பிரபல இயக்குநர் லிங்குசாமிக்கு ஆறு மாதம் சிறை: மேல்முறையீடு செய்துள்ளார்!

பிரபல இயக்குநர் லிங்குசாமிக்கு ஆறு மாதம் சிறை: மேல்முறையீடு செய்துள்ளார்!
Published on

மிழ் சினிமாவில் பிரபலமான இயக்குநராக விளங்கி வருபவர் லிங்குசாமி. திருப்பதி பிரதர்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கி பல படங்கள் தயாரித்துள்ளார். கடந்த 2014ம் ஆண்டு கார்த்தி, சமந்தா நடிப்பில் 'எண்ணி 7 நாள்' என்ற படத்தை இவரது தயாரிப்பு நிறுவனம் தயாரிக்க இருந்தது. அதற்காக பி.வி.பி. கேபிட்டல்ஸ் என்ற நிறுவனத்திடம் இருந்து லிங்குசாமி, அவரது சகோதரர் சுபாஷ் சந்திரபோஸ் ஆகியோர் கடன் பெற்றுள்ளனர்.

அந்த கடன் தொகையை திருப்பிச் செலுத்தும் வகையில் 35 லட்சத்துக்கு அவர்கள் காசோலை கொடுத்துள்ளனர். அந்த காசோலை வங்கிக் கணக்கில் பணம் இல்லை என திரும்பி வந்தது. அதைத்தொடர்ந்து பி.வி.பி. நிறுவனம் சென்னை சைதாப்பேட்டை கோர்ட்டில் லிங்குசாமி மீது காசோலை மோசடி வழக்கு தொடர்ந்தது.

வழக்கை விசாரித்த சைதாப்பேட்டை நீதிமன்றம், இயக்குனர் லிங்குசாமி, அவரது சகோதரர் சுபாஷ் சந்திரபோஸ் ஆகியோருக்கு ஆறு மாதம் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டது. இதை எதிர்த்து சென்னை முதன்மை செசன்ஸ் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். அந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது. வழக்கறிஞர்களின் விவாதங்களுக்கு பிறகு மனுவை தள்ளுபடி செய்த நீதிமன்றம், இயக்குனர் லிங்குசாமி, சுபாஷ் சந்திரபோஸ் ஆகியோருக்கு சைதாப்பேட்டை கோர்ட் விதித்த ஆறு மாத சிறை தண்டனையை உறுதி செய்து உத்தரவிட்டது.

இந்த நிலையில் இதுகுறித்து லிங்குசாமி வெளியிட்டிருக்கும் அறிக்கையில், ''இன்று பல ஊடகங்களில் பரபரப்பாக என்னைப் பற்றி வரும் செய்திக்கு தன்னிலை விளக்கம் அளிக்க வேண்டியது எனது கடமை. இந்த வழக்கு பிவிபி கேப்பிட்டல் லிமிடெட் மற்றும் எங்களது தயாரிப்பு நிறுவனமான திருப்பதி பிரதர்ஸ் பிலிம் மீடியா பிரைவேட் லிமிடெட் இடையிலானது. அவர்கள் கொடுத்த வழக்கின் மேல்முறையீட்டில் நேற்று மாண்புமிகு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. நாங்கள் நீதிமன்றம் அளித்த தீர்ப்புக்கு மேல்முறையீடு செய்து சட்டரீதியாக சந்திக்க உள்ளோம்” என்று லிங்குசாமி தெரிவித்து இருக்கிறார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com