உமாபாரதி பல்டி!

உமாபாரதி
உமாபாரதி

மத்தியப் பிரதேசத்தில் முதல்வர் சிவராஜ் சிங் செளஹான் தலைமையில் பா.ஜ.க. ஆட்சி நடக்கிறது. அடுத்த ஆண்டு அங்கு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது.

ம.பி.யில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினரான லோதி சமூகத்தினர் முக்கிய வாக்கு வங்கியாக கருதப்படுகின்றனர்.

மாநிலத்தில் தேர்தலுக்கு முன்பு கட்சித் தலைமையில் மாற்றம் வேண்டும் என்ற கோரிக்கை பலமாக எழுந்துள்ளது.

இந்த சூழ்நிலையில் பா.ஜ.க. தலைவர்களில் ஒருவரும், ம.பி. முன்னாள் முதல்வரும், லோதி சமூகத்தைச் சேர்ந்தவருமான உமாபாரதி “லோதி சமூகத்தினரான நீங்கள் வரும் தேர்தலில் யாருக்கு வேண்டுமானாலும் வாக்களிக்கலாம்” என பேசியிருப்பது பா.ஜ.க.வில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்தில் இளைஞர்களும், இளைஞிநிகளும் பெரும் அளவில் கலந்து கொண்ட கூட்டத்தில் உமாபாரதி பேசியதாக கூறப்படும் கருத்துகள் விடியோவாக பதிவு செய்யப்பட்டு வெளியாகியுள்ளது.

அந்தப் பதிவில், “நான் கட்சிக் கூட்டங்களில் பேச நிச்சயம் வருவேன். உங்களிடம் வாக்கு கேட்பேன். ஆனால், லோதி மக்களாகிய நீங்கள் பா.ஜ.க.வுக்கு வாக்களியுங்கள் என்று கேட்க மாட்டேன். நீங்கள் உங்களது விருப்பப்படி எந்த கட்சிக்கு வேண்டுமானாலும் வாக்களிக்கலாம். நான் பா.ஜ.க.வின் உண்மையான தொண்டன். உங்களில் சிலர் பா.ஜ.க. தொண்டராக இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறேன். ஆனாலும், நீங்கள் உங்கள் சுழ்நிலையை உணர்ந்து செயல்பட வேண்டும். உங்கள் நலனையும் எண்ணிப் பார்க்க வேண்டும். யாருக்கு வாக்களிப்பது என்பதை நீங்கள்தான் முடிவு செய்ய வேண்டும். நாம் எல்லோரும் அன்பு என்னும் பிணைப்பால் ஒன்றாக இருக்கிறோம். ஆனால், அரசியலில் இதைச் செய்யுங்கள் என்று நான் ஒருபோதும் நமது சமூகத்தினரை கட்டாயப்படுத்த மாட்டேன்" என்று கூறியுள்ளார். அவரின் இந்த பேச்சுதான் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதனிடையே உமாபாரதியின் பேச்சை காங்கிரஸ் வரவேற்றுள்ளது. பா.ஜ.க.வுக்கு தான் வாக்கு போட வேண்டும் என்று கேட்க மாட்டேன் என கூறியுள்ள உமா பாரதி, காங்கிரஸுக்கு ஆதரவாக பிரசாரம் செய்ய வந்தால் வரவேற்போம் என்று அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் பங்கஜ் சதுர்வேதி தெரிவித்துள்ளார். ஆனால், இதற்கு உமாபாரதி இதுவரை பதிலளிக்கவில்லை.

குறிப்பு :

உமாபாரதி, பா.ஜ.க.வில் நீடித்தாலும் கட்சி அவருக்கு முக்கியத்துவம் தராமல் ஒதுக்கிவைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

அடிக்கடி எதையாவது பேசி சர்ச்சையை ஏற்படுத்துவது உமாபாரதியின் வழக்கம். கடந்த ஆண்டு, இதர பிற்படுத்தப்பட்ட சமூகத்தினர் அவரை சந்தித்து மக்கள் தொகை கணக்கெடுப்பு, தனியார் துறையில் சாதி ரீதியிலான இடஒதுக்கீட்டை வலியுறுத்தி கோரிக்கை வைத்தனர்.

அப்போது அவர்களிடம் உமாபாரதி, “அதிகாரிகள் ஒன்றுக்கும் லாயக்கு இல்லாதவர்கள். அவர்கள் எங்கள் செருப்பைத் தூக்கவே இருக்கிறார்கள். அவர்கள் எங்களை கட்டுப்படுத்தவில்லை. நாங்கள்தான் அவர்களை கட்டுக்குள் வைத்திருக்கிறோம்”. என்று பேசி சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தார். பின்னர் பலத்த கண்டனக்குரல் எழுந்ததை தொடர்ந்து மன்னிப்புக் கேட்டுக்கொண்டார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com