இந்திய துணைக் குடியரசுத் தலைவர் ஜகதீப் தன்கர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். உடல்நலக் காரணங்களுக்காக இந்த முடிவை எடுத்ததாக அவர் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவுக்கு கடிதம் அனுப்பியிருந்தார். தன்கரின் ராஜினாமாவை குடியரசுத் தலைவர் முர்மு ஏற்றுக்கொண்டார்.
திங்கட்கிழமை (ஜூலை 21, 2025) நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் தொடங்கிய நிலையில், மாநிலங்களவையின் தலைவரான ஜகதீப் தன்கர் அவையை வழிநடத்தினார். அன்றைய தினமே அவர் தனது ராஜினாமா கடிதத்தை குடியரசுத் தலைவரிடம் சமர்ப்பித்தது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
தனது ராஜினாமா கடிதத்தில், "உடல்நலப் பராமரிப்புக்கு முன்னுரிமை அளிக்கவும், மருத்துவ ஆலோசனைக்கு இணங்கவும், இந்திய அரசியலமைப்பின் பிரிவு 67(அ) இன் படி, உடனடியாக அமலுக்கு வரும் வகையில், இந்திய துணைக் குடியரசுத் தலைவர் பதவியை ராஜினாமா செய்கிறேன்." என்று தன்கர் குறிப்பிட்டிருந்தார்.
74 வயதாகும் ஜகதீப் தன்கர், ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த மூத்த அரசியல்வாதியாவார். மேற்கு வங்காள ஆளுநராகவும் பதவி வகித்த அவர், மாநிலங்களவையின் தலைவராகவும் சிறப்பாகப் பணியாற்றினார். அவரது பதவிக்காலத்தில், நாடாளுமன்ற நடைமுறைகளை ஒழுங்குபடுத்துவதிலும், சட்ட விவாதங்களை வழிநடத்துவதிலும் முக்கிய பங்காற்றினார்.
கடந்த 2022 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 11 ஆம் தேதி இந்தியாவின் 14வது துணைக் குடியரசுத் தலைவராக ஜகதீப் தன்கர் பதவி ஏற்றார். அவரது பதவிக்காலம் இன்னும் இரண்டு ஆண்டுகள் (2027 ஆகஸ்ட் வரை) இருந்த நிலையில், இந்த திடீர் ராஜினாமா பல கேள்விகளை எழுப்பியுள்ளது. மாநிலங்களவை தலைவராக செயல்பட்ட காலத்தில், எதிர்க்கட்சிகளுடன் அவருக்கு பலமுறை கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
ஜகதீப் தன்கரின் ராஜினாமாவை குடியரசுத் தலைவர் ஏற்றுக்கொண்டதை அடுத்து, நாட்டின் இரண்டாவது மிக உயர்ந்த அரசியலமைப்புப் பதவியான துணைக் குடியரசுத் தலைவர் பதவி காலியாகியுள்ளது. அரசியலமைப்பின் படி, இந்த காலியிடத்தை கூடிய விரைவில் நிரப்ப தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கும். புதிய துணைக் குடியரசுத் தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் செயல்முறைகள் விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.