
ஓய்வூதியம் (பென்ஷன்)என்பது அரசு ஊழியர்களுக்கு மட்டுமே கிடைத்து வரும் ஒரு சலுகையாகும். ஓய்வூதியம் என்பது சாமானிய மக்களுக்கும் கிடைத்து பலனடைய வேண்டும் என்பதற்கான அடல் பென்சன் யோஜனா போன்ற நிறைய திட்டங்களை மத்திய மாநில அரசுகள் செயல்படுத்தி வருகின்றன..
அமைப்பு சாரா தொழில்களில் ஈடுபட்டுள்ளவர்களுக்காகவே கொண்டு வரப்பட்ட பிரதான் மந்திரி ஷரம் யோகி மந்தன் யோஜனா திட்டமானது(Pradhan Mantri Shram-Yogi Maandhan), கடந்த 2019ல் கொண்டுவரப்பட்டது. இது அமைப்பு சாரா துறையைச் சேர்ந்த கூலித் தொழிலாளர்களின், எதிர்காலம் குறித்த கவலையை போக்கி, நம்பிக்கையும், நிதிப்பாதுகாப்பையும் தருவதற்காக கொண்டு வரப்பட்ட திட்டமாகும்.
இது முதுமையின் போது நிதி பாதுகாப்பை உறுதிசெய்து சமூக நலனை மேம்படுத்துவதற்காக கொண்டுவரப்பட்ட திட்டமாகும். அமைப்புசாரா துறை தொழிலாளர்களுக்கு பிரதான் மந்திரி ஷரம் யோகி மந்தன் திட்டத்தின் (PMSYM) கீழ் மாதம் 3,000 பென்ஷன் அளிக்கப்பட்டு வரும் நிலையில் இதுவரை இந்தியா முழுவதும் 46,29,664 க்கும் மேற்பட்டோர் இந்த திட்டத்தில் இணைந்துள்ளனர். இந்த திட்டத்தில் யார் யாரெல்லாம் இணையலாம்? எப்படி இணைவது? என்பதை பற்றி அறிந்து கொள்ளலாம்.
அமைப்புசாரா தொழில்களில் ஈடுபட்டுள்ள யாராக இருந்தாலும் இந்த ஷரம் யோகி மந்தன் திட்டத்தில் இணைய முடியும். மேலும் குறைவான வருமானம் ஈட்டுபவர்களுக்கு 60 வயதில் கிடைக்கும் இந்த பென்ஷன் தொகையானது, அவர்களின் வாழ்வாதாரத்திற்கு மிகுவும் உதவியாய் இருக்கும்.
மாதம் ரூ.15,000-க்கும் குறைவாகச் சம்பளம் வாங்குபவர்கள் மட்டுமே இந்த திட்டத்தின் கீழ் சேர்ந்து ஓய்வூதியம் பெற முடியும். வருமான வரி செலுத்துபவர்கள் அல்லது EPFO, NPS அல்லது ESIC உறுப்பினர்களாக இருப்பவர்கள் இத்திட்டத்தில் சேர முடியாது.
இந்த திட்டத்தில் இணைய 18 வயது முதல் 40 வயதுக்குள் இருக்க வேண்டியது கட்டாயம். மாத வருமானம் ரூ.15,000 அல்லது அதற்கும் குறைவாகவும் ஊதியம் வாங்கும் தகுதியுள்ள நபர்கள் சுய பதிவு அல்லது பொது சேவை மையங்கள் (CSCs) மூலம் இந்த திட்டத்தில் சேரலாம்.
இந்த திட்டத்தில் சேர விரும்பும் அமைப்புசாரா துறை தொழிலாளர்கள், 18 வயது முதல் மாதம்தோறும் ரூ.55 செலுத்தி வந்தாலே, வயதான காலத்தில் ரூ.3000 பென்ஷனை பெறலாம். அதுவே 29 வயதில் இணைந்தால் மாதாந்திர பங்களிப்பு தொகையாக ரூ.80 செலுத்த வேண்டும். அதேபோல் 40 வயது நிரம்பிய பயனாளிகள் மாதந்தோறும் ரூ.200 செலுத்தினால் அரசும் பென்ஷன் ஃபண்டில் ரூ.200 செலுத்தும். நாம் எந்தளவு பங்களிப்பு அளிக்கிறோமோ அதற்கு ஏற்றப்படி நமக்கு கிடைக்கும் பென்ஷன் தொகையும் மாறுபடும். மேலும் அமைப்பு சாரா தொழிலாளர்கள் ஓய்வு பெறும் போது ரூ.30 லட்சம் வரையிலான கிராஜூவிட்டி தொகைக்கு வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தில் சேர தேவையான ஆவணங்கள் :
இந்த திட்டத்தில் இணைய ஆதார் அட்டை, வங்கி பாஸ் புக், ஜன் தன் வங்கி கணக்கு போன்றவை கட்டாயமாக தேவை.
ஷரம் யோகி மந்தன் திட்டத்தில் சேர்ந்த பயனாளி எதிர்பாராத விதமாக 60 வயதை முன்போ இறந்துவிட்டால், அவர்களின் குடும்பத்தினருக்கு ஓய்வூதியத் தொகையில் 50% குடும்ப ஓய்வூதியமாக வழங்கப்படும். அல்லது இறந்த பயனாளியின் மனைவி அல்லது கணவன் இத்திட்டத்தை தொடர விரும்பினால் தொடலாம். அல்லது தொடர விருப்பமில்லையானால், பணத்தை திரும்ப எடுத்துக் கொள்ளலாம்.
இந்த திட்டத்தின் கீழ் யாரெல்லாம் பயன்பெற முடியும் :
வீட்டிலிருந்து வேலை செய்யும் தொழிலாளர்கள், தெருவோர வியாபாரிகள், மதிய உணவு பணியாளர்கள், தலைச் சுமை தூக்குபவர்கள், செங்கல் சூளை தொழிலாளர்கள், செருப்பு தைப்பவர்கள், குப்பை பொறுக்குபவர்கள், வீட்டுப் பணியாளர்கள், சலவைத் தொழிலாளர்கள், மீனவர், கட்டுமானத் தொழிலாளர், ஆட்டோரிக்க்ஷா மற்றும் வாடகை ஊர்தி ஓட்டுனர், விவசாயத் தொழிலாளர், பனைமரத் தொழிலாளர், கிராமக் கோவில் பூசாரிகள், நாட்டுப்புறக் கலைஞர்கள், முடி திருத்துவோர், தையல் தொழிலாளர், ஓவியர், கைத்தறி நெசவு தொழிலாளர்கள் ஆகியோர் இந்த திட்டத்தில் சேர்ந்து பலன் பெற முடியும்.