போக்குவரத்துத்துறை ஊழியர் நியமன சர்ச்சை - மீண்டும் விசாரிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு!
போக்குவரத்துத் துறையில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி மோசடி செய்ததாக அமலாக்கத் துறை தொடர்ந்த மேல் முறையீட்டு மனு வழக்கில், உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்திருக்கிறது. இது தொடர்பாக தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜி மீது ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு தொடர்ந்து, தொடக்கம் முதல் விசாரணை நடத்தவேண்டும் என்று தமிழக காவல்துறைக்கு உத்திரவிடப்பட்டிருக்கிறது.
2014ல் தமிழக அரசின் போக்குவரத்துத் துறையில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி லஞ்சம் வாங்கியதாக அப்போது போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்தவரும் தற்போது தி.மு.க அமைச்சரவையில் மின்வாரியத்துறை அமைச்சராக உள்ள செந்தில் பாலாஜி உள்ளிட்டோர் மீது வழக்கு தொடரப்பட்டது. வாங்கிய லஞ்ச பணத்தை திருப்பி தந்துவிட்டதால், வழக்கை வாபஸ் பெற்றுக்கொள்வதாக வந்த மனுவைத் தொடர்ந்து வழக்கை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுக்களின் மீது விசாரணை நடத்தப்பட்டது. இதில் ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்ய அனைத்து முகாந்திரங்களும் இருந்தும் ஏன் தமிழக அரசு வழக்கு பதிவு செய்யவில்லை என்று நீதிமன்றம் கேள்வியெழுப்பியது. அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான வழக்கை ரத்து செய்த சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவு செல்லாது என்றும், இது குறித்த வழக்கை ஆரம்பம் தொடங்கி நடத்த வேண்டும் என்று தீர்ப்பளித்திருக்கிறது.
இந்நிலையில் தமிழக அமைச்சராக இருப்பவர் மீது காவல்துறை விசாரணை எந்தளவுக்கு நேர்மையாக நடைபெறும் என்பது கேள்விக்குறியாக உள்ளது. ஆகவே, அமைச்சர் செந்தில் பாலாஜியை அமைச்சர் பதவியிலிருந்து நீக்க வேண்டும் என்று தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை அறிக்கை வெளியிட்டுள்ளார். அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான ஊழல் தடுப்பு விசாரணை, நேர்மையாக நடைபெறுவதை உறுதி செய்ய வேண்டும் என்றும், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை கேட்டுக் கொள்வதாக அறிக்கையில் தெரிவித்திருக்கிறார்.
சமீபத்தில்தான் தமிழகத்தில் அமைச்சரவை மாற்றம் நடந்தது. பால்வளத்துறை அமைச்சராக இருந்த ஆவடி நாசர் நீக்கப்பட்டு, நான்கு அமைச்சர்களின் துறைகள் மாற்றியமைக்கப்பட்டன. பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜனிடம் இருந்த நிதித்துறை பறிக்கப்பட்டு, தகவல் தொழில்நுட்பத்துறை தரப்பட்டதற்கான காரணங்கள் பற்றிய விவாதங்கள் இன்னும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன. இந்நிலையில் இன்னொரு அமைச்சர் மாற்றத்திற்கு வாய்ப்பு உள்ளதா? ஒரிரு நாளில் தெரிந்துவிடும்.