தெலங்கானாவில் பா.ஜ.க. தலைமைக்கு எதிராக போர்க்கொடி!

தெலங்கானாவில் பா.ஜ.க. தலைமைக்கு எதிராக போர்க்கொடி!

கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தல் தோல்வியிலிருந்து பா.ஜ.க. இன்னும் மீண்டுவராத நிலையில் தெலங்கானாவில் பா.ஜ.க. தலைமைக்கு எதிராக அக்கட்சியைச் சேர்ந்த சிலர் போர்க்கொடி எழுப்பியுள்ளனர்.

தெலங்கானாவில் இன்னும் 6 மாத்த்திற்குள் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக மாநில பா.ஜ.க.வில் உட்கட்சிபூசல் எழுந்துள்ளது. கட்சியின் மூத்த தலைவர்கள் சிலர், மாநிலத் தலைவர் பண்டி சஞ்சய் தலைமைக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தியுள்ளனர். அவரை நீக்கிவிட்டு புதிதாக ஒருவரை தலைவராக நியமிக்க வேண்டும் என்று கோரி வருகின்றனர். இது தொட்பாக அவர்கள் வெளிப்படையாக அறிக்கை வெளியிடவில்லை என்றாலும் கட்சியின் தேசிய தலைமையிடம் சஞ்சயை மாற்ற வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர்.

இது தொடர்பாக பெயர் குறிப்பிட விரும்பாத மூத்த தலைவர் ஒருவர் கூறுகையில், ஏறக்குறைய ஒரு டஜனுக்கும் மேலான தலைவர்கள் சஞ்சயை தலைவர் பதவியிலிருந்து நீக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருவதுடன் தாங்கள்தான் முதல்வர் வேட்பாளர் என்பதுபோல் பேசி வருகின்றனர்.

முன்னாள் எம்.பி. ஜி.விவேக், முனுகோடி முன்னாள் எம்.எல்.ஏ. கோமட்டிரெட்டி ராஜகோபால் ரெட்டி, முன்னாள் அமைச்சரும் தற்போது பா.ஜ.க. தேசிய துணைத் தலைவராக இருக்கும் டி.கே.அருணா மற்றும் ஹுசூராபாத் எம்.எல்.ஏ. ஈடால ராஜேந்தர் ஆகியோர் அவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள். மத்திய அமைச்சர் கிஷண் ரெட்டி மற்றும் மாநிலங்களவை உறுப்பினர் டி.கே.லெட்சுமண் ஆகிய இருவருக்கும்கூட முதல்வராக வேண்டும் என்ற விருப்பம் உள்ளது. இவர்கள் எல்லோருமே கட்சி விசுவாசிகள்.

இவர்களில் ராஜேந்தர், கடந்த சில நாட்களாக சஞ்சய்க்கு எதிராக காய் நகர்த்தி வருகிறார். ஹுசூராபாத் எம்.எல்.ஏ.வான அவர், கடந்த திங்கள்கிழமை தில்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து மாநிலத்தின் அரசியல் நிலவரம் பற்றி பேசியதுடன், பா.ஜ.க. தலைவரை மாற்ற வேண்டும் என்றும் வலியுறுத்தி கேட்டுக் கொண்டுள்ளார்.

கடந்த ஆண்டு, வேறு அரசியல்கட்சியைச் சேர்ந்த சிலரை பா.ஜ.க.வுக்கும் இழுக்கும் பணி ராஜேந்திரிடம் விடப்பட்டது. ஆனால், அதை அவர் சரிவர செய்யவில்லை. தனது தவறை ஒப்புக்கொள்ளாமல் சஞ்சய்மீது புகார் கூறிவருகிறார். பா.ஜ.க.வில் சேர சிலரை அழைத்து வந்த போதிலும் அவர்களின் கோரிக்கையை சஞ்ய் ஏற்கவில்லை என்றும் கூறிவருகிறார்.

கடந்த மாதம் பாரத் ராஷ்டிர சமிதி கட்சியிலிருந்து முன்னாள் எம்.பி. ஸ்ரீனிவாச ரெட்டி மற்றும் முன்னாள் மாநில அமைச்சர் ஜுபள்ளி கிருஷ்ணராவ் இருவரும் ராஜிநாமா செய்தனர். அவர்கள் இருவரையும் கட்சிக்குள் இழக்க ராஜேந்தர் பேச்சு நடத்தினார்.

கம்மம் மாவட்டத்தில் உள்ள 10 தொகுதிகளுக்கும் வேட்பாளர்கள் தேர்வு செய்ய தமக்கு அதிகாரம் அளிக்க வேண்டும் என்று ஸ்ரீனிவாச ரெட்டி நிபந்தனை விதித்தார். இதேபோல ஜுபள்ளி தமது ஆதரவாளர்களுக்கு தேர்தல் டிக்கெட் தரப்பட வேண்டும் என்றார். தேர்தல் வரும் முன்னரே இது குறித்து அவர்களுக்கு மாநில பா.ஜ.க. தலைவர் சஞ்சய் எவ்வாறு உறுதியளிக்க முடியும்?. தேர்தல் வரும்போது அந்த அந்த தொகுதிகளில் கட்சியின் பலம், வெற்றிவாய்ப்பு இவற்றை வைத்துத்தானே வேட்பாளர் தேர்வு இருக்க முடியும்?.

மேலும் கோமட்டிரெட்டி ராஜகோபால் ரெட்டி, விவேக் மற்றும் முன்னாள் எம்.பி. கொண்ட விஸ்வேஸ்வர் ரெட்டி போன்றவர்கள் சஞ்சய் ஏற்பாடு செய்யும் கட்சி நிகழ்ச்சிகளில், பேரணிகளில் பங்கேற்பதில் ஆர்வம் காட்டவில்லை என்கிறார் அவர்.

மேலும் சஞ்சய்க்கு பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அமித்ஷாவின் ஆதரவு உள்ளது. இருவரும் ஹைதராபாத் வரும்போது அவரது செயல்பாடுகளை பாராட்டி பேசியுள்ளனர்.

இந்த நிலையில் பா.ஜ.க.வின் தேசிய செயலரும் தெலங்கான மாநில பொறுப்பாளருமான தருண் சுக், தெலங்கானாவில் மாநிலத் தலைவர் சஞ்சய் தலைமையில்தான் தேர்தலை சந்திக்கும். அவரது தலைமைக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை என்று கூறியுள்ளார்.

ஆனாலும் மாநிலத்தில் இதர தலைவர்களின் ஒத்துழைப்பு இன்றி சஞ்சய் எந்த காரியத்தையும் செய்ய முடியாது என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள். எந்த ஒரு விஷயத்திலும் தனித்து முடிவெடுக்காமல் கட்சியின் இதர தலைவர்களுடன் கலந்து ஆலோசித்து முடிவெடுக்க வேண்டும். கட்சியின் தேசியத் தலைமையின் ஆதரவு தமக்கு இருக்கிறது என்ற போக்கில் சஞ்சய் செயல்படக்கூடாது என்று அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

இதனிடையே, சஞ்சய் செய்தியாளர்களிடம் பேசுகையில், “கட்சியில் தலைவர்களுக்குள் எந்த கருத்து வேறுபாடும் இல்லை என்று கூறியுள்ளார். சஞ்சய் இப்படிக்கூறினாலும் கட்சிக்குள் புகைச்சல் இல்லாமல் இல்லை. உட்கட்சி பூசல் தணிந்துவிடுமா அல்லது வெடிக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com