சிபிஐ இயக்குநராக பிரவீன் சூட் நியமனம்!

சிபிஐ இயக்குநராக பிரவீன் சூட் நியமனம்!
Published on

மத்திய புலனாய்வுத் துறை (சிபிஐ) இயக்குநராக கர்நாடக டிஜிபி பிரவீன் சூட் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை அரசு வெளியிட்டுள்ளது. 59 வயதான பிரவீன் சூட் பதவியேற்கும் நாளிலிருந்து இரண்டு ஆண்டுகளுக்கு அப்பதவியில் நீடிப்பார்.

தற்போது சிபிஐ இயக்குநராக உள்ள சுபோத் குமார் ஜெய்வாலின் பதவிக்காலம் வருகிற மே 25 ஆம் தேதியுடன் முடிவடைகிறது.

இதையடுத்து புதிய இயக்குநரை நியமிப்பதற்கான நடைமுறைகளை மத்திய அரசு தொடங்கியது.

இதன்படி, பிரதமர் நரேந்திர மோடி, தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் மற்றும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ஆதிர் ரஞ்சன் செளதுரி ஆகியோர் அடங்கிய உயர்நிலை தேர்வுக்குழு கூட்டம் தில்லியில் நடைபெற்றது.

அப்போது கர்நாடக டிஜிபி பிரவீண் சூட், மத்திய பிரதேச ஐபிஎஸ் அதிகாரி சுதிர் சக்சேனா மற்றும் பஞ்சாப் ஐபிஎஸ் அதிகாரி தின்கர் குப்தா ஆகிய 3 மூத்த அதிகாரிகளின் பெயர்கள் பரிசீலிக்கப்பட்டன.

இதைத் தொடர்ந்து கர்நாடக மாநில காவல் துறை தலைவராக (டிஜிபி) பதவி வகிக்கும் பிரவீண் சூட் என்பவரை சிபிஐ புதிய இயக்குநராக நியமிப்பது என ஒருமனதாக முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து, இதற்கான உத்தரவை மத்திய

பணியாளர் மற்றும் பயிற்சித் துறை அமைச்சகம் ஞாயிற்றுக்கிழமை மாலை பிறப்பித்தது. இவர் அடுத்த 2 ஆண்டுகளுக்கு பதவியில் இருப்பார்.

ஐஐடி- தில்லி பட்டதாரியான பிரவீண் சூட், 1986-ல் ஐபிஎஸ் பணியில் சேர்ந்தார். பல்வேறு உயர் பதவிகளை வகித்துள்ள இவர் மிகவும் திறமையாக செயலாற்றி வந்துள்ளார். குறிப்பாக, 2004 முதல் 2007 வரையில் மைசூரு மாநகர காவல் ஆணையராக பணியாற்றிய இவர், பாகிஸ்தான் தீவிரவாதி ஒருவர் கைது செய்யப்பட்டதில் முக்கிய பங்கு வகித்தார். இவர் கடந்த 2018 முதல் கர்நாடக டிஜிபியாக பதவி வகித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. முதலில் கர்நாடக மாநில உள்துறையில் முதன்மைச் செயலர், குற்றப்புலனாய்வுத்துறை டிஜிபி, பொருளாதார குற்றப்பிரிவு துறை டிஜிபியாக பணியாற்றி வந்த பிரவீண், 2020 ஆம் ஆண்டில் மாநில டிஜிபியாக நியமிக்கப்பட்டு பணியாற்றி வந்தார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com