தமிழ்நாட்டின் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டையொட்டி அவரது நினைவாக சென்னை கிண்டியில் உள்ள கிங் நோய் தடுப்பு மற்றும் ஆராய்ச்சி நிலைய வளாகத்தில் 1000 படுக்கை வசதிகளோடு, 230 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ளது கலைஞர் நினைவு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை. இந்த மருத்துவமனையினை வரும் ஜூன் மாதம் 5ம் தேதி இந்திய குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு திறந்து வைக்கவிருப்பதாக தமிழக அரசின் சார்பில் அறிவிக்கப்பட்டு இருந்தது.
முன்னதாக, இந்த மருத்துவமனையை திறந்து வைக்க தமிழகம் வருகை தருமாறு கடந்த ஏப்ரல் மாதம் 28ம் தேதி டெல்லியில் குடியரசுத் தலைவரைச் சந்தித்து தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்து இருந்தார். அதற்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் கொடுத்ததைத் தொடர்ந்து மருத்துவமனை திறப்பு விழா தேதி அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், ஜூன் 5ம் தேதி கலைஞர் பன்னோக்கு சிறப்பு மருத்துவமனை திறப்பு விழாவில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு பங்கேற்க மாட்டார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு அந்தத் தேதியில் வெளிநாடு சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருப்பதால் இந்த விழாவில் பங்கேற்க மாட்டார் எனக் கூறப்படுகிறது.
இதைத் தொடர்ந்து, கலைஞர் நினைவு பன்னோக்கு சிறப்பு மருத்துவமனை திறப்பு விழா தேதி மாற்றம் செய்யப்பட உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், மாற்றம் செய்யப்படும் புதிய தேதியில் இந்திய ஜனாதிபதி திரவுபதி முர்மு, கலைஞர் பன்னோக்கு சிறப்பு மருத்துவமனையை திறந்து வைப்பார் எனவும் தகவல் வெளியாகியுள்ளது. அதோடு, புதிய திறப்பு விழா தேதி குறித்த விவரம் விரைவில் வெளியிடப்படும் எனவும் கூறப்படுகிறது.