தக்காளி விலை உயர்வு, சரிவை நோக்கி செல்லும் எலுமிச்சை: விவசாயிகள் சொல்வது என்ன?

தக்காளி விலை உயர்வு, சரிவை நோக்கி செல்லும் எலுமிச்சை: விவசாயிகள் சொல்வது என்ன?
Published on

நாடு முழுவதும் அத்தியாவசிய உணவு பொருட்கள் மற்றும் காய்கறிகளின் விலை முன்பு எப்போதும் இல்லாத அளவிற்கு விலை உயர்வை சந்தித்துவரும் வேளையில், எலுமிச்சை பழத்தின் விலை மிகப் பெரும் வீழ்ச்சியை சந்தித்திருக்கிறது.

புதுக்கோட்டை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் 50க்கும் மேற்பட்ட கிராமங்களில் தென்னை, பலா போன்றவைகளுடன் ஊடுபயிராக எலுமிச்சையை பயிரிடுவதும் முக்கிய விளைச்சல் ஆகும்.

இவ்வாறு புதுக்கோட்டை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் 50 கிராமங்களில் இருந்து மட்டும் ஒரு நாளைக்கு 5 முதல் 10 டன்கள் வரை உற்பத்தி செய்யப்பட்டு திருச்சி, தஞ்சை, மதுரை, கேரளா போன்ற பல்வேறு பகுதிகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.

எலுமிச்சை பழங்கள் புதுக்கோட்டை கீரமங்கலம் பகுதியில் இருந்து காய்கறி கமிஷன் கடைகள் மூலமாகவும், தனியான வியாபாரிகள் மூலமாகவும் விவசாயிகள் விற்பனை செய்து வருகின்றனர். இந்த நிலையில் எலுமிச்சை விற்பனை கூடங்களில் ஒரு கிலோ 10 ரூபாய்க்கும் குறைவாக விற்பனை செய்யப்படுகிறது. இதனால் விவசாயிகள் பெரும் நஷ்டத்தை அடைந்துள்ளனர்.

இதுகுறித்து கல்கி ஆன்லைன் செய்திக்காக தமிழ்நாடு விவசாய சங்கத்தின் மாநில தலைவர்களில் ஒருவரான அயிலை.சிவசூரியன் கூறியதாவது, புதுக்கோட்டையில் உள்ள 50 கிராமங்களில் எலுமிச்சை ஊடுருவுப்பையாக பயிரிடுவது வழக்கம். தற்போது விளைச்சல் அதிகரிக்கவில்லை, சராசரி அளவே விளைச்சல் இருக்கிறது. ஆனால் கேரளாவில் மழை தொடர்ந்து பெய்து வருவதால் குளிர்பான கடைகளில் எலுமிச்சை பயன்பாடு மிகப் பெரும் அளவில் குறைந்து இருக்கிறது. இதனால் கேரளாவிற்கு ஏற்றுமதி செய்யப்படும் எலுமிச்சையினுடைய அளவு குறைந்து இருக்கிறது.

அயிலை.
சிவசூரியன்
அயிலை. சிவசூரியன்

அதேபோல் தமிழ்நாட்டிலும் வெயிலின் தாக்கம் சற்று குறைந்து இருப்பதால் குளிர்பான கடைகளில் பயன்படுத்தப்படும் எலுமிச்சையின் உடைய அளவு குறைந்து இருக்கிறது. இதனால் எலுமிச்சை வாங்குபவருடைய எண்ணிக்கையும் குறைந்து இருக்கிறது. இதன் காரணமாக எலுமிச்சை அதிக அளவில் தேக்கமடைந்துள்ளது. இதனால் எலுமிச்சைகளை குறைந்த விலைக்கு விற்க நேரிடுகிறது. எலுமிச்சை பழம் கடந்த ஆண்டு ஒரு கிலோ 180 ரூபாய் வரை விற்கப்பட்ட எலுமிச்சை தற்போது ஐந்து ரூபாய்க்கு விற்கப்படுகிறது என்று கூறினார்.

அதே நேரம் அரசு காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலை உயரும் பொழுது அசுர வேகத்தில் நடவடிக்கை எடுத்து, நியாய விலை கடைகள் மூலம் குறைந்த விலையில் விற்க முயற்சி எடுக்கிறது. மேலும் அத்தியாவசிய பொருட்கள் குறைந்த விலையில் மக்களை சென்றடைய பல்வேறு நடவடிக்கைகளை அரசு எடுக்கிறது. அதேநேரம் எலுமிச்சை போன்றவை மிகக் குறைவான விலையில் விற்கப்படும் பொழுது எலுமிச்சை விவசாயிகளை நஷ்டத்தில் இருந்து பாதுகாக்க அரசு எந்தவித நடவடிக்கையும் எடுப்பதில்லை.

விலை மிகப் பெரிய அளவில் வீழ்ச்சியை சந்திக்கும் நேரங்களில் யாரும் விவசாயிகளுக்கு உதவ முன்வராத காரணத்தால், விவசாயிகள் அடுத்த முறை அந்தப் பயிரை விளைவிப்பதை தவிர்த்து விடுகின்றனர். அந்த நேரத்தில் தட்டுப்பாடு ஏற்படுகிறது. தட்டுப்பாட்டின் காரணமாக விலை உயர்கிறது. விலை உயர்வு மக்களை பாதிக்கிறப் போது விலை உயர்வைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கும் அரசு விலை குறையும் போது விவசாயிகளை பாதுகாக்கவும் நடவடிக்கை எடுத்தால் எல்லா காலகட்டத்திலும் எல்லாவகை உணவுப் பொருட்களும் சராசரி நிலையில் மக்களை சென்றடைய வழி ஏற்படும் என்று கூறினார்.

அதேநேரம் ஒரு விவசாயிக்கு, ஒரு பயிர் லாபத்தை தந்து விட்டால். அடுத்த முறை அந்த பகுதியில் உள்ள எல்லா விவசாயிகளும் அதே பயிரை பயிரிட முன் வருகின்றனர். இதனால் அதிக விளைச்சல் ஏற்பட்டு தேக்கம் நிலவுகிறது. இதனாலும் விவசாயிகள் பாதிக்கப்படுகின்றனர். மற்றொருபுறம் 100 நாள் வேலை திட்டத்தால் விவசாயத்திற்கான பணியாளர்கள் வருவதில்லை என்று குற்றச்சாட்டு இருக்கிறது, அது முற்றிலும் தவறானது. 100 நாள் வேலை திட்டம் பல விவசாய குடும்பங்களை நிதி நெருக்கடியில் இருந்து காப்பாற்றி இருக்கிறது.

பல விவசாய குடும்பங்களில் வாழ்வாதாரமாக 100 நாள் வேலை திட்டம் தான் இருக்கிறது. தற்போது நகரபுற வளர்ச்சியின் காரணமாக கிராமப்புற பகுதிகளில் இருந்து மக்கள் பெருமளவில் நகர பகுதிகளுக்கு வேலைக்கு செல்கின்றனர். இதனால் விவசாய வேலைகளுக்கு ஆட்கள் தட்டுப்பாடு நிலவுகிறது இவைகளோடு பருவ நிலை மாற்றமும் விலை ஏற்றத்திற்கு மறைமுக காரணங்கள் என்று கூறினார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com