புதிய பொலிவுடன் தயாராகும் பூம்புகார் கலைக்கூடம் - சுற்றலாத்துறை அமைச்சர் தகவல்!

புதிய பொலிவுடன் தயாராகும் பூம்புகார் கலைக்கூடம் - சுற்றலாத்துறை அமைச்சர் தகவல்!
Published on

பூம்புகார் கலைக்கூடத்தை சீர்படுத்தி, சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் பணிகள் இறதிக்கட்டத்தில் இருப்பதாகவும், அடுத்து வரும் ஆறு மாதங்களில் புதிய பொலிவுடன் கலைக்கூடம் தயாராகிவிடும் என்றும் தமிழ்நாடு சுற்றுலாத்துறை அமைச்சர் கே.ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகாரில் சுற்றுலாத்துறையை மேம்படுத்த 23 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டிருக்கிறது. பூம்புகாரின் பழம்பெருமையை நினைவூட்டும் வகையில், அதன் சங்ககால தொடர்புகளை முன்னிலைப்படுத்தி புதிய திட்டங்கள் அமல்படுத்தப்பட்டு வருகின்றன. உலக அளவில் சிறந்த சுற்றுலாத்தளமாக்கும் நோக்கத்தில் பணிகள் மேற்கொள்ளப்படுவதாக சுற்றுலாத்துறை தெரிவித்திருக்கிறது.

பூம்புகாரில் நடைபெற்று வரும் பணிகளை ஆய்வு செய்த சுற்றுலாத்துறை அமைச்சர் கே. ராமச்சந்திரன், அனைத்து பணிகளும் இன்னும் ஆறு மாதங்களில் நிறைவடைந்துவிடும் என்று குறிப்பிட்டுள்ளார். தமிழகத்தில் சுற்றுலா பயணிகள் வரத்து அதிகரித்திருப்பதாகவும், மயிலாடுதுறை மாவட்டத்திற்கு மட்டும் கடந்து ஆண்டில் ஏறக்குறைய பத்து லட்சம் பயணிகள் வந்து சென்றிருப்பதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது கூடுதலாக 4 லட்சம் சுற்றுலாப் பயணிகள் மயிலாடுதுறை மாவட்டத்திற்கு வருகை தந்திருப்பதாகவும், நடப்பாண்டு இறுதிக்குள் இன்னும் ஒரு பத்து லட்சம் பயணிகள் வருவதற்கு வாய்ப்பு இருப்பதாகவும் ஆண்டின் முடிவில் குறைந்தபட்சம் 12 லட்சம் பயணிகள் வருவார்கள் என்று எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

இது தவிர தமிழ்நாடு சுற்றலாத்துறை சார்பாக நடத்தப்பட்டு வரும் ஹோட்டல்கள், தங்குமிடங்கள் அனைத்தும் பராமரிப்பு பணிகளில் இருப்பதாகவும் ஏறக்குறைய 300 இடங்கள் புதிதாக கட்டப்பட்டிருப்பதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார். பூம்புகாரில் தங்குவதற்கேற்ப புதிய தங்குமிடங்களும் கட்டப்பட இருக்கின்றன.

மயிலாடுதுறை மாவட்டத்தில் பூம்புகார், தரங்கம்பாடி மட்டுமல்ல தில்லையாடி வள்ளியம்மை நினைவு இல்லத்தையும் மேம்படுத்தும் திட்டம் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது சம்பந்தமாக 89 லட்சம் செலவில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட இருக்கின்றன. இது தவிர மயிலாடுதுறையில் மாயூரம் வேதநாயகம் பிள்ளை நினைவாக 3 கோடி ரூபாய் செலவில் அரங்கம் ஒன்றும் அமைக்கப்படவிருக்கிறது.

புதிதாக உதயமாகியுள்ள மயிலாடுதுறை மாவட்டம் சுற்றுலாத்துறையின் மூலம் கிடைக்கும் வருமானத்தை நம்பியே இருக்கிறது. தரங்கம்பாடி, பூம்புகார், திருக்கடையூர் உள்ளிட்ட இடங்களோடு மயிலாடுதுறை, குத்தாலம், சீர்காழி போன்ற பகுதிகளிலும் கூடுதலாக சுற்றுலாத்தளங்களை கட்டமைக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது என அமைச்சர் குறிப்பிட்டார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com