மகளிர் உரிமை தொகை யாருக்கு ? முதல்வர் அறிவிப்பு!
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 1 கோடி குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார்.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று கேள்வி நேரமும், அதையடுத்து நிதிநிலை அறிக்கைகள் மீதான மூன்றாம் நாள் விவாதமும் நடைபெற்றது. அப்போது மகளிருக்கான உரிமைத் தொகை குறித்து விவாதிக்கப்பட்டது. மகளிர் உரிமைத்தொகை கிடைக்காதவர்களின் நிலை என்ன என ஜி.கே.மணி கேள்வி எழுப்பினார்.
அப்போது பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “மகளிர் உரிமைத் தொகை குறித்த அறிவிப்பு உலகெங்கும் உள்ளவர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

வாழ்நாள் எல்லாம் ஓயாமல் உழைக்கும் பெண்களுக்கு அங்கீகாரம் தரவேண்டும், ஆண்டுக்கு ரூ.12 ஆயிரம் வழங்குவதன் மூலம் அவர்களின் வறுமை ஒழிந்து சுயமரியாதையுடன் வாழ வேண்டும், ஆகிய இரண்டு நோக்கங்களை கொண்டது தான் மகளிர் உரிமைத்தொகை திட்டம்.
மீனவ மகளிர், கட்டுமான மகளிர், சிறு தொழில் நிறுவனங்களில் பணிபுரிவோர், என பல்வேறு வகைகளில் பணியாற்றும் பெண்கள் இத்திட்டத்தால் பயன்பெறுவார்கள்.
திமுக இதனை செய்துவிடுமோ என அச்சத்தை பல்வேறு வழிகளில் பேசி வந்தோருக்கு பதிலளிக்கும் வகையில் இத்திட்டம் செயல்படுத்தப்படும். ஏறத்தாழ ஒரு கோடி குடும்ப தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும். மகளிர் உரிமைத்தொகை அவரவர் வங்கிக்கணக்கில் செலுத்தப்படும். இதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் விரைவில் வெளியிடப்படும். இந்த திட்டம், சமூக நீதி திட்டங்களிலேயே மாபெரும் முன்னெடுப்பு” என்று தெரிவித்தார்.
இத்திட்டம் அறிவிப்பதற்கு முன்னதாகவே பயனாளிகளை தேர்வு செய்யும் பணியை நிதித்துறை மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் மேற்கொண்டு வருகிறார்கள் அந்தப் பணி இறுதிக்கட்டத்தை எட்டி இருப்பதாகவும் கூறப்படுகிறது.
PHH என்ற வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள ரேஷன் அட்டைதாரர்களுக்கும், PHHAAY என்ற அந்தியோதயா அன்னயோஜனா ரேஷன் அட்டைதாரர்களுக்கும் (அதாவது 35 கிலோ அரிசி வாங்குபவர்கள்) ரூ.1,000 கிடைக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.