நிதிஷ்குமார் கட்சியிலிருந்து விலகி புதிய கட்சியை தொடங்கினார் உபேந்திர குஷ்வாஹா!
பிகாரில் ஆளும் ஐக்கிய ஜனதாதளம் கட்சித் தலைவர்களில் ஒருவரும் அக்கட்சியின் நாடாளுமன்ற கட்சித் தலைவருமான உபேந்திர குஷ்வாஹா அக்கட்சியிலிருந்து ராஜிநாமா செய்துள்ளார். ராஷ்ட்ரீய லோக் ஜனதாளம் என்ற புதிய அரசியல்கட்சியை தொடங்கியுள்ளதாக அறிவித்துள்ளார். 2024 ஆம் ஆண்டு பொதுத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் இது பிகார் முதல்வர் நிதிஷ்குமாருக்கு பின்னடைவாக கருதப்படுகிறது.
பிஹார் மாநிலத்தைச் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சரான உபேந்திர குஷ்வாஹா, கடந்த 2021-ம் ஆண்டு மார்ச் மாதம் தனது ராஷ்ட்ரிய லோக் சமதா கட்சியை ஐக்கிய ஜனதா தளத்துடன் இணைத்தார்.
இந்த நிலையில் பா.ஜ.க.வுடன் கூட்டணியை முறித்துக் கொண்டு லாலுவின் ராஷ்ட்ரிய ஜனதா தளத்துடன் கூட்டணி அமைத்த நிதிஷ் குமார், அக்கட்சியின் தலைவரான தேஜஸ்வி யாதவை பிகாரின் வருங்கால தலைவர் என்றும், வருங்கால முதல்வர் என்றும் கூறினார்.
இதனால் அதிருப்தி அடைந்த குஷ்வாஹா, நிதிஷ்குமாரை வெளிப்படையாக விமர்சிக்க தொடங்கினார். ஐக்கிய ஜனதாதளம் கட்சி மெல்லமெல்ல பலமிழந்து வருவதாகவும் குற்றஞ்சாட்டினார். நிதிஷ், கட்சியை பலப்படுத்தும் நடவடிக்கையில் இறங்காமல் தேஜஸ்விக்கு ஆதரவாக இருப்பதிலேயே கவனம் செலுத்துவதாகவும் புகார் தெரிவித்தார். (பிகாரில் தேஜஸ்வி முதல்வரானால் மீண்டும் காட்சி ஆட்சி தொடங்கிவிடும் என்பது குஷ்வாஹாவின் கருத்தாகும்.)
மேலும் கடந்த சில மாதங்களாகவே குஷ்வாஹா, தாம் கட்சியில் ஓரங்கப்பட்டதாக கருதிவந்தார். கடந்த 2021 ஆம் ஆண்டு மார்ச் மாதம் நிதிஷ்குமார் அளித்த சில உறுதிமொழிகளை அடுத்து ராஷ்ட்ரீய லோக் சமதா கட்சியை கலைத்துவிட்டு குஷ்வாஹா, நிதிஷ்குமாருடன் மீண்டும் இணைந்ததாகவும், ஆனால், நிதிஷ், அவரை ஏமாற்றிவிட்டு கட்சியில் ஓரங்கட்டி விட்டதாகவும் குஷ்வாஹாவுக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதாவது குஷ்வாஹாவுக்கு துணை முதல்வர் பதவி கொடுக்காததுதான் நிதிஷ்குமாரை அவர் எதிர்க்க துணிந்ததற்கு காரணம் என்றும் சொல்லப்படுகிறது. அவர் எப்போது வேண்டுமானாலும் கட்சியை விட்டு வெளியேறக்கூடும் என்றும் பேசப்பட்டு வந்தது.
இந்நிலையில், ஐக்கிய ஜனதா தளத்தில் இருந்து விலகுவதாக இன்று அறிவித்த உபேந்திர குஷ்வாஹா, ராஷ்ட்ரிய லோக் ஜனதா தளம் என்ற பெயரில் புதிய கட்சி தொடங்கப் பட்டுள்ளதாக அறிவித்துள்ளார். அவரது இந்த அறிவிப்பு பிஹார் அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
பிகாரில் லாலுவின் யாதவர்கள் சமூகத்தினருக்கு அடுத்த படியாக பெரும்பான்மையாக உள்ளது கோரி சமூகத்தினர்.
பிகாரில் கோரி சமூகத்தினடையே அதிக செல்வாக்கு உள்ளதால், அவரை கூட்டணிக்குள் இழுத்து நிதிஷ்குமாரை வீழ்த்திவிடலாம் என்று பா.ஜ.க.வும் கணக்கு போடுவதாகத் தெரிகிறது.