”இது என்ன இங்கிலாந்தா?” - ஆங்கிலம் பேசிய விவசாயி இடம் நிதிஷ் எரிச்சல்!
வேளாண் வளர்ச்சித் திட்டக்கூட்டத்தில் பங்கேற்ற விவசாயி தமது வளர்ச்சிப் பாதை குறித்து பேசுகையில் அடிக்கடி ஆங்கில வார்த்தைகளை பயன்படுத்தியதற்காக பிகார் முதல் நிதிஷ்குமார் கடிந்துகொண்டார்.
பாட்னாவில், பிகார் முதல்வர் நிதிஷ்குமார் தலைமையில் மாநில அரசின் வேளாண் வளர்ச்சித் திட்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
பாபு சிவசாகர் ஆடிட்டோரியத்தில் நடந்த இந்த கூட்டத்தில் லக்கிசராய் பகுதியைச் சேர்ந்த அமித் குமார் என்ற விவசாயி பேசத் தொடங்கினார். முதலில் முதல்வர் நிதிஷ்குமாரை அவர் பாராட்டினார். மேலாண்மை நிர்வாகப் படிப்பு படித்திருந்தபோதிலும் கைநிறைய சம்பளம் தரும் வேலையை விட்டுவிட்டு துணிச்சலுடன் தமது சொந்த மாவட்டத்தில் விவசாயத்தில் ஈடுபட்டு காளான் உற்பத்தி செய்து வருவதாக கூறினார். அவர் தனது பேச்சின் போது இடை இடையே ஆங்கில வார்த்தைகளை பயன்படுத்தினார்.
அப்போது குறுக்கிட்ட முதல்வர் நிதிஷ்குமார், “நானும் பார்த்துக்கொண்டே வருகிறேன். உங்களது பேச்சில் ஆங்கிலம் கலந்து வருகிறது. இது என்ன இங்கிலாந்தா? நீங்கள் பிகாரில் இருக்கிறீர்கள். சாதாரண மக்களைப்போல விவசாயத்தில் ஈடுபட்டுள்ளீர்கள். அதை ஞாபகம் வைத்துக்கொண்டு பேசுங்கள்” என்று கூறினார். இதையடுத்து கூட்டத்தில் பங்கேற்றவர்கள் கரவொலி எழுப்பினர்.
சமூக அநீதியை களைவதற்காக பல்வேறு மொழிகள் பேசும் மக்களை ஒன்றுபடுத்துவதில் சாம்பியனான சோஷிலிஸ்டு தலைவர் ராம் மனோகர் லோகியா வழியில் வந்தவர் நிதிஷ்குமார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் பேசிய நிதிஷ்குமார் கோவிட் தொற்றால் அறிவிக்கப்பட்ட பொது முடக்கத்தின்போது பலரும் ஸ்மார்ட் போனுக்கு அடிமையாகி தங்கள் மொழியையே மறந்துவிட்டார்கள் என்றும் குறிப்பிட்டார்.
மீண்டும் அமித் குமார் பேசுகையில், அரசு திட்டங்கள் என்பதற்கு ஆங்கிலத்தில் “கவர்மென்ட் ஸ்கீம்ஸ்” என்று மறந்துபோய் குறிப்பிட்டார். உடனே நிதிஷ்குமார், “என்ன இது? சர்காரி யோஜனா என்று கூறமுடியாதா? நான் படித்தது என்ஜினீயரிங். ஆங்கில மீடியத்தில் படித்தேன். அதற்காக நான் ஆங்கிலத்தில் பேச முடியமா? ஆங்கிலத்தை எங்கு பேச வேண்டுமோ அங்கு பேச வேண்டும். அன்றாட வாழ்க்கையில் நமது மொழியிலேயே பேச வேண்டும்” என்றார்.
இதைக் கேட்ட அமித் குமார், சாரி … என்று கூறிவிட்டு மாநில மொழியில் பேச்சை தொடர்ந்தார்.
இதனிடையே மாநில பா.ஜ.க. தலைவரும், அந்த கட்சியின் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் பிரிவின் தேசிய பொதுச் செயலாளருமான நிகில் ஆனந்த், நிதிஷ் குமாருக்கு ஆங்கிலத்தின் மீது கோபமா? அல்லது தனக்கு கீழ் உள்ள நபர் ஆங்கிலத்தில் பேசிவிட்டாரே என்கிற கோபமா? பொது மேடையில் ஒருவர் ஆங்கிலத்தில் பேசுவதை ஏன் தடுக்க வேண்டும் என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
நிதிஷ்குமாருக்கு பகல் கனவு காண்பதே வேலை. பிரதமர் ஆகும் கனவு அவருக்கு இருந்தாலும், பிரதமர் பதவி மீது ஆசை இல்லை என்று கூறிவருகிறார். தேசிய அரசியலில் விருப்பம் உள்ள அவர் ஏன் இப்படி நடந்து கொள்கிறார் என்றும் மறைமுகமாக கேள்வி எழுப்பினார்.