சஞ்சய் ரெளத்தின் அரசியல் ஆரூடம் பலிக்குமா?

சஞ்சய் ரெளத்
சஞ்சய் ரெளத்

மத்தியில் ஆளும் பா.ஜ.க. ஆட்சிக்கு எதிராக மக்களை ஒன்று திரட்டும் வகையில் காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி நாடு முழுவதும் ஒற்றுமை யாத்திரையை நடத்தி வருகிறார்.

தமிழ்நாட்டில் கன்னியாகுமரியில் தொடங்கிய அவரின் யாத்திரை கர்நாடகம், தெலங்கானா, ஆந்திரம், கேரளம், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், தில்லி உள்ளிட்ட மாநிலங்களைக் கடந்து உ.பி.யை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.

அவரது யாத்திரையில் முக்கிய பிரபலங்களும் அரசியல்கட்சித் தலைவர்களும் கலந்துகொண்டு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

தில்லியில் இரண்டு நாள்களுக்கு முன்பு செய்தியாளர்களிடம் பேசிய ராகுல் காந்தி, இந்த யாத்திரை தனிப்பட்ட ஒருவருக்காக அல்ல, நாட்டில் எதிர்க்கட்சிகளின் முகமாகவே இது நடக்கிறது. பா.ஜ.க.வை ஆட்சியிலிருந்து வீழ்த்துவது சாதாரண காரியமல்ல. எதிர்க்கட்சிகள் ஒன்றாக இணைந்து எதிர்கால திட்டத்துடன் செயல்பட்டால்தான் ஆட்சி மாற்றத்தை கொண்டு வர முடியும். ஒற்றுமை பயணத்தில் மக்களிடம் பேசியபோது அவர்களில் பலர் பா.ஜ.க.வுக்கு எதிரான மனநிலை கொண்டிருப்பது தெரியவந்தது என்று கூறியிருந்தார்.

இதனிடையே மத்திய பிரதேச மாநில காங்கிரஸ் தலைவரும், முன்னாள் முதல்வருமான கமல்நாத், 2024 மக்களவைத் தேர்தலில் எதிர்க்கட்சிகள் சார்பில் ராகுல்காந்திதான் பிரதமர் வேட்பாளராக இருப்பார் என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.

இந்த நிலையில் பிரதமர் பதவி என்கிற லட்சியக் கனவில் இருக்கும் பிகார் முதல்வர் நிதீஷ்குமார், வரும் மக்களவைத் தேர்தலில் எதிர்க்கட்சி சார்பில் ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக நிறுத்தும் யோசனைக்கு தயாராக இருப்பதாகத் தெரிவித்தார். மேலும் அனைத்து கட்சிகளும் அமர்ந்து பேசினால் இது குறித்து முடிவு எடுப்பதில் எந்த பிரச்னையும் இருக்காது என்றும் தெரிவித்துள்ளார்.

இது இப்படியிருக்க… “காங்கிரஸ் முன்னாள் தலைவருமான ராகுல்காந்தி புதிய அவதாரம் எடுத்துள்ளார். அவரது செல்வாக்கு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இது தொடர்ந்தால் 2024 இல் அரசியல் மாற்றத்தை காணலாம்” என்று சிவசேனை (உத்தவ் தாக்கரே) பிரிவின் தலைவர்களில் ஒருவரான சஞ்சய் ரெளத் . தமது கட்சிப் பத்திரிகையான ‘சாம்னா’வில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

2022 ஆம் ஆண்டை திரும்பிப் பார்த்தால் மத்தியில் ஆளும் பா.ஜ.க. ஆட்சியால் நாட்டு மக்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியுள்ளது. இந்த நிலையில் ராகுல் காந்தி துணிச்சலுடன் ஒற்றுமை யாத்திரையை தொடங்கினார். அதற்கு பல மாநிலங்களிலும் நல்ல வரவேற்பு இருந்தது. யாத்திரை தில்லி வந்தபோது அதைத் தடுக்க சூழ்ச்சிகள் செய்யப்பட்டன. 2022 இல் ராகுல் புதிய அவதாரம் எடுத்துள்ளார். அவருக்கு மக்களிடம் செல்வாக்கு அதிகரித்து வருகிறது. இதேநிலை தொடர்ந்தால் 2024 இல் நிச்சயம் அரசியல் மாற்றம் வரும் என்று கூறினார்.

பா.ஜ.க.வை வீழ்த்த வேண்டும் என்று அனைத்து எதிர்க்கட்சிகளும் வாயளவில் பேசிவருகின்றன. ஆனால், அவர்கள் அனைவரும் ஒன்றுசேர முடியவில்லை. ராகுலின் யாத்திரையில் பங்கேற்க மாட்டேன் என்று சமாஜவாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவும், பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதியும் கூறியுள்ளதே இதற்கு சான்றாகும். மேலும் பிராந்திய கட்சித் தலைவர்கள் பிரதமர் பதவி மோகத்தில் இருக்கும்போது கமல்நாத் தெரிவித்துள்ள யோசனை சாத்தியமாகுமா என்பதற்கு காலம்தான் பதில் சொல்ல வேண்டும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com