பொங்கல் விழா அழைப்பிதழ் சர்ச்சை; தொடரும் தமிழ்நாடு அரசு - கவர்னர் மோதல்!

பொங்கல் விழா அழைப்பிதழ் சர்ச்சை;
தொடரும் தமிழ்நாடு அரசு - கவர்னர் மோதல்!
Published on

மிழ்நாடு சட்டமன்றக் கூட்டம் நேற்று ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் தொடங்கியது. அந்த உரையில் திராவிட மாடல், சமூக நீதி, அமைதிப் பூங்கா, அண்ணல் அம்பேத்கர் போன்ற வார்த்தைகளை ஆளுநர் தவிர்த்துவிட்டு உரையாற்றினார் எனக் கூறி, தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் மற்றும் அதன் கூட்டணிக் கட்சி எம்.எல்.ஏக்கள் அவையில் ஆளுநருக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், ‘அரசால் தயாரிக்கப்பட்ட ஆளுநர் உரையில் ஒரு பகுதியைத் தவிர்த்துவிட்டு அவர் பேசியதை அவைக்குறிப்பில் இருந்து நீக்க வேண்டும்’ என தீர்மானம் கொண்டு வந்தார். இதனால் முதலமைச்சர் பேசிக் கொண்டிருக்கும்போதே, ஆளுநர் ஆர்.என்.ரவி அவையில் இருந்து வெளியேறினார். இதைத் தொடர்ந்து, ‘ஆளுநர் உரையில் மக்களுக்குப் பயன் தரும் எந்த ஒரு செய்தியும் இல்லை எனக் காரணம் கூறி அ.தி.மு.க. எம்.எல்.ஏக்களும் அவையில் இருந்து வெளியேறினர். ஆளுநர் வெளியேறியதால் பா.ஜ.க. எம்.எல்.ஏக்களும் அவையில் இருந்து வெளி நடப்பு செய்தனர்.

இந்த நிலையில், வரும் ஜனவரி 15ம் தேதி பொங்கல் திருநாள் கொண்டாடப்படவிருக்கிறது. இதனையொட்டி தமிழக ஆளுநர் பொங்கல் விழா அழைப்பிதழ் ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அழைப்பிதழில் கடந்த ஆண்டு தமிழ்நாடு இலச்சினை பதிவிட்டிருந்த நிலையில், இந்த ஆண்டு அதற்கு பதில் இந்திய அரசின் இலச்சினை இடம்பெற்றுள்ளது. இதுகுறித்து மக்களவை எம்.பி. சு.வெங்கடேசன் கேள்வி ஒன்றை எழுப்பியுள்ளார். இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "கடந்த முறை வந்த அழைப்பிதழில் தமிழ்நாடு அரசின் இலட்சினை இருந்தது. இந்த முறை வந்துள்ள அழைப்பிதழில் மூன்று இடங்களிலும் இந்திய அரசின் இலட்சினை மட்டுமே இருக்கிறது. நமது இலட்சினையில் தமிழ்நாடு என்று எழுதப்பட்டுள்ளதால் அதனைப் பயன்படுத்த மறுத்துள்ளார்" என்று அதில் அவர் பதிவிட்டுள்ளார்.

தமிழக அரசுக்கும் ஒன்றிய அரசால் நியமிக்கப்பட்டிருக்கும் கவர்னருக்கும் இடையேயான இந்த மோதல் போக்கு மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த மோதலின் முடிவு எதில் போய் முடியும் எனவும் மக்கள் அதிக எதிர்பார்ப்புடன் இருக்கின்றர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com