நடு இரவில் இருமாநில முதல்வர்கள் ரகசிய சந்திப்பின் பின்னணி என்ன?

நடு இரவில் இருமாநில முதல்வர்கள் ரகசிய சந்திப்பின் பின்னணி என்ன?

மேகாலய மாநில முதல்வர் கான்ராடு சங்மா, அஸ்ஸாம் மாநில முதல்வர் ஹிமந்த விஸ்வ சர்மாவை குவாஹாட்டியில் நடு இரவில் ரகசியமாக சந்தித்து பேசியுள்ளார்.

மேகாலயத்தில் பா.ஜ.க. மற்றும் தேசிய மக்கள் கட்சி இணைந்த மேகாலய ஜனநாயக கூட்டணி ஆட்சி நடைபெறுகிறது. அதன் முதல்வராக கான்ராடு சங்மா இருக்கிறார். ஆனால், இந்த ஆண்டு தேர்தலில் தமது தலைமையிலான தேசிய மக்கள் கட்சி தேர்தலில் தனித்து போட்டியிடப்போவதாக சங்மா அறிவித்திருந்தார்.

மாநிலத்தில் கடந்த 27 ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்றது. பா.ஜ.க.வும், தேசிய மக்கள் கட்சியும் தனித்தனியாக தேர்தலில் போட்டியிட்டன. மார்ச் 2 ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

இந்த நிலையில் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பில் மேகாலயத்தில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை இல்லாத நிலையில் தொங்கு சட்டப்பேரவை அமையலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இப்படிப்பட்ட சூழ்நிலையில் முதல்வர் கான்ராடு சங்மா, திடீரென செவ்வாய்க்கிழமை இரவு குவாஹாட்டி சென்று அஸ்ஸாம் மாநில முதல்வரும், பா.ஜ.க. முக்கிய பிரமுகருமான ஹிமந்த விஸ்வ சர்மாவை நள்ளிரவில் ரகசியமாக சந்தித்து பேசியுள்ளார். குவாஹாட்டியில் ஒரு ஹோட்டலில் இந்த சந்திப்பு நடந்துள்ளது. சர்மா சந்தித்த பின் புதன்கிழமை அதிகாலையில் சங்மா, தனது சொந்த ஊரான துராவுக்கு திரும்பியுள்ளார்.

இந்த ரகசிய சந்திப்பின் பின்னணி என்ன என்று பார்த்தபோது மேகலாய மாநில தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காது. தொங்கு சட்டப்பேரவைதான் அமையும் என்று தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் வெளிவந்துள்ளதால், தேர்தலுக்கு பின் பா.ஜ.க.வுடன் மீண்டும் கூட்டணி வைப்பது குறித்து சங்மா, அஸ்ஸாம் முதல்வர் சர்மாவுடன் கலந்து ஆலோசித்ததாக தெரியவந்துள்ளது.

ஹிமந்த விஸ்வ சர்மா, வடகிழக்கு மாநில அரசியலில் மிகவும் பிரபலமானவர். 2016 ஆம் ஆண்டு காங்கிரஸை தோற்கடித்து பா.ஜ.க. ஆட்சிக்கு வர முக்கிய காரணமாக இருந்தவரும் அவர்தான். எனவே சர்மா, மேகாலய முதல்வர் சங்மாவை சந்தித்தது சாதாரண விஷயமல்ல. மேகாலயத்தில் கூட்டணி ஆட்சி அமைப்பது குறித்துதான் அவர்கள் இருவரும் பேசியிருக்க வேண்டும் என்று கூறுகின்றனர் அரசியல் நோக்கர்கள்.

வடகிழக்கு மாநிலங்களில் பா.ஜ.க.வின் வளர்ச்சிக்கான கூட்டணிக்கு அஸ்ஸாம் முதல்வர் ஹிமந்த விஸ்வ சர்மாதான் தலைவராக உள்ளார். தொங்கு சட்டப்பேரவை அமைந்தால் காங்கிரஸுடனோ அல்லது திரிணமூலம் காங்கிரஸுடனோ கூட்டணி அமைத்து ஆட்சியமைக்கும் திட்டம் இல்லை என்பதை சர்மா ஏற்கெனவே கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com