள்விகளுக்கும் பதில் சொல்லும் என்று அனைவராலும் எதிர்பார்க்கப்படுகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com