நடிகையும் பிரபல மாடலுமான பூனம் பாண்டே தனது 32 வது வயதில் கடந்த வியாழக்கிழமை இரவு இறந்துவிட்டதாக, அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்று போடப்பட்டது. அதில் பூனம் பாண்டே கர்ப்பப்பை வாய் புற்றுநோய் காரணமாக இறந்ததாக கூறப்பட்டிருந்தது. இதனால் அவரது ரசிகர்கள் அதிர்ச்சியடைந்த நிலையில், இன்று காலை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் “நான் உயிருடன்தான் இருக்கிறேன்” என பூனம் பாண்டே அதிர்ச்சி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
நேற்று அவர் இறந்துவிட்டார் என்ற செய்தி பலரை அதிர்ச்சியடைச் செய்தது. இருப்பினும் சிலர் அந்த பதிவு பொய்யாக இருக்கலாம் எனக் கூறினர். இருப்பினும் அவருக்கு நெருங்கியவர்களே அவர் இருந்துவிட்டார் என்ற செய்தியை உறுதிப்படுத்தியதால், உண்மையிலேயே பூனம் பாண்டே இருந்துவிட்டார் என அனைவரும் நம்பத் தொடங்கினர். குறிப்பாக பூனம் பாண்டேவின் மேலாளரான பரூல் சாவ்லா, பாண்டேவின் இறப்பை உறுதி செய்தது நம்பும் படியாகவே இருந்தது.
இதைத்தொடர்ந்து இன்று காலை பூனம் பாண்டேவின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது ரசிகர்களையும், பின் தொடர்பவர்களையும் அதிர்ச்சியடையச் செய்ததற்காக மன்னிப்பு கேட்கும் விதமாக வீடியோ ஒன்றை வெளியிட்டார். அந்த வீடியோவில், “நான் உயிருடன்தான் இருக்கிறேன். கர்ப்பப்பை வாய் புற்றுநோயால் ஆயிரக்கணக்கான பெண்கள் உயிரிழக்கிறார்கள். இப்போது உங்கள் அனைவரிடமும் ஒரு முக்கியமான ஒன்றை பகிர்ந்து கொள்ளும் கட்டாயத்தில் இருக்கிறேன். எனக்கு கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் இல்லை.
ஆனால் துரதிஷ்டவசமாக ஆயிரக்கணக்கான பெண்கள் இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர். வேறு புற்று நோய்களைப் போலல்லாமல் கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயானது முற்றிலும் தடுக்கக் கூடியது. இதற்கு முறையான தடுப்பூசி மற்றும் ஆரம்ப கால கண்டறிதல் மிக முக்கியமானது. இது குறித்து மேலும் அறிந்து கொள்ள பயோவில் இருக்கும் இணைப்பைப் பார்வையிடவும்” என காணொளி ஒன்றை வெளியிட்டார்.
இதே போல மற்றொரு காணொளியையும் பகிர்ந்து, கர்ப்பப்பை வாய் புற்றுநோய் சார்ந்த விழிப்புணர்வை ஏற்படுத்தினார். எனவே பூனம் பாண்டே இப்போது நலமுடன் இருக்கிறார் என்பது உறுதியாகிவிட்டது. அவரது துணிச்சலான செயல் உண்மையிலேயே பாராட்டத்தக்கது என ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
இப்படி வித்தியாசமான முறையில் கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்திய பூனம் பாண்டேவுக்கு அனைவரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.