இரட்டை வேடம் போடும் மூன்று கட்சிகள்!

இரட்டை வேடம் போடும் மூன்று கட்சிகள்!

உத்தரப்பிரதேச மாநிலத்தில் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கான இடஒதுக்கீடு இல்லாமலே நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை நடத்துமாறு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

ஆனால், இந்த உத்தரவை புறக்கணிக்கும் வகையில், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இடஒதுக்கீட்டின்படிதான் நடைபெறும் என்று முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறியதுடன், இந்த இடஒதுக்கீட்டை முடிவு செய்ய ஐந்து உறுப்பினர்கள் கொண்ட ஒரு குழுவையும் அமைத்துள்ளார்.

மாநிலத்தை ஆளும் பா.ஜ.க., தலித் மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு எதிராக செயல்பட்டு வருகிறது என்று குற்றஞ்சாட்டியுள்ள சமாஜவாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், சட்டப்பேரவை சிறப்புக் கூட்டத்தை கூட்டி இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கான இடஒதுக்கீடு பற்றி விவாதிக்க முன்வரவேண்டும் என்று முன்னதாக கோரிக்கை விடுத்திருந்தார்.

இதனிடையே பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி, இடஒதுக்கீடு விவகாரத்தில் பா.ஜ.க., காங்கிரஸ் மற்றும் சமாஜவாதி கட்சிகள் இரட்டை வேடம் போடுவதாக குற்றஞ்சாட்டியுள்ளார். எனவே தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பு மக்கள் இந்த அரசியல் கட்சிகளிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

காங்கிரஸ் மத்தியில் ஆட்சியிலிருந்தபோது பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான மண்டல் கமிஷன் பரிந்துரைகளை செயல்படுத்த அனுமதிக்கவில்லை. மேலும் எஸ்.சி., எஸ்.டி. இடஒதுக்கீட்டையும் நீர்த்துப்போக செய்துவிட்டனர். இப்போது பா.ஜ.க.வும் காங்கிரஸின் வழியை பின்பற்ற விரும்புவதாகத் தெரிகிறது. இது மிகவும் கவலைக்குரியதாகும்.

சமாஜவாதி கட்சி ஆட்சியிலிருந்தபோது பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு முழு உரிமை கிடைக்கவில்லை. பதவி உயர்வுகளில் எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கான இடஒதுக்கீடும் கைவிடப்பட்டது. இது தொடர்பான மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேறாமல், மசோதாவை கிழித்தெறிந்தவர்கள் சமாஜவாதி கட்சியினர்தான்.

எனவே பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் இடஒதுக்கீட்டுக்கு எதுவும் செய்யாமல், ஆனால், அவர்களின் பாதுகாவலன் நாங்கள்தான் என இரட்டை வேடம் போடும் பா.ஜ.க., காங்கிரஸ் மற்றும் சமாஜவாதி கட்சிகளிடம் அந்த சமூகத்தினர் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்கிறார் மாயாவதி.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com