அஜித் பவாருக்குப் பிறகு மகாராஷ்டிர சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர்யார்?

அஜித் பவாருக்குப் பிறகு மகாராஷ்டிர சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர்யார்?

காராஷ்டிர மாநில சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவரும், தேசியவாத காங்கிரஸ் தலைவர்களில் ஒருவருமான அஜித் பவார், தனது ஆதரவாளர்களுடன் ஆளும் பா.ஜ.க.-சிவசேனை கூட்டணி அரசில் சேர்ந்ததை அடுத்து தேசியவாத காங்கிரஸ் கட்சி ஜிதேந்திர அவாதை சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவராக நியமித்துள்ளது.

தேசியவாத காங்கிரஸ் கட்சியின் இரண்டு கோஷ்டிகளுமே சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் பதவி தங்களுக்குத்தான் தரப்பட வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றன.

அஜித்பவார் கோஷ்டியினர், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் அஜித்பவார்தான் என்றும் பேரவை கட்சித் தலைவர் ஜெயந்த் பாட்டீலை அப்பதவியிலிருந்து நீக்கிவிட்டதாகவும் தெரிவித்துள்ளனர். மேலும் தேசியவாத காங்கிரஸ் ஆளும் கூட்டணியில் சேர்ந்துவிட்டது என்றும் சட்டப்பேரவைத் தலைவரிடம் கூறியுள்ளனர்.

மற்றொருபுறம் சரத் பவார் கோஷ்டியினர் தேசியவாத காங்கிரஸ் கட்சி, அஜித் பவாரை எதிர்க்கட்சித் தலைவர் பதவியிலிருந்து நீக்கிவிட்டு அவருக்கு பதிலாக ஜிதேந்திர அவாத்தை நியமித்துள்ளதாக தெரிவித்துள்ளது. கட்சி விரோத செயல்களில் ஈடுபட்டதாக அஜித்பவார் மற்றும் 8 பேர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் கூறியுள்ளது.

இதில் முக்கியமானது என்னவென்றால் இரண்டு பிரிவினருமே தாங்கள்தான் உண்மையான தேசியவாத காங்கிரஸ் கட்சி என்று கூறிவருகின்றன.

இதனால் பேரவைத் தலைவருக்கு தர்மசங்கடமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. தேசியவாத காங்கிரஸ் கட்சி ஆளும் கூட்டணியில் இருக்கிறதா அல்லது எதிர்க்கட்சியாக இருக்கிறதா என்பதை முடிவு செய்ய முடியாத நிலை உள்ளது.

காங்கிரஸ் கட்சி இதுவரை எதிர்க்கட்சித் தலைவர் பதவி எங்களுக்குத்தான் வேண்டும் என்று பேரவைத் தலைவரிடம் மனு எதுவும் கொடுக்கவில்லை. எனினும் இந்த விவகாரத்தில் சில நாட்கள் பொறுத்திருந்து பார்த்து செயல்பட காங்கிரஸ் விரும்புவதாகத் தெரிகிறது.

காங்கிரஸ் ஒருவேளை பேரவை எதிர்க்கட்சித் தலைவர் பதவி எங்களுக்குத்தான் என்று கோரியிருந்தால் பேரவைத் தலைவர் தேசியவாத காங்கிரஸ் கட்சிக்குள் உட்பூசல் இருப்பதாக வாதிட முடியும்.

அப்படியொரு நிலை வந்தால் பேரவைத் தலைவர் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் கோரிக்கையை நிராகரிக்க முடியும். மேலும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஒருவரை பேரவை எதிர்க்கட்சித் தலைவராக நியமிக்க முடியும். காங்கிரஸ் கட்சிக்கு தற்போது 45 எம்.எல்.ஏக்கள் உள்ளனர்.

மேலும் மகாராஷ்டிர விகாஸ் அகாதி விவகாரத்தில் தேர்தல் ஆணையம் என்ன முடிவு சொல்லப்போகிறது என்றும் பேரவைத் தலைவர் காத்திருக்கிறார். இது மகாராஷ்டிர அரசியலில் புதிய திருப்பத்தை உருவாக்கலாம்.

சட்டப்பேரவை எதிர்க்கட்சி தலைவர் கோரிக்கையை காங்கிரஸ் நிறுத்திவைக்கும் பட்சத்தில் மகாராஷ்டிர பேரவையின் மழைக்கால கூட்டத் தொடர் பேரவை எதிர்க்கட்சித் தலைவர் இல்லாமலே நடைபெறுவதைத் தவிர வேறு வழியில்லை.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com