சீன நிறுவனங்கள் மீதான முதலீட்டைக் கட்டுப்படுத்திய அதிபர் ஜோ பைடன்.

President Joe Biden
President Joe Biden

சீன தொழில்நுட்ப நிறுவனங்களில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனங்களுக்கு அமெரிக்க அதிபர் சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளார். 

இந்த புதிய அறிவிப்பினால் குவாண்டம் தொழில்நுட்பம், செமி கண்டக்டர், செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட சர்வதேச அளவில் முக்கியத்துவம் பெற்ற துறைகளில் இயங்கிவரும் சீன நிறுவனங்களில், அமெரிக்க முதலீட்டாளர்கள் முதலீடு செய்வது தடை செய்யப்பட்டுள்ளது. இது தவிர மற்ற துறைகளில் சீன நிறுவனங்களின் மீது முதலீடு செய்வதற்கு முதலில் அமெரிக்க அரசின் ஒப்புதலைப் பெற வேண்டும். 

உலகின் சிறந்த பொருளாதார நாடுகளின் தரவரிசை பட்டியலில் அமெரிக்காவுக்கு அடுத்ததாக சீனா உள்ளது. இப்படி இருக்கும் நிலையில் தற்போது சர்வதேச அளவில் முக்கியத்துவம் பெற்றிருக்கும் செமிகண்டக்டர், மைக்ரோ எலக்ட்ரானிக்ஸ், செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் போன்ற துறைகளில் இயங்கிவரும் சீன நிறுவனங்களில், அமெரிக்க முதலீட்டாளர்கள் முதலீடு செய்வதற்கு பல கட்டுப்பாடுகள் கொண்டு வரப்பட்டுள்ளது. இது தேசப்பாதுகாப்பை கருத்தில் கொண்டே செய்துள்ளதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து வெள்ளை மாளிகை வட்டாரம் கூறுகையில்," அமெரிக்காவின் அறிவையும் வளத்தையும் பயன்படுத்தி சீனா தன்னுடைய ராணுவ கட்டமைப்பையும் தொழில்நுட்பத்தையும் மேம்படுத்தி வருகிறது. இது அமெரிக்காவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தக் கூடும் என்பதால், சீனாவின் தொழில்நுட்ப முன்னிலையை தடுக்கும் நோக்கில் இத்தகைய முடிவு எடுக்கப்பட்டுள்ளது" எனக் கூறியுள்ளனர். 

மேலும் இந்த உத்தரவு அடுத்த ஆண்டு முதல் நடைமுறைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவுக்கு மக்கள் தங்களை கருத்தைத் தெரிவிக்கவும் போதிய அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. கடந்த 2021 ஆம் ஆண்டில், சீன நிறுவனங்களில் அமெரிக்க முதலீட்டாளர்களின் முதலீடு 32.9 பில்லியன் டாலர்களாக இருந்தது. ஆனால் அதுவே 2022 ஆம் ஆண்டில் வெறும் 9.7 பில்லியன் டாலர்களாகக் குறைந்தது. 2023 ஆம் ஆண்டில் இதுவரை 1.2 பில்லியன் டாலர் அளவிலேயே அமெரிக்க முதலீட்டாளர்கள் சீன நிறுவனங்கள் மீது முதலீடு செய்துள்ளனர். 

இந்நிலையில் இந்த புதிய கட்டுப்பாட்டினால் அமெரிக்கர்களின் சீன முதலீடு பல மடங்கு குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com