பிரதமர் மோடி இன்று கர்நாடக மாநில சட்ட சபை தேர்தலுக்காக 2 நாட்கள் கர்நாடகாவில் பிரசாரம் செய்கிறார். பிதார் மாவட்டம் ஹம்னபாத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பேசினார்.
கர்நாடக மாநில சட்ட சபைக்கு வருகிற 10-ந்தேதி தேர்தல் நடைபெறுகிறது. பிரதமர் மோடி 6 பொது கூட்டங்களில் கர்நாடக மாநில தேர்தல் பரப்புரை செய்ய உள்ளார் .
தேர்தல் பரப்புரை கூட்டத்தில் இது குறித்து மோடி பேசியதாவது "கர்நாடகா தேர்தல் வெறும் வெற்றிக்காக மட் டும் அல்ல. கர்நாடகாவை நாட்டிலேயே நம்பர் 1 மாநிலமாக மாற்றுவதற்கான தேர்தல். மாநிலத்தின் அனைத்து பகுதிகளும் வளர்ச்சியடைந்தால்தான் முன்னேற்றம் அடைய முடியும். இந்த தேர்தல் மாநிலத்தின் பங்கை தீர்மானிக்கும் கர்நாடகாவை நம்பர் 1 ஆக மாற்ற இரட்டை என்ஜின் அரசாங்கம் மிகவும் முக்கியமானது. பா.ஜனதா ஆட்சியை மீண்டும் ஏற்க கர்நாடக மக்கள் தயாராக உள்ளனர். கர்நாடகாவை நம்பர் 1 மாநிலமாக மாற்றுவோம்.
காங்கிரஸ் ஆட்சியை விட பா.ஜனதா ஆட்சியில் அன்னிய முதலீடு மூன்று மடங்கு அதிகரித்துள்ளது. கர்நாடக விவசாயிகள், மக்களுக்கு காங்கிரஸ் போலி வாக்குறுதிகளை மட்டுமே அளித்துள்ளது. காங்கிரஸ் ஆட்சியில் மாநில விவசாயிகளுக்கு எந்த பலனும் கிடைக்கவில்லை. முடிக்கப்படாமல் இருந