“எங்களுக்கு ஆளத்தான் தெரியும், அரசியல் தெரியாது” - கெஜ்ரிவால்!

“எங்களுக்கு ஆளத்தான் தெரியும், அரசியல் தெரியாது” - கெஜ்ரிவால்!

“ராஜஸ்தானில் காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க. மாறிமாறி ஆட்சி செய்து மக்கள் பணத்தை கொள்ளையடித்துவிட்டன. எங்களுக்கு ஒரு முறை வாய்ப்பு தாருங்கள். எங்களுக்கு ஆட்சி செய்யத்தான் தெரியும், அரசியல் தெரியாது” என்று ஆம் ஆத்மி கட்சி தேசிய அமைப்பாளரும், தில்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் கூறினார்.

ராஜஸ்தான் மாநிலத்தில் விரைவில் சட்டப்பேரவைத் தேர்தல்கள் நடைபெற உள்ள நிலையில் அங்கு தேர்தல் பிரசாரத்தை தொடங்கும் முகமாக நடைபெற்ற யாத்திரை மற்றும் பொதுக்கூட்டத்தில் கெஜ்ரிவால் பேசினார்.

இத்தனை ஆண்டு காலமாக ராஜஸ்தான் மாநிலத்தை காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க. கட்சியினர்தான் மாறி மாறி ஆட்சி செய்து வந்துள்ளனர். மாநிலத்தில் காங்கிரஸ் 48 ஆண்டுகாலம் ஆட்சி செய்துள்ளது. அதேபோல பா.ஜ.க. 18 ஆண்டுகாலம் ஆட்சி செய்துள்ளது.

காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க. மாறி மாறி ஆட்சி செய்தபோதிலும் மாநிலத்தின் வளர்ச்சிக்காக எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. மக்கள் நலனிலும் அக்கறை செலுத்தவில்லை. அந்த இரண்டு கட்சிகளின் ஒரே நோக்கம் மக்கள் பணத்தை கொள்ளையடிப்பதுதான்.

இந்த முறை தேர்தலில் ஆம் ஆத்மி கட்சிக்கு மக்கள் வாக்களித்து ஆட்சியில் அமர்த்த வேண்டும். ஆம் ஆத்மி கட்சி மக்களுக்காக செயல்படும் நேர்மையான கட்சி. எங்களுக்கு அரசியல் தெரியாது. ஆனால், சிறந்த பள்ளிகளை உருவாக்குவது எப்படி என்பது தெரியும். நல்ல தரமான சாலைகள் அமைக்கத் தெரியும், குடிநீர், இலவச மின்சாரம், சுகாதார வசதிகளை செய்துதருவதில் கவனம் செலுத்துவோம் என்றார் கெஜ்ரிவால்.

சங்கநேரி கேட்டிலிருந்து அஜ்மீரி கேட் வரை ஆம் ஆத்மி கட்சி சார்பில் பேரணி நடைபெற்றது. இதில் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

போலியாக அரசியல், ஊழல் தொடர வேண்டுமானால் பா.ஜ.க. மற்றும் காங்கிரஸுக்கு வாக்களியுங்கள். நேர்மையான ஆட்சி வேண்டுமானால் ஆம் ஆத்மிக்கு வாக்களியுங்கள் என்றார் கெஜ்ரிவால்.

ராஜஸ்தானில் ஒவ்வொரு ஐந்தாண்டிலும் ஆட்சி மாற்றம் நடந்துகொண்டிருக்கிறது. ஒரு முறை காங்கிரஸ் ஆட்சி நடத்தினால், அடுத்த முறை பா.ஜ.க. ஆட்சி நடத்துகிறது. இதன்படி பார்த்தால் இப்போது பா.ஜ.க.வின் முறை வருகிறது.

மத்தியிலும், மாநிலத்திலும் ஒரே கட்சி ஆட்சியில் இருந்தால்தான் வளர்ச்சி சாத்தியம் என்று கூறி பா.ஜ.க.வினர் ஆட்சியமைக்கின்றனர். ஆனால், நடப்பது என்னவோ இரட்டை ஊழல். இதை நாம் கர்நாடகத்தில் பார்த்தோம். அங்கு ஊழல் பெருக்கெடுத்து ஓடுகிறது. பா.ஜ.க.வினர் மக்கள் நலனுக்காக போராட மாட்டார்கள். அவர்களின் போராட்டம் எல்லாம் யார் முதல்வராவது என்பதில்தான் உள்ளது என்றார் கெஜ்ரிவால்.

பஞ்சாப் முதல்வர் பகவந்த் சிங் மான் பேசுகையில், ராஜஸ்தான் மக்கள் துடைப்பத்தை (ஆம் ஆத்மி கட்சியின் சின்னம்) கையில் எடுக்க தயாராகிவிட்டார்கள். ஆம் ஆத்மி கட்சியைக் கண்டால் பா.ஜ.க.வும், காங்கிரஸ் கட்சியும் பயப்படுகிறது. ஏனெனில் எங்கள் கட்சி பல்வேறு மாநிலங்களிலும் விரிவடைந்து ஒரு தேசிய கட்சியாக உருவெடுத்துள்ளது. நாங்கள் சிறப்பு பள்ளிகளையும், நல்ல மருத்துவமனைகளையும் ஏற்படுத்தி வருகிறோம்.

ஏழை மக்கள் கல்வி கற்றால் மனசாட்சியுடன் தேர்தலில் வாக்களிப்பார்கள். காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க.வுக்கு வாக்களிப்பதை நிறுத்திவிடுவார்கள். இதன் காரணமாகவே ஏழைகளின் கல்விக்கு பாடுபட்டு வந்த, சிறப்பு பள்ளிகளை உருவாக்கிய நபரை (மணீஷ் சிசோடியா) ஊழல் வழக்கு என்ற பெயரில் கைது செய்து சிறையில் அடைத்துவிட்டார்கள் என்றார் மான்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com