
பிரதான் மந்திரி மாத்ரு வந்தனா யோஜனா என்பது கர்ப்பிணி மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கு மத்திய அரசு வழங்கும் ஒரு சிறப்பான நிதியுதவித் திட்டம். 2017 ஜனவரி 1 முதல் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தால் செயல்படுத்தப்படும் இந்தத் திட்டம், மிஷன் சக்தியின் கீழ் இயங்குகிறது. கர்ப்ப காலத்தில் பெண்கள் ஓய்வெடுக்க வேண்டிய நேரத்தில் ஏற்படும் ஊதிய இழப்பை ஈடுகட்டுவது இதன் முக்கிய நோக்கம். இந்தத் திட்டத்தின் மூலம் முதல் குழந்தைக்கு 5,000 ரூபாயும், இரண்டாவது பெண் குழந்தைக்கு 6,000 ரூபாயும் என மொத்தம் 11,000 ரூபாய் வரை நிதியுதவி நேரடியாக வங்கிக் கணக்கில் செலுத்தப்படுகிறது.
முதல் குழந்தை ஆணாகவோ பெண்ணாகவோ இருந்தாலும், உதவித்தொகை இரண்டு தவணைகளில் வழங்கப்படுகிறது. கர்ப்பத்தைப் பதிவு செய்து, ஆறு மாதங்களுக்குள் ஒரு மகப்பேறு மருத்துவப் பரிசோதனை (ANC) செய்தால் முதல் தவணையாக 3,000 ரூபாய் கிடைக்கும்.
குழந்தை பிறந்து பதிவு செய்யப்பட்டு, 14 வாரங்களுக்குள் சுகாதார அமைச்சகத்தின் பொது தடுப்பூசி திட்டத்தின்படி அனைத்து தடுப்பூசிகளும் போடப்பட்டால், இரண்டாவது தவணையாக 2,000 ரூபாய் வழங்கப்படும். இரண்டாவது குழந்தை பெண்ணாக இருந்தால், கர்ப்பம் பதிவு செய்யப்பட்டு ஒரு ANC செய்யப்பட்டு, பிறந்த பெண் குழந்தை பதிவு செய்யப்பட்டு 14 வாரங்களுக்குள் தடுப்பூசிகள் போடப்பட்டால், ஒரே தவணையாக 6,000 ரூபாய் கிடைக்கும். ஒவ்வொரு தவணைக்கும் தனித்தனியாக விண்ணப்பிக்க வேண்டும்.
இந்தத் திட்டத்தில் பயன்பெற 19 வயதுக்கு மேற்பட்ட கர்ப்பிணிப் பெண்கள், கர்ப்பம் காரணமாக ஊதிய இழப்பைச் சந்திப்பவர்கள் தகுதியுடையவர்கள். தாழ்த்தப்பட்ட அல்லது பழங்குடியினப் பெண்கள், வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ளவர்கள், இ-ஷ்ரம் அட்டை வைத்திருப்பவர்கள், ஆயுஷ்மான் பாரத் அல்லது கிஷன் சம்மன் நிதி திட்டத்தில் பயனடைபவர்கள், 100 நாள் வேலை அட்டை உள்ளவர்கள், 40% அல்லது முழுமையாக ஊனமுற்றவர்கள், ஆண்டு குடும்ப வருமானம் 8 லட்சத்திற்கு குறைவாக உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிக்க ஆதார் அட்டை, தாய் மற்றும் குழந்தை பாதுகாப்பு (MCP) அட்டை, வங்கி அல்லது தபால் நிலைய கணக்கு விவரங்கள், குழந்தையின் பிறப்புச் சான்றிதழ், தடுப்பூசி விவரங்கள், தகுதி நிரூபணத்திற்கு SC/ST சான்றிதழ், ரேஷன் கார்டு அல்லது இ-ஷ்ரம் அட்டை போன்றவை தேவை. கணவரின் ஆதார் அட்டை தேவையில்லை.
விண்ணப்பிக்க இரண்டு வழிகள் உள்ளன. அருகிலுள்ள அங்கன்வாடி மையத்தில் படிவம் 1-A பூர்த்தி செய்து, தேவையான ஆவணங்களுடன் சமர்ப்பிக்கலாம். இந்தப் படிவம் அங்கன்வாடி மையத்திலோ அல்லது https://pmmvy.wcd.gov.in/ இணையதளத்திலோ கிடைக்கும். முதல் அல்லது இரண்டாவது குழந்தைக்கு விண்ணப்பிக்கிறீர்கள் என்பதைக் குறிப்பிடவும். விவரங்களைச் சரிபார்த்து சமர்ப்பித்தால், 30-60 நாட்களுக்குள் உதவித்தொகை வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும்.
முதல் கர்ப்பத்தில் கருச்சிதைவு அல்லது குழந்தை இறப்பு ஏற்பட்டால், முதல் தவணையான 3,000 ரூபாய் மட்டுமே கிடைக்கும். ஆனால், அடுத்த கர்ப்பத்தில் புதிய பயனாளியாக விண்ணப்பிக்கலாம். முதல் குழந்தைக்கு முழு உதவித்தொகையைப் பெற்றவர்கள், இரண்டாவது கர்ப்பத்தில் கருச்சிதைவு ஏற்பட்டால், எதிர்காலத்தில் மீண்டும் PMMVY 2.0-இன் கீழ் விண்ணப்பிக்கலாம். மத்திய அல்லது மாநில அரசு, பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் பெண்கள் அல்லது இதேபோன்ற சலுகைகளைப் பெறுபவர்கள் இந்தத் திட்டத்திற்கு தகுதியற்றவர்கள்.
தனியார் மருத்துவமனைகளில் பிரசவம் செய்பவர்கள் பொதுவாக உதவித்தொகையைப் பெற முடியாது, ஏனெனில் MCP அட்டையை அரசு மருத்துவமனைகளில் மட்டுமே பதிவு செய்ய முடியும். இருப்பினும், அரசு மருத்துவர் அல்லது சுகாதாரத் துறை அதிகாரியின் சான்றிதழ் இருந்தால், PMMVY 2.0-இன் கீழ் சலுகைகள் கிடைக்க வாய்ப்பு உள்ளது.
இந்தத் திட்டம் கர்ப்பிணிப் பெண்களின் நிதி மற்றும் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தி, அவர்களுக்கும் அவர்களது குழந்தைகளுக்கும் பாதுகாப்பான எதிர்காலத்தை உறுதி செய்கிறது. தகுதியுள்ள பெண்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி, எளிய முறையில் விண்ணப்பித்து நிதியுதவியைப் பெறலாம்.