ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் பெயர் மாறுகிறதா?

ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் பெயர் மாறுகிறதா?
Editor 1

2024 மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க.வை தோற்கடிக்கும் முயற்சியில் எதிர்க்கட்சிகள் ஒன்று சேர்ந்துள்ள நிலையில் அந்த அணிக்கு ஐக்கிய முற்போக்கு கூட்டணி என்ற பெயர் இருக்காது. புதிய பெயர் சூட்டப்படும் என்று நம்பகமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தற்போதுள்ள எதிர்க்கட்சிகள் கூட்டணியில் காங்கிரஸ், திரிணமூல் காங்கிஸ். ஆம் ஆத்மி உள்ளிட்ட 24 கட்சிகள் இடம்பெற்றுள்ளன. இந்த புதிய கூட்டணியை ஐக்கிய முற்போக்கு கூட்டணி என்று அழைப்பதற்கு பதிலாக வேறு ஒரு புதிய பெயர் சூட்ட தீர்மானிக்கப்பட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது. செவ்வாய்க்கிழமை நடைபெறும் எதிர்க்கட்சிகள் ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு புதிய பெயர் அறிவிக்கப்படும் எனத் தெரிகிறது.

சோனியா தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி 2004 ஆம் ஆண்டு முதல் 2014 ஆம் ஆண்டுவரை ஏறக்குறைய 10 ஆண்டுகள் மத்தியில் ஆட்சியில் இருந்தது.பெங்களூருவில் செவ்வாய்க்கிழமை நடைபெறும் எதிர்க்கட்சிகள் ஆலோசனைக் கூட்டத்தில் பொதுவான செயல்திட்டம், மாநிலங்கள் அடிப்படையில் தொகுதி உடன்பாடு செய்துகொள்வது குறித்து விவாதிக்கப்படும் எனத் தெரிகிறது.

மக்களவைத் தேர்தலை கருத்தில் கொண்டு பொதுவான செயல்திட்டத்தை தயாரிக்க ஒரு துணைக்குழு ஏற்படுத்தப்படும். மேலும் எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து கூட்டாக தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடவும், பேரணி நடத்தவும், மாநாடுகள் நடத்தவும் அதற்கான அட்டவணை தயாரிக்க ஒரு குழுவும் ஏற்படுத்தவும் திட்டமிட்டுள்ளதாக அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் விவகாரம், தேர்தல் ஆணையத்தில் சீர்திருத்தங்கள் கொண்டுவருவது குறித்து ஆலோசனை தெரிவிப்பது குறித்தும் இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளது. மேலும் எதிர்க்கட்சி கூட்டணிகளுக்கு என தனிஅலுவலகம் அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

பா.ஜ.க.வுக்கு எதிரான அரசியல் கட்சிகள் தங்களுக்கு இடையே உள்ள கருத்து வேற்றுமைகளை மறந்து ஒன்றுபட்டு செயல்படுவது குறித்தும் இந்த கூட்டத்தில் விவாதிக்கபட உள்ளது.

பா.ஜ.க.வுக்கு எதிராக எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கும் முயற்சியை பிகார் முதல்வரும், ஐக்கிய ஜனதாதளத் தலைவருமான நிதிஷ்குமார் முன்முயற்சி மேற்கொண்டார்.

இதன் பலனாக பிகார் மாநிலம் பாட்னாவில் நிதிஷ்குமார் தலைமையில் நடைபெற்ற எதிர்க்கட்சிகள் கூட்டணியின் முதல் ஆலோசனைக் கூட்டத்தில் 16 அரசியல் கட்சிகள் பங்கேற்றன. பெங்களூரில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே தலைமையில் நடைபெறுவது இரண்டாவது ஆலோசனைக் கூட்டம் என்பது குறிப்பிடத்தக்கது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com