‘கர்ப்பிணிகள் ராமாயணம் படிக்க வேண்டும்’ தெலங்கானா ஆளுநர் தமிழிசை அறிவுரை!

‘கர்ப்பிணிகள் ராமாயணம் படிக்க வேண்டும்’ தெலங்கானா ஆளுநர் தமிழிசை அறிவுரை!
Published on

ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் ஒரு பிரிவான, ‘சம்வர்த்தினி நியாஸ்’ என்ற அமைப்பின், ‘கர்ப்ப சன்ஸ்கார்’ திட்டத்தினை காணொலி மூலம் தொடங்கி வைத்தார் தெலங்கானா மாநில ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன். இந்த நிகழ்ச்சியில் பேசிய ஆளுநர் தமிழிசை, “கர்ப்பத்தைப் பற்றிய அறிவியல்பூர்வமான விழிப்புணர்வு ஏற்படுத்துவது நிச்சயமாக நேர்மறையான முடிவுகளைத் தரும். கர்ப்ப காலத்தில் பெண்கள் ராமாயணத்தில் வரும் சுந்தர காண்டம் பகுதியைப் படிப்பது கருவில் உள்ள குழந்தைகளுக்கு மிகவும் நல்லது.

கிராமப்புறங்களில் கருவுற்றிருக்கும் பெண்கள் ராமாயணம், மகாபாரதம் போன்ற இதிகாசங்களைப் படிப்பதைப் பார்த்திருப்போம். குறிப்பாக தமிழ்நாட்டில், கர்ப்பிணிப் பெண்களுக்கு கம்ப ராமாயணத்தின் சுந்தர காண்டத்தைப் படிக்கும் வழக்கம் உள்ளது. கர்ப்ப காலத்தில் சுந்தர காண்டம் படிப்பது குழந்தைகளுக்கு மிகவும் நல்லது. அறிவியல் அணுகுமுறைப்படி இது கர்ப்ப காலத்தில் ஏற்படும் பிரச்னைகளை தவிர்க்க உதவும்.

ஆரோக்கியமான குழந்தைகளைப் பெற்றெடுக்கவும் ராமாயணம் படிப்பது மிகவும் உதவும். மேலும், கருவுற்றிருக்கும்போது பெண்கள் யோகா பயிற்சி செய்வதால் தாய், சேய் இருவரின் உடல் மற்றும் மன நலத்தைப் பேணலாம். அது பெண்களின் சுக பிரசவத்துக்கும் உதவும்” என்று பேசி இருக்கிறார் மகப்பேறு மருத்துவரான தமிழிசை சவுந்தரராஜன். சுந்தர காண்டம் என்பது ராமாயணத்தின் ஐந்தாவது பகுதி என்பது குறிப்பிடத்தக்கது. இது அனுமனின் அறிவுக் கூர்மையையும், வீரத்தையும் பேசுவதாகும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com