இந்தியாவின் ஜனாதிபதி மாண்புமிகு திரௌபதி முர்மு அவர்கள், கேரளாவில் புகழ்பெற்ற ஆன்மீகத்தலமான சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குச் சென்று தரிசனம் செய்வதற்காகவும் , மேலும் சில அரசுமுறை பயணங்களையும் சேர்த்து 4 நாட்கள் கேரளா சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார்.இதற்காக, நேற்று அக்டோபர் 21ஆம் தேதி கேரள மாநில தலைநகரான திருவனந்தபுரத்துக்கு விமானம் மூலம் வந்தடைந்தார். சபரிமலை ஐயப்பன் கோயிலில் தரிசனத்தை முடித்துவிட்டு, பல்வேறு அரசு சார்ந்த நிகழ்ச்சிகள் மற்றும் கலாச்சார நிகழ்வுகளில் பங்கேற்கவுள்ளார்.
தற்போதைய பயணத் திட்டத்தின்படி, ஜனாதிபதி முர்மு அவர்கள் வியாழக் கிழமை திருவனந்தபுரத்தில் உள்ள ராஜ்பவனில், முன்னாள் ஜானாதிபதியான கே.ஆர்.நாராயணனின் சிலையைத் திறந்து வைத்து மரியாதை செலுத்தவுள்ளார்.அதன் பின்னர் வர்க்கலாவில் அமைந்துள்ள புகழ்பெற்ற சிவகிரி மடத்தில், சமூக சீர்திருத்தவாதியான ஸ்ரீ நாராயண குருவின் நூற்றாண்டு விழா நிகழ்ச்சிகளையும் அவர் தொடங்கி வைக்கிறார்.
இதற்கு அடுத்து , கோட்டயத்தின் பாலா நகரில் உள்ள செயிண்ட் தாமஸ் கல்லூரியின் 75வது ஆண்டு நிறைவு விழாவில் பங்கேற்கிறார்.அக்டோபர் 24ஆம் தேதி எர்ணாகுளத்தில் இருக்கும் செயிண்ட் தெரசா கல்லூரியின் நூற்றாண்டு விழாவில் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளார். இதோடு ஜானாதிபதியின் கேரளப் பயணம் நிறைவடைகிறது.
இந்த நிலையில் , இன்று காலை ஜனாதிபதி திரெளபதி முர்மு, சபரிமலைக்குச் ஹெலிகாப்டர் மூலம் செல்ல தயாரானார். இதற்காக பத்தனம்திட்டா மாவட்டத்தில் உள்ள பிரமதம் மைதானத்தில் புதிய ஹெலிகாப்டர் தரையிறங்கு தளம் அமைக்கப்பட்டிருந்தது. இந்த தரையிறங்கு தளத்தில் இந்திய விமானப்படைக்குச் சொந்தமான ஹெலிகாப்டர் தரையிறங்கிய போது, அதன் அதிகப்படியான எடை காரணமாகத் தளத்தின் ஒரு பகுதி எதிர்பாராத விதமாகச் சரிந்து சென்று சிக்கிக் கொண்டது. இந்த சம்பவத்தினால் அந்த பகுதியில் பரபரப்பு நிலவியது.
நாட்டின் முக்கியப் பிரமுகர்களின் வருகையின்போது பாதுகாப்பு மிகவும் அதிகமாக இருக்கும் , ஜனாதிபதிக்கு போதுமான முக்கியத்துவம் அளிக்கப்பட்ட போதிலும் இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது. இருப்பினும் நடைபெற இருந்த பெரிய அளவிலான விபத்து நூலிழையில் தவிர்க்கப்பட்டது. ஹெலிகாப்டரை சிக்கிய பகுதியிலிருந்து உடனடியாக நகர்த்தும் பணியை , தீயணைப்புத் துறை வீரர்கள் மற்றும் காவல்துறையினர் சிறப்பாக கையாண்டனர்.
ஹெலிகாப்டர் தளத்திலிருந்து வெளியே தள்ளப்படும் வீடியோ காட்சிகளும் வெளியாகி வைரலாகின. மீட்பு பணிகள் உடனடியாக நடந்து முடிந்தன. விபத்திற்கு காரணம் ,இந்த ஹெலிபேட் சமீபத்தில் அவசரமாகக் கட்டப்பட்டது என்று மூத்த காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். முதலில் ஹெலிகாப்டர் பம்பா அருகே உள்ள நிலக்கல்லில் தரையிறங்கவே திட்டமிடப் பட்டிருந்ததாகவும், ஆனால் மோசமான வானிலை நிலவியதால், கடைசி நிமிடத்தில் பிரமதம் மைதானம் மாற்றுத் தளமாகத் தேர்வு செய்யப்பட்டு புதிய ஹெலிபேட் கட்டப்பட்டுள்ளது.
செவ்வாய்க்கிழமை இரவுக்கு பின்னர் தான் ஹெலிபேட் அவசர அவசரமாகக் கட்டி முடிக்கப்பட்டதாகவும் காவல்துறை அதிகாரி தெரிவித்துள்ளார். ஹெலிகாப்டர் தரையிறங்குவதற்கு முன்னதாக கான்கிரீட் முழுமையாக உறுதி அடையாமல் இருந்ததே ,ஹெலிகாப்டரின் எடையைத் தாங்க முடியாமல், அதன் சக்கரங்கள் பள்ளங்களை உருவாக்கி சிக்கி கொள்ள காரணமாகியுள்ளது. இந்தச் சம்பவம் ஜனாதிபதியின் பயணத் திட்டத்தில் எவ்வித மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பம்பையில் இருந்து இருமுடி கட்டி சன்னிதானத்திற்கு சிறப்பு வாகனத்தில் திரௌபதி முர்மு சென்றார். இதைத்தொடர்ந்து 18ஆம் படி ஏறி சபரிமலை ஐயப்பனை ஜனாதிபதி தரிசனம் செய்தார். ஜனாதிபதி வருகை காரணமாக சபரிமலை ஐயப்பன் கோயில் பகுதியில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.