"அம்மா இல்லையென்றால் பா.ம.க. கட்சியே வெளியே தெரிந்திருக்காது" - அன்புமணிக்கு அதிரடியாகப் பதிலளித்த ஜெயக்குமார்!

அன்புமணி ராமதாஸ்  - ஜெயக்குமார்
அன்புமணி ராமதாஸ் - ஜெயக்குமார்

பா.ம.க கூட்டத்தில் அ.தி.மு.க கட்சி விவகாரம் பற்றி பேசி வம்பை விலைக்கு வாங்கியிருக்கிறார், அன்புமணி. புத்தாண்டை முன்னிட்டு பாண்டிச்சேரியில் நடைபெற்ற சிறப்புக் கூட்டத்தில் பேசிய அன்புமணி, அ.தி.மு.க நான்கு கோஷ்டியாக உடைந்துவிட்டது. இனி தி.மு.கவுக்கு அடுத்தபடியாக பா.ம.கதான் பெரிய கட்சி என்று பேசியதாக சொல்லப்படுகிறது.

இது பற்றி செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், 'ஒரு பக்கம் வருத்தமும் வேதனையுமாக உள்ளது. கடுமையான கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன். பா.ம.கவை ஏற்றிவைத்த ஏணியே அ.தி.மு.கதான். அ.தி.மு.கவின் உதவி இல்லையென்றால் பா.ம.க என்கிற கட்சியே கிடையாது' என்று தெரிவித்தார்.

'உங்க கட்சியை ஏத்தி விட்டது யாரு... அம்மா இல்லையென்றால் பா.ம.க கட்சியே வெளியே தெரிந்திருக்காது. அம்மா கூட்டணி வைத்ததால் பா.ம.கவுக்கு அங்கீகாரம் கிடைத்தது. அதுக்கு முன்னாடி கட்சிக்கு அங்கீகாரமே கிடையாது. 1998-ல் அ.தி.மு.க கூட்டணிக்கு வந்த பிறகுதான் 5 சீட் கிடைத்தது. அதில் 4 இடத்தில் வெற்றி பெற்றார்கள். அதனால்தான் தேர்தல் ஆணையத்தோட அங்கீகாரம் கட்சிக்கு கிடைத்தது.

இதையெல்லாம் மறந்துவிட்டு பேசலாமா? தமிழ்நாட்டு மக்கள் மட்டுமல்ல, அ.தி.மு.க-வின் தொண்டன் அல்ல, உங்கள் பக்கத்தில் இருக்கிற தொண்டன்கூட உங்களை மதிக்க மாட்டான். 2001-ல் சட்டமன்றத் தேர்தல் நேரத்தில் பா.ம.கவுக்கு 27 சீட்டு அம்மா கொடுக்கிறாங்க. அதில் 20 தொகுதிகள் வெற்றி பெற நாங்கள்தான் காரணம்'

'எங்களுடைய தயவால்தான் நாடாளுமன்றம் போக முடிந்தது. மத்திய அமைச்சர் ஆக முடிந்தது. யாரும் அ.தி.மு.க-வை சிறுமைப்படுத்த முடியாது. சீண்டினால் தகுந்த பதிலடி கொடுக்க தயங்க மாட்டோம்' என்று பொங்கியெழுந்திருக்கிறார், ஜெயக்குமார்.

அ.தி.மு.க - பா.ஜ.க கூட்டணி ஏற்கனவே ஏகப்பட்ட சிக்கலில் இருக்கிறது. இதில் பா.ம.க வேறு முரண்டு பிடிக்கிறது. கூட்டணியே வேண்டாமென்று பா.ம.க முடிவு செய்துவிட்டதாக சொல்லிவிடமுடியாது. ஒருவேளை, பா.ம.கவுக்கு வேறு ஏதாவது அரசியல் கணக்குகள் இருக்கிறதோ என்று சந்தேகப்பட வேண்டியிருக்கிறது என்கிறார்கள், அரசியல் விமர்சகர்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com