

இந்திய அரசின் பிரதான் மந்திரி பாரதிய ஜனௌஷதி பரியோஜனா (PMBJP) (Pradhan Mantri Bhartiya Jan Aushadhi Pariyojana) நாடு முழுவதும் உள்ள ஜனௌஷதி மையங்கள் மூலம் அனைவருக்கும் மலிவு விலையில் தரமான மருந்துகளை வினியோகம் செய்து வருகிறது.
நாட்டு மக்களுக்கு குறிப்பாக ஏழை, எளிய மக்களுக்கு நன்மை பயக்கக்கூடிய பல நல்ல திட்டங்களை அமல்படுத்தி செயல்பாட்டில் வைத்திருக்கிறது மத்திய அரசு. வீடு கட்டும் திட்டம், விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 6,000 கொடுக்கும் திட்டம், பயிர் காப்பீடு திட்டம் இப்படி பல திட்டங்கள் இருந்தாலும் நம் மாநிலங்களில் உள்ள பலருக்கும் இந்த திட்டங்களை பற்றி புரிதல் இல்லை என்றே சொல்ல வேண்டும்.
அந்த வகையில் இந்தியாவில் ஒவ்வொரு குடும்பங்களும் இரண்டு விஷயங்களுக்காக அதிகளவு செலவு செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.
ஒன்று கல்வி, மற்றொன்று மருத்துவம். சுகாதாரம் என்பது ஒரு அடிப்படைத் தேவை, ஆனால் இந்தியாவில் பலர் தரமான மருந்துகளை வாங்க முடியாமல் தவிக்கின்றனர். மத்திய அரசு பதிவியேற்ற உடனேயே எல்லா மக்களும் பயன்பெறும் வகையில் ரூ.5 லட்சத்திற்கு மருத்துவ காப்பீடு திட்டத்தை அறிமுகம் செய்தது.
தரமான மருந்துகளை வாங்க முடியாமல் தவிக்கும் மக்களின் பிரச்சினையைத் தீர்க்க, மத்திய அரசு 2008-ம் ஆண்டு பிரதான் மந்திரி பாரதிய ஜனௌஷதி பரியோஜனா (PMBJP) திட்டத்தைத் தொடங்கியது. பிரதம மந்திரியின் மலிவு விலை மருந்து திட்டம், மருந்தகக் கடைகளில் பொதுவான மருந்துகளை குறைந்த விலையில் வழங்குவதற்காக அமைக்கப்பட்டுள்ளது. இவை தனியார் மருந்தகங்களில் விற்கப்படும் விலையுயர்ந்த தரமிக்க மருந்துகளுக்கு இணையானவையாகும்.
நாடு முழுவதும் மத்திய அரசின் மலிவு விலை மருந்தகங்கள் 15,057 செயல்பாட்டில் உள்ள நிலையில், தமிழ்நாட்டில் மட்டும் 1,363 இருக்கிறது. பல குடும்பங்களில் உள்ள வயதானவர்களுக்கு சர்க்கரை நோய், ஆர்த்தோ, ரத்த அழுத்தம், நரம்பு தளர்ச்சி போன்ற பல நோய்களுக்கு வாழ்நாள் முழுவதும் மருந்து சாப்பிட வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். இதற்காக அந்த குடும்பம் மாதந்தோறும் ஒரு குறிப்பிட்ட தொகையை செலவு செய்ய வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படுவார்கள். இதனால் ஏழை, எளிய மக்கள் தான் அதிகளவு பாதிக்கப்படுவார்கள்.
இந்த குடும்பங்களில் இந்த பிரச்சனைகளுக்கு நிரந்தர தீர்வு காணும் பொருட்டு மத்திய அரசு கொண்டு வந்தது தான் மலிவு விலையில் மருந்தக திட்டம் என்பதாகும். மற்ற மருந்தகங்களை விட இங்கு வாங்கும் மருந்துகளுக்கு கிட்டதட்ட 50 சதவீதம் வரை குறைவு. அதாவது, புற்றுநோய்க்கு மற்ற மருந்தகங்களில் கிடைக்கும் மருந்தின் விலை ரூ.6500. ஆனால் அதுவே மலிவு விலை மருந்தகத்தில் அதன் விலை வெறும் ரூ.800 மட்டுமே.
தமிழகத்தில் மக்கள் மருந்தகம் திட்டத்தை இன்னும் 2000 இடங்களில் விரிவுபடுத்துவதற்கான பணிகள் தற்போது நடந்த வருகிறது. அந்த வகையில் மருந்துகளுக்கு பெரிய அளவில் செலவு செய்ய முடியாத ஏழை, எளிய மக்களுக்கு இந்த மருந்தகம் வரப்பிரசாதம் என்றே சொல்லலாம்.
