பா.ஜ.க.வை தோற்கடிக்க வேண்டுமா? இவர் சொல்வதைக் கேளுங்கள்!

பா.ஜ.க.வை தோற்கடிக்க வேண்டுமா? இவர் சொல்வதைக் கேளுங்கள்!

2024 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் பா.ஜ.க.வை வீழ்த்த வேண்டுமானால், எதிர்க்கட்சிகள் ஒன்று சேர வேண்டும். ஒவ்வொரு அரசியல் கட்சிக்கும் ஒரு கொள்கை நோக்கம் உள்ளதால் எதிர்கட்சிகள் ஒன்றிணைவது சாத்தியமா என்பதை முதலில் பார்க்க வேண்டும். எதிர்க்கட்சிகள் வெறுமனே ஒன்று சேர்வதால் மட்டும் எதையும் சாதிக்க முடியாது என்கிறார் பிரபல தேர்தல் ஆலோசரும், தேர்தல் உத்திகளை வகுப்பதில் வல்லவருமான பிரசாந்த் கிஷோர்.

இது தொடர்பாக என்.டி.டி.வி.க்கு அளித்துள்ள பேட்டியில் பிரசாந்த் கிஷோர் கூறுகையில், “பா.ஜ.க.வை வீழ்த்த எதிர்க்கட்சிகள் ஒன்று சேர்வதால் மட்டும் எந்த பலனும் கிடைத்துவிடாது. அது ஒரு முகம்தான். பா.ஜ.க.வுக்கு உண்மையிலேயே சவாலாக இருக்க வேண்டும் என்றால் பா.ஜ.க.வின் பலம் என்ன? பலவீனம் என்ன? என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும்.

பா.ஜ.க. ஹிந்துத்துவா, தேசியம், மக்கள் நலன் ஆகிய மூன்றையும் தூண்களாக நிறுத்தி அரசியல் செய்து வருகிறது. இவற்றில் குறைந்தபட்சம் இரண்டு விஷயங்களை தைரியமாக எதிர்கொள்வதற்கான உத்திகளை வகுக்காமல் பா.ஜ.க.வுக்கு சவால் விடுக்க முடியாது.

பா.ஜ.க.வின் ஹிந்துத்துவா கொள்கையை எதிர்த்து போராட வேண்டுமானால் அதற்கு இணையான ஒரு கொள்கையை முன்வைத்து எதிர்க்கட்சிகள் போராட வேண்டும். காந்தியவாதி, அம்பேத்கர்வாதி, சோஷலிஸ்ட், கம்யூனிஸ்டு ஆகியவை முக்கியமானவைதான். ஆனால், அந்த கொள்கையின் அடிப்படையில் கண்ணை மூடிக் கொண்டு செயல்படக்கூடாது.

எதிர்க்கட்சித் தலைவர்கள் அல்லது எதிர்க்கட்சியினர் எப்போது ஒன்றிணைவார்கள். யார் யாருடன் பகல் விருந்து சாப்பிடுகிறார்கள். யார் யாருடன் தேநீர் விருந்து நடத்துகிறார்கள். எப்போது எதிர்க்கட்சி கூட்டணி குறித்த அறிவிப்பு வரும் என்று பத்திரிகையாளர்களும் ஊடகத்தினரும் காத்திருக்கின்றனர்.

ஆனால், நான் சொல்வது என்னவென்றால். அனைத்து எதிர்க்கட்சிகளும் ஓரணியில் திரண்டால் மட்டும் போதாது. அனைவரும் சேர்ந்து ஒரேவிதமான கொள்கையை உருவாக்க வேண்டும். இதைத் தவிர வேற வழியில்லை. அப்படி ஒரேவிதமான கொள்கை உருவாக்கப்படாத நிலையில் பா.ஜ.க.வை வீழ்த்த முடியாது” என்றார்.

மகாத்மா காந்தியின் கொள்கைதான் சிறந்தது என்கிறார் பிரசாந்த் கிஷோர். அவரது கொள்கையை உயிர்ப்பிக்கும் விதமாகத்தான் அவர் பிகாரில் ஜன சுராஜ் யாத்திரை நடத்தினார். காந்திய தத்துவத்தை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டு மாநிலத்தில் ஒருபுதிய அரசியல் நடைமுறையை உருவாக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தி வருகிறார்.

காங்கிரஸ் கட்சியை புதுப்பிக்கும் முயற்சியில் உங்களுக்கும் காந்தி குடும்பத்தினருக்கும் ஒத்துவரவில்லையே ஏன் என்று கேட்டதற்கு, “நான் காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்த வேண்டும் என்று நினைத்தேன், ஆனால், அவர்களது எண்ணம் எல்லாம் தேர்தலில் ஜெயிப்பது மட்டுமே. இதுதான் எங்களுக்கு ஏற்பட்ட கருத்து வேறுபாடு.

ராகுல் காந்தி, நாடு முழுவதும் பாரத் ஜடோ யாத்திரை (காங்கிரஸ் ஒற்றுமை யாத்திரை) நடத்தினார். ஆனால், அதனால் ஏற்பட்ட தாக்கம் என்ன என்பதுதான் முக்கியம். யாத்திரை என்பது நடை பயணம் மட்டுமல்ல, 6 மாத நடைபயணத்தில் பாராட்டுகளும் இருந்தன. விமர்சனங்களும் இருந்தன. 6 மாத நடைபயணத்தில் என்ன மாற்றம் என்பது தெரிந்திருக்கும். அவர்களின் நோக்கம் தேர்தல் வெற்றிதான். நான் 6 மாதம் யாத்திரை சென்றபோதும் என்னால் நான்கு மாவட்டங்களுக்கு மட்டுமே செல்ல முடிந்த்து. என்னை பொருத்தவரை யாத்திரை என்பது இயக்கம் அல்ல, செல்லும் இடங்களையும் மக்களையும் புரிந்துகொள்வதாகும் என்றார் பிரசாந்த் கிஷோர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com