கர்நாடக முதல்வராக யார் வரவேண்டும்? மக்களின் பதில் என்ன?
கர்நாடக மாநிலத்தில் வரும் 10 ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் வெற்றிபெற்று ஆட்சியை தக்கவைத்துக் கொள்ள வேண்டும் என்று ஆளும் பா.ஜ.க.வும், இழந்த ஆட்சியை எப்படியாவது மீட்டெடுக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியும் தீவிரமாக தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளன.
மதச்சார்பற்ற ஜனதா தளம் மற்றும் ஆம் ஆத்மி கட்சியும் தேரத்ல களத்தில் உள்ளன என்றாலும் இந்த தேர்தலில் மும்முனைப் போட்டிதான் நிலவுகிறது. தேர்தல் 10 ஆம் தேதி நடைபெற்றாலும் 13 ஆம் தேதிதான் முடிவுகள் வெளியாகின்றன.
இந்த தேர்தலில் காங்கிரஸ் தலைவர் சித்தராமையாவுக்குத்தான் கர்நாடக முதல்வராக வரும் வாய்ப்பு உள்ளதாகவும் இவருக்கு அடுத்த படியாக தற்போது முதல்வராக உள்ள பசவராஜ் பொம்மை முதல்வராகும் வாய்ப்பு உள்ளதாக தனியார் தொலைகாட்சியான என்டிடிவி, சிடிசிஎஸ் அமைப்புடன் கூட்டாக பொதுமக்களிடம் நடத்திய கருத்துக் கேட்பில் தெரியவந்துள்ளது.
இந்த கருத்து கணிப்பில், முன்னாள் முதல்வர் சித்தராமையாவுக்கு மக்களிடையே குறிப்பாக மூத்த வாக்காளர்களிடையே செல்வாக்கு உள்ளது தெரியவந்துள்ளது. இளம் வாக்காளர்கள் பசவராஜ் பொம்மை முதல்வராக வேண்டும் என விருப்பம் தெரிவித்துள்ளனர்.
யார் முதல்வராக வேண்டும் என்பதில் மதச்சார்பற்ற ஜனதாதளம் கட்சித் தலைவர் ஹெச்.டி.குமாரசாமி மூன்றாவது இடத்திலும் காங்கிரஸ் கட்சியின்
டி.கே.சிவக்குமார் நான்காவது இடத்திலும் உள்ளனர். எனினும் நான்கு முறை முதல்வராக இருந்த பா.ஜ.க.வின் எடியூரப்பாவுக்கு ஐந்தாவது இடமே கிடைத்துள்ளது.
2021 ஆம் ஆண்டு பொம்மை முதல்வராக பதவியேற்கும் வரை எடியூரப்பாதான் முதல்வராக இருந்தார். பொம்மை மீது ஊழல் புகார் இருந்தாலும், அவர் தேர்தலில் போட்டியிடவில்லை. முதல்வர் பதவிக்கு போட்டியிடும் எண்ணம் இல்லை என்றும் அவர் கூறிவருகிறார்.
56 சதவீதம் பேர் கட்சிக்காக வாக்களிப்பதாகவும், 38 சதவீதம் பேர் வேட்பாளரைப் பார்த்து வாக்களிப்பதாகவும் தெரிவித்துள்ளனர். நான்கு சதவீதம் பேர்கள்தான் முதல்வர் வேட்பாளர் யார் என பார்த்து வாக்களிப்பதாகத் தெரிவித்துள்ளனர்.
காங்கிரஸ் அல்லது மதச்சார்பற்ற ஜனதாதளத்தை ஆதரிக்கும் வாக்காளர்கள் கட்சிதான் முக்கியம் என்று கூறுகின்றனர். ஆனால், பா.ஜ.க. வாக்காளர்கள் இது விஷயத்தில் மாறுப்பட்ட கருத்துள்ளவர்களாக இருக்கின்றனர்.
59 சதவீதம் பேர் காங்கிரஸ் (35%), மதச்சார்பற்ற ஜனதாதளம் (3%) கட்சிகளைவிட பா.ஜ.க.தான் ஊழல் மிகுந்த கட்சி எனக்கூறியுள்ளனர்.
இதில் குறிப்பிடத்தக்க அம்சம் என்னவென்றால் வாரிசு அரசியல் குறித்து பேசிவரும் பா.ஜ.க.வில்தான் காங்கிரஸ் (30%), ஜே.டி.எஸ். (8%) கட்சிகளைவிட அதிக வாரிசுகள் (59%) தேர்தல் களத்தில் உள்ளனர்.
கர்நாடக-மகாராஷ்டிர எல்லைப் பிரச்னையை கையாள்வதில் பா.ஜ.க.வும் காங்கிரஸும் ஒரேவிகிதத்தில் (40%) இருப்பது தெரியவந்துள்ளது.
வொக்கலிகா சமூகத்தினரில் 34 சதவீதம் பேர் காங்கிரஸையும், 36 சதவீதம் பேர் மதச்சார்பற்ற ஜனதாதளத்தையும் ஆதரிக்கின்றனர். ஆனால், லிங்காயத்து சமூகத்தினரில் 67 சதவீதம் பேர் பா.ஜ.க.வை உறுதியாக ஆதரிக்கின்றனர். முஸ்லிம் வாக்காளர்களில் 69 சதவீதம் பேர் காங்கிரஸ் கட்சியை ஆதரிக்கின்றனர்.
ஏழை வாக்காளர்களிடையே காங்கிரஸ் கட்சி (50%) பிரபலமாகவும், மேட்டுக்குடியைச் சேர்ந்த வாக்காளர்களிடையே பா.ஜ.க.வும் (46%) பிரபலமாக உள்ளது தெரியவந்துள்ளது.