

போலி மருந்து விவகாரத்தின் எதிரொலியாக, தரமற்றதாக கண்டறியப்பட்ட இரண்டு மாத்திரைகளின் விற்பனைக்கு புதுச்சேரி மருந்து கட்டுப்பாட்டுத் துறை தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. மேலும் திருபுவனை செயல்படும் மருந்து நிறுவனத்தில் உற்பத்திக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரியில் போலி மருந்து தயாரித்து நாடு முழுவதும் சப்ளை செய்த விவகாரம் பெறும் அதிர்வலையை ஏற்படுத்திய நிலையில், அந்த வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது. இந்நிலையில் தற்போது, புதுச்சேரி மருந்து கட்டுப்பாட்டுத்துறை அதிகாரி அனந்தகிருஷ்ணன் சில்லறை, மொத்த மருதங்களுக்கும் ஒரு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதில், ‘குஜராத்தின் ஹெல்த் ஹேர் பார்முலேசன் நிறுவன தயாரிப்பான FORCIP-500 பாக்டீரிய நுண்ணுயிர் எதிர்ப்பு மருந்து மற்றும் மத்திய பிரதேசத்தின் சூப்ரெக்ஸ் லேபாரட்டரீஸ் நிறுவன தயாரிப்பான CETEZON ஆகிய மாத்திரைகளின் தரத்தில் குறைபாடு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
எனவே இந்தப் பொருட்களை வாங்குவதும் விற்பனை செய்வதும் தடை விதிக்கப்படுவதாகவும், இந்த மருந்துகளின் அளவு குறித்து துறைக்கு உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும் என்றும் இந்த மருந்துகளை உற்பத்தியாளர், விநியோகஸ்தர்களிடம் திருப்பி அனுப்புமாறும் குறிப்பிட்டுள்ளார்.
பொதுமக்களின் நலன் கருதி வெளியிடப்பட்டுள்ள இந்த அறிவிப்பை மீறுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.
இதைபோல் திருபுவனையில் ரெல்சன் ஹெல்த்கேர் மருந்து உற்பத்தி நிறுவனம் விதிமுறைகளை மீறியுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும், இந்நிறுவனம் மருந்துகளை உற்பத்தியை நிறுத்துமாறும் மருந்து கட்டுப்பாட்டுத்துறை உத்தரவிட்டுள்ளது.
நாட்டில் விற்பனை செய்யப்படும் அனைத்து விதமான மருந்துகள், மாத்திரைகள், மருத்துவ உபகரணங்கள் தொடா் தர ஆய்வுக்கு உள்படுத்தப்படுகின்றன.
மத்திய மருந்து தரக்கட்டுப்பாட்டு அமைப்பு அதிகாரிகள் ஒருபுறம் அத்தகைய பணிகளை முன்னெடுத்தாலும், மற்றொருபுறம் மாநில அரசு சாா்பிலும் தரப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அந்த வகையில், மருந்தகங்கள், மருந்து விநியோக மையங்கள், மொத்த விற்பனையகங்கள், கிடங்குகள் என பல்வேறு இடங்களில் அத்தகைய திடீா் ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது.
அதில் கண்டறியப்படும் தரமற்ற மற்றும் போலி மருந்துகள் குறித்த விவரங்களை ஒவ்வொரு மாநிலமும், மத்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்புக்கு மாதந்தோறும் அனுப்பி வருகின்றன. ஒவ்வொரு மாதமும் 10-ம் தேதிக்குள் அந்த விவரங்கள் பெறப்பட்டு அவை மத்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பின் இணையதளத்தில் பதிவேற்றப்படுகின்றன. தரமற்ற மருந்துகள் குறித்த விழிப்புணா்வை பொது மக்களுக்கு ஏற்படுத்தவே இத்தகைய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.