எதிர்க்கட்சி கூட்டணியில் பிளவு இல்லை: அஜித் பவார்!
மகாராஷ்டிர மாநிலத்தில் தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் மற்றும் சிவசேனை (உத்தவ் பிரிவு) கட்சிகளின் கூட்டணியில் பிளவும் ஏதும் இல்லை என்று தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான அஜித் பவார் தெரிவித்துள்ளார்.
புனே மாவட்டம், பாரமதியில் செய்தியாளர்களிடம் பேசுகையில் அஜித் பவார் கூறியதாவது: மகா விகாஸ் அகாதி கூட்டணியில் எந்த பிளவும் இல்லை. மும்பையில், தலைவர் பதவியிலிருந்து விலகும் முடிவை வாபஸ் பெறுவதாக சரத் பவார் அறிவித்த செய்தியாளர்கள் கூட்டத்தில் நான் பங்கேற்காதது ஒரு பெரிய விஷயமே அல்ல. அதை பெரிதுபடுத்த வேண்டாம்.
மகா விகாஸ் அகாதி கூட்டணியில் தேசியவாத காங்கிரஸ் நீடிக்கிறது. இந்த கூட்டணியில் பிளவு ஏதும் இல்லை. இக்கூட்டணியை வலுப்படுத்தும் முயற்சியில் நாங்கள் ஈடுபட்டுள்ளோம். பவார் தனது முடிவை வாபஸ் பெற்றது கூட்டணியில் உள்ள அனைவருக்கும் உற்சாகத்தை அளித்துள்ளது.
மகாராஷ்டிர விகாஸ் அகாதி கூட்டணியில் சிவசேனை (உத்தவ் பிரிவு), தேசியவாத காங்கிரஸ் கட்சி மற்றும் காங்கிரஸ் ஆகிய மூன்றும் இடம்பெற்றுள்ளது.
தேசியவாத காங்கிரஸ் கூட்டணியிலிருந்து விலகப் போவதாகவும், நான் பா.ஜ.க. கூட்டணியில் சேரப்போவதாகவும் ஊடகங்களும், அரசியல் எதிரிகளும் செய்திகளை (வதந்திகளை) பரப்பிவிட்டனர். இதனால் திடீர் குழப்பம் ஏற்பட்டது.
தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் பதவியிலிருந்து விலகுவதாக சரத் பவார் அறிவித்த நிலையில் அவரது முடிவை ஆதரித்தவர் அஜித் பவார். ஆனால், சரத் பவார், தனது முடிவை வாபஸ் பெறுவதாக அறிவித்தபோது அந்த நிகழ்வில் அஜித்பவார் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இது குறித்து அஜித்பவார் கருத்து தெரிவிக்கையில், சரத் பவார் தனது முடிவை வாபஸ் பெறுவதாக அறிவித்த நிகழ்வில் கட்சியின் முக்கிய தலைவர்களான ஜெயந்த் படேல், பிரஃபுல் படேல் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர். மேடையில் ஐந்து நாற்காலிகள் மட்டுமே போடப்பட்டிருந்ததால் என்போன்றவர்களை வரவேண்டாம் என பவார் கூறிவிட்டார். அவர் எடுத்த முடிவினால்தான் நான் அதில் இடம்பெறவில்லை என்று அஜித் பவார் விளக்கினார்.
கடந்த சனிக்கிழமை சரத் பவார் பேசுகையில், அஜித் பவார் குறித்து சில குழப்பங்கள் உள்ளன.
அவர் பா.ஜ.க.வில் சேர உள்ளதாக பேச்சுகள் அடிபட்டன. ஆனால், அப்படி ஏதும் நடக்கவில்லை என்றார்.
கடந்த மே 2 ஆம் தேதி தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவியிலிருந்து விலகுவதாக சரத் பவார் அறிவித்ததும், கட்சியின் மூத்த தலைவர்களும் தொண்டர்கள் அதிர்ச்சி அடைந்தனர். பெரும்பாலான தலைவர்களும் தொண்டர்களும் சரத் பவார் தனது முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று வற்புறுத்தி கேட்டுக் கொண்டனர். ஆனால், அப்போது அஜித் பவார் ஒருவர் மட்டும், சரத் பவார் முடிவை வரவேற்றார். எனினும் மூத்த தலைவர்கள் மற்றும் தொண்டர்களின் நிர்பந்தம், வேண்டுகோளை ஏற்று சரத் பவார் இறுதியில் தமது முடிவை மாற்றிக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.