பிரதமர் மோடி, ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே இறுதி சடங்கில் பங்கேற்று மரியாதை செலுத்தினார்.
கடந்த ஜூலை 8ஆம் தேதி அன்று நாரா என்ற நகரத்தில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த ஷின்சோ அபே துப்பாக்கியால் சுடப்பட்டு உயிரிழந்தார்.
இவரது இறுதி சடங்கில் கலந்து கொள்வதற்காக பிரதமர் நரேந்திர மோடி நேற்றிரவு ஜப்பான் தலைநகர் டோக்கியோவுக்கு புறப்பட்டார்.
தனது பயணம் குறித்து பிரதமர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் “ எனது நெருங்கிய நண்பரும், இந்தியா- ஜப்பான் நட்புறவின் சாதனையாளராக திகழ்ந்த முன்னாள் பிரதமர் ஷின்சோ அபேயின் இறுதி சடங்கில் கலந்து கொள்வதற்காக நான் டோக்கியோ செல்கிறேன்.
மறைந்த அபே அவர்கள் எதிர்பார்த்தது போல், இந்திய-ஜப்பான் இடையேயான உறவை மேலும் வலுப்படுத்த நாம் தொடர்ந்து பணியாற்றுவோம்” என்று குறிப்பிட்டுள்ளார்.
இன்று அதிகாலை ஜப்பான் சென்றடைந்த பிரதமர் மோடி, அந்நாட்டு அதிபர் பூமியோ கிஷிடா சந்தித்தார். அதிபர் கிஷிடாவிடம் ஷின்சோ அபேவின் மரணத்திற்கு இரங்கல் தெரிவித்து, இரு நாட்டு உறவுக்கும் அபே ஆற்றிய பங்களிப்பு குறித்து நினைவு கூர்ந்தார் பிரதமர் மோடி.