
இலங்கையில் இன்று மதியம் சரியாக 12:30 மணியளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் தமிழகத்திற்கு ஆபத்து ஏற்படுமோ என்ற அச்சம் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.
இந்திய பெருங்கடலில் இலங்கைக்கு தென்கிழக்கில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் இன்று ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 6.2 என பதிவாகியுள்ள இந்த நிலநடுக்கம், சரியாக இந்தியப் பெருங்கடலில் 10 கிலோமீட்டர் ஆழத்தில் உணரப்பட்டது. இலங்கை தலைநகரான கொழும்புவில் இருந்து 1,326 கிலோ மீட்டர் தொலைவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில், கொழும்புவில் இது கடுமையாக உணரப்பட்டதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.
இருப்பினும் இந்த நிலநடுக்கத்தால் இலங்கையில் எந்த பாதிப்புகளும் ஏற்படவில்லை. இது கடலுக்கு அடியில் ஏற்பட்ட நிலநடுக்கமாக இருந்தாலும், சுனாமி அலைகள் ஏற்பட்டு மிகுந்த பாதிப்பை ஏற்படுத்துமோ என இலங்கை மக்கள் அச்சத்தில் இருந்தனர். ஆனால் தற்போதுவரை ஏற்பட்ட நிலநடுக்கத்தால் எவ்வித ஆபத்துகளும் இல்லை என புவியியல் வல்லுனர்கள் கூறுகின்றனர்.
இலங்கையில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதால், தமிழகத்திற்கு ஏதாவது பாதிப்பு வந்துவிடுமோ என எண்ணி பாதுகாப்பு நடவடிக்கைகள் செய்யப்பட்டு வருகிறது. மேலும் திருச்செந்தூர் கடலில் பக்தர்கள் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. திருச்செந்தூர் கடலில் சீற்றம் அதிகமாக காணப்படுவதால், பக்தர்கள் யாரும் கடலுக்குள் சென்று குளிக்க செல்லாமல் இருப்பதை உறுதி செய்ய, கடலோர பாதுகாப்பு போலீசார் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.