

பத்திரப்பதிவின் போது சம்பந்தப்பட்ட சொத்தின் அசல் ஆவணங்கள் தாக்கல் செய்வதை கட்டாயமாக்கும் தமிழ்நாடு அரசினுடைய மசோதாவுக்கு ஜனாதிபதி ஒப்புதல் அளித்துள்ளார். மூலப்பத்திரம் இல்லையெனில் வருவாய்த்துறையின் பட்டாவை சமர்ப்பிக்க வேண்டும் என மசோதாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2025 ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத்தில் பத்திரப்பதிவு மசோதா ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. ஒப்புதலுக்காக அந்த மசோதா ஆளுநர் ஆர்.என். ரவிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அவர் அதை இந்திய குடியரசுத் தலைவர் திரௌபதி மர்முவின் ஒப்புதலுக்கு அனுப்பி வைத்தார். தற்ப்போது அந்த மசோதாவிற்கு ஒப்புதல் அளித்துள்ளார் ஜனாதிபதி திரௌபதி மர்மு.
பத்திரப் பதிவு மசோதாவில் கூறப்பட்டுள்ளதாவது -
ஒரு சொத்தை பத்திரப்பதிவு செய்யும்போது அதன் அசல் ஆவணங்களை கட்டாயம் தாக்கல் செய்ய வேண்டும். குறிப்பிட்ட அந்த சொத்து மூதாதையர் சொத்தாக இருந்து அதற்கு மூலப்பத்திரம் இல்லையென்றால் அதற்கான வருவாய்த்துறையின் பட்டாவை சமர்ப்பிக்க வேண்டும் என்றும், ஒருவேளை அந்த சொத்து அடமானத்தில் இருந்தால், அடமானம் பெற்ற நபரிடமிருந்து தடையில்லா சான்றிதழ் பெற வேண்டும். அத்துடன் அந்த சான்றை பத்திரப் பதிவின் போது சமர்ப்பிக்க வேண்டும்.
மேலும் சொத்தின் அசல் ஆவணங்கள் தொலைந்து விட்டதென்றால், அந்த சூழலில் இது சம்பந்தமாக காவல்துறையில் புகார் அளித்து ஆவணத்தை கண்டுபிடிக்க முடியவில்லை என்கிற சான்றிதழைப் பெற வேண்டும். அத்துடன் கூடுதலாக ஆவணம் காணாமல் போனது சம்பந்தமாக உள்ளூர் நாளிதழில் விளம்பரம் செய்து, அதன் நகலையும் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் அந்த மசோதாவில் கூறப்பட்டுள்ளது.