கர்நாடக முதல்வர் யார்? கார்கே முடிவு செய்வார்!
கர்நாடக மாநில முதல்வர் யார் என்பதை முடிவு செய்யும் அதிகாரத்தை காங்கிரஸ் மேலிடம் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு வழங்கியுள்ளது.
கர்நாடகத்தில் 224 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு நடைபெற்ற தேர்தலில் காங்கிரஸ் 135 இடங்களில் வென்று தனிப்பெரும்பான்மை பெற்றுள்ளது. காங்கிரஸ் வெற்றிக்கு ராகுல் காந்தி, சோனியா, பிரியங்கா, மல்லிகார்ஜுன கார்கே, மாநிலத் தலைவர் டி.கே.சிவகுமார், முன்னாள் முதல்வர் சித்தராமையை ஆகியோரின் கடும் உழைப்பே காரணம்.
இந்த நிலையில் முதல்வர் பதவியை பிடிப்பது யார் என்பதில் முன்னாள் முதல்வர் சித்தராமையா மற்றும் மாநிலத் தலைவர் டி.கே.சிவக்குமார் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. இருதரப்பினரின் ஆதரவாளர்களும் சுவரொட்டி போரில் ஈடுபட்டுள்ளனர்.
2013 ஆம் ஆண்டில் காங்கிரஸ் ஆட்சியில் முதல்வராக இருந்தவர் சித்தராமையா. தனது திறமையான ஆட்சியால் ஐந்து ஆண்டுகளையும் பூர்த்தி செய்தார். அரசியலில் முதிர்ந்த அனுபவம் வாய்ந்த அவரையே முதல்வர் பதவியில் அமர்த்த வேண்டும் என்று அவரது ஆதரவாளர்கள் கோரி வருகின்றனர்.
மேலும் சித்தராமையாவின் மகன் யதீந்திர சித்தராமையா, இந்த தேர்தல் எனது தந்தைக்கு கடைசி தேர்தலாகும். எனவே அரசியல் அனுபவமும் நிர்வாகத்திறமையும் உள்ள அவரையே முதல்வராக தேர்ந்தெடுக்க வேண்டும் என்று கூறிவருகிறார்.
இதனிடையே கட்சியின் மாநிலத் தலைவர் டி.கே. சிவக்குமாரையே முதல்வர் பதவியில் அமர்த்த வேண்டும் என்று அவரது ஆதரவாளர்கள் கோரி வருகின்றனர். இந்த ஆண்டு தேர்தல் மிகவும் சவாலாக இருந்தது. கடந்த மூன்று ஆண்டுகளாக கட்சியை கட்டிக்காத்து, கடுமையாக உழைத்து தீவிர பிரசாரம் செய்த்தால்தான் பா.ஜ.க.வை வீழ்த்தி காங்கிரஸ் கட்சி ஆட்சியப் பிடிக்க முடிந்துள்ளது. எனவே அவரையே முதல்வராக்க வேண்டும் என்று ஆதரவாளர்கள் கூறிவருகின்றனர். மேலும் சிவக்குமார் வொக்கலிகா சமுதாயத்தைச் சேர்ந்தவர். எனவே அவரை முதல்வராக்க வேண்டும் அந்த சமுதாயத்தைச் சேர்ந்த மடாதிபதிகள் வலியுறுத்தி வருகின்றனர்.
மாநிலத்தில் சித்தராமையா மற்றும் டி.கே.சிவக்குமார் ஆகிய இரு தலைவர்களுமே சக்திவாய்ந்தவர்களாக இருப்பதால் யாரை முதல்வராக நியமிப்பது என்று முடிவு செய்ய முடியாமல் காங்கிரஸ் மேலிடம் திணறி வருகிறது.
இந்த நிலையில் கர்நாடக எம்.எல்.ஏ.க்களின் கூட்டம் பெங்களூரில் ஒரு சொகுசு ஹோட்டலில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் காங்கிரஸ் மேலிட பார்வையாளர்களாக பொதுச் செயலாளர்களான சுஷில்குமார் ஷிண்டே, தீபக் பபாரியா மற்றும் ஜீதேந்திர சிங் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
சித்தராமையாவுக்கு ஒரு சில எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு இருக்கின்ற போதிலும் காங்கிரஸ் பார்வையாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஒவ்வொரு எம்.எல்.ஏ.விடமும் கருத்துக்களை கேட்டு பதிவு செய்தனர். பின்னர் முதல்வர் யார் என்பதை காங்கிரஸ் மேலிடம் முடிவு செய்யும் வகையில் ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த நிலையில் முதல்வர் யார் என்பதை முடிவு செய்யும் அதிகாரம் காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு வழங்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
வருகிற 18 ஆம் தேதி கர்நாடக முதல்வர் மற்றும் அமைச்சரவை பதவியேற்பு விழா நடைபெறும் என்று
தெரியவந்துள்ளது. இந்த நிகழ்ச்சியில் சோனியா, ராகுல், பிரியங்கா உள்ளிட்ட காந்தி குடும்பத்தினர் மற்றும் கார்கே உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் பங்கேற்பார்கள் என்று கூறப்படுகிறது. காங்கிரஸ் தோழமை கட்சிகளுக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
கர்நாடக தேர்தலில் காங்கிரஸ் 224 தொகுதிகளில் 135 இடங்களில் வென்றுள்ளது. அதாவது கடந்த 2018 இல் நடந்த தேர்தலில் பெற்ற இடங்களைவிட 55 இடங்களை கூடுதலாக பெற்றுள்ளது. மேலும் 30 ஆண்டுகளுக்குப் பிறகு அதிக இடங்களை வென்றுள்ளது. இதற்கு முன்னர் 1999 ஆம் ஆண்டு காங்கிரஸ் 132 இடங்களில் வென்றிருந்தது. இந்த தேர்தலில் காங்கிரஸ் 42.88 சதவீத வாக்குகளைப் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.