'பெண்களுக்கு பாதுகாப்பில்லை ' காயத்ரி ரகுராம் !

Annamalai - Gayathri Raghuram
Annamalai - Gayathri Raghuram

தமிழ்நாடு பாஜகவில் இருந்து கனத்த இதயத்துடன் விலகுகிறேன் என காயத்ரி ரகுராம் தனது ட்விட்டரில் தெரிவித்துள்ளார். தமிழக பாஜகவின் வெளிநாடு மற்றும் வெளி மாநில தமிழ் வளர்ச்சிப் பிரிவு மாநில தலைவராக உள்ளவர் காயத்ரி ராகுராம்,

நடிகையாகவும், நடன இயக்குநராகவும் பிரபலமடைந்த காயத்ரி ரகுராம் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு பாஜகவில் இணைந்தார். பாஜகவில் பல ஆண்டுகளாக தனது அரசியல் பயணத்தை தொடர்ந்து வந்தார். சமீபகாலமாக எதிர்க்கட்சினரை விமர்சித்தும், சொந்த கட்சியில் தனக்கு எதிராக செயல்படுபவர்கள் குறித்தும் ட்விட்டரில் காயத்ரி ரகுராம் தெரிவித்த கருத்துக்கள் பாஜக வினரிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வந்தது.

Gayathri raghuram
Gayathri raghuram

சமீபத்தில் பாஜகவைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு மிரட்டல் விடுத்து அக்கட்சியின் ஓபிசி அணி மாநிலபொதுச் செயலாளர் சூர்யா சிவா பேசியதாக வெளியான ஆடியோ பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் சூர்யா சிவாவிற்கு கண்டனம் தெரிவிக்கும் விதமாக பதிவு ஒன்றை வெளியிட்ட காயத்ரி ரகுராம், சூர்யா சிவாவிற்கு கட்சியில் சேர்ந்த உடனேயே பதவி கொடுத்தது குறித்தும் கண்டித்திருந்தார்.

தமிழக பாஜகவின் வெளிநாடு மற்றும் வெளி மாநில தமிழ் வளர்ச்சிப் பிரிவு மாநில தலைவராக உள்ள காயத்ரி அந்த பொறுப்பு உள்பட அனைத்துப் பொறுப்புக்களிலிருந்தும் 6 மாதத்திற்கு சஸ்பெண்ட் செய்யப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் திடீரென தமிழக பாஜகவில் இருந்து விலகுவதாக இன்று காயத்ரி ரகுராம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது ட்விட்டர் பதிவில், பாஜகவில் இருந்து விலகும் முடிவை கனத்த இதயத்துடன் எடுக்கிறேன். இந்த முடிவை எடுக்க காரணம் அண்ணாமலை தான். அண்ணாமலையின் தலைமைக்கு கீழ் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. அண்ணாமலை பற்றி நான் இனி கவலைப் பட மாட்டேன். அண்ணாமலை ஒரு மலிவான தந்திரமான பொய்யர் மற்றும் தர்மத்திற்கு எதிரான தலைவர். அண்ணாமலை மீது காவல் துறையில் புகார் அளிக்க தயாராக உள்ளேன்.

பெண்களுக்கான சம உரிமை மற்றும் மரியாதை தராததால் தமிழ்நாடு பாஜக விலிருந்து விலகுகிறேன் என்று பதிவிட்டுள்ளார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com