கனமழை விடுமுறை.. சனிக்கிழமைகளில் பள்ளிகள் செயல்படும்!

கனமழை
கனமழை

னமழை எச்சரிக்கை காரணமாக தமிழ்நாட்டில் பாலிடெக்னிக் கல்லூரிகளில் இன்று நடைபெறுவதாக இருந்த தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.அதேபோல் பல்வேறு மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.

வங்கக்கடலில் இன்று காலை குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. இந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி நாளை மறுநாள் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் மிகக் கனமழைக்கு வாய்ப்பிருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன் படி இன்று தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட பல மாவட்டங்களில் காலை முதலே கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. இதனால், பல்வேறு மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், பாலிடெக்னிக் கல்லூரிகளில் இன்று நடைபெற இருந்த பட்டயத் தேர்வுகள் கனமழை காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஒத்திவைக்கப்பட்ட பட்டயத் தேர்வுகள் நடைபெறும் தேதி dte.tn.gov.in என்ற இணையதளம் மூலம் பின்னர் அறிவிக்கப்படும் என்று தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகம் தெரிவித்துள்ளது.

இதனிடையே, பருவமழை காரணமாக விடப்படும் விடுமுறையை ஈடுகட்டும் விதமாக சனிக்கிழமைகளில் பள்ளிகள் செயல்படும் என்று பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது. மழைக் காலம் முடிந்ததும் சனிக்கிழமைகளில் பள்ளி இயங்குவது பற்றி அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களே முடிவு செய்து கொள்ளலாம் என்றும் பள்ளிக்கல்வித்துறை விளக்கமளித்துள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com