அதுமட்டுமின்றி இந்த மலிவு விலையில் ‘மக்கள் மருந்தகம்’ வைக்கவும் மத்திய அரசு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்களை வரவேற்கிறது. அதாவது, ‘மக்கள் மருந்தகம்’ வைக்கவும் நீங்கள் விண்ணப்பிக்க முடியும். மக்கள் மருந்தகங்களைத் திறக்க தனிநபர்களை ஊக்குவிப்பதன் மூலம், இந்தத் திட்டம் சுய வேலைவாய்ப்பு வாய்ப்புகளை உருவாக்கி தொழில்முனைவோரை ஊக்குவிக்கிறது.
விண்ணப்பிக்க தகுதிகள்:
* விண்ணப்பதாரர்கள் டி. பார்மா அல்லது பி. பார்மா பட்டம் பெற்றிருக்க வேண்டும். இல்லையென்றால், இந்தத் தகுதி உள்ள ஒருவரைப் பணியமர்த்த வேண்டும் மற்றும் விண்ணப்பத்தின் போது அல்லது இறுதி ஒப்புதலின் போது அதற்கான சான்றினை வழங்க வேண்டும்.
* ‘மக்கள் மருந்தகம்’ வைக்க விண்ணப்பிப்பவர்களில் SC, ST, மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரியை வழங்கப்படுகிறது. அதேசமயம் இவர்களுக்கு மருந்தகம் வைக்க அனுமதி கிடைத்தவுடன் ரூ.50,000 மதிப்புள்ள மருந்துகளும் முதலிலேயே இலவசமாக வழங்கப்படுகிறது.
* பெண் தொழில்முனைவோர், மாற்றுத்திறனாளிகள், எஸ்சி, எஸ்டி, முன்னாள் ராணுவ வீரர்கள் அல்லது பின்தங்கிய மாவட்டங்கள் திறக்கப்படும் PMBJK மையங்களுக்கு ஒரு முறை மானியமாக கூடுதலாக ரூ.2 லட்சம் கிடைக்கும். இதில் தளபாடங்கள் மற்றும் சாதனங்களுக்கு ரூ.1.50 லட்சம், கணினிகள், இணையம், அச்சுப்பொறி போன்றவற்றுக்கு ரூ.50 லட்சம் அடங்கும்.
* வரிகள் தவிர்த்து, எம்.ஆர்.பி.,யில், 20 சதவீத கமிஷன் வழங்கப்படும்.
* விண்ணப்பதாரர் குறைந்தபட்சம் 120 சதுர அடி இடத்தை சொந்தமாகவோ அல்லது வாடகைக்கு எடுத்தோ வைத்திருக்க வேண்டும், குத்தகை ஒப்பந்தம் அல்லது இட ஒதுக்கீட்டுக் கடிதத்துடன் இருக்க வேண்டும்.
* மருந்து கடை ஆரம்பிப்பதற்கான லைசென்ஸ் பெற வேண்டும்.
* மேலும் நம்மை பற்றிய முழு விவரங்களை(படிப்பு, வேலை அல்லது தொழில், நிதிநிலை) தெரிவிக்க வேண்டும்.
* பெண் தொழில்முனைவோர், முன்னாள் ராணுவ வீரர்கள், எஸ்சி, எஸ்டி விண்ணப்பதாரர்கள் செல்லுபடியாகும் ஆதாரத்தை சமர்ப்பிக்க வேண்டும்.
நீங்கள் ஒரு மலிவு விலை ‘மக்கள் மருந்தகம்’ திறக்க விரும்பினால் www.janaushadhi.gov.in என்ற அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் விண்ணப்பிக்கலாம். பெயர், மொபைல் எண், படிப்பு சான்றிதழ் மற்றும் மின்னஞ்சல் ஐடி போன்ற உங்கள் விவரங்களை நிரப்பி, திரும்பப் பெற முடியாத கட்டணமாக ரூ.5,000 செலுத்தினால் விரைவில் மருந்தகம் வைக்கும் வாய்ப்போ அல்லது ஏஜென்ஜி எடுக்கக்கூடிய வாய்ப்போ கிடைக்கும். பெண் தொழில்முனைவோர், மாற்றுத்திறனாளிகள், எஸ்சி, எஸ்டி, முன்னாள் ராணுவ வீரர்கள் தங்கள் வகைக்கான ஆதாரத்தைச் சமர்ப்பித்தால் இந்தக் கட்டணத்தைச் செலுத்த வேண்டியதில்லை.
மேலும் இதுகுறித்த விவரங்களை,
இந்திய மருந்துகள் மற்றும் மருத்துவ சாதனங்கள் பணியகத்தின் (PMBI) தலைமை நிர்வாக அதிகாரி .
அலுவலக முகவரி: B-500, டவர் B, 5வது தளம், உலக வர்த்தக மையம், நௌரோஜி நகர், புது தில்லி - 110029 என்ற முகவரியிலும், 1800-180-8080 என்ற எண்ணிலும் தொடர்பு கொண்டு அறிந்து கொள்ளலாம்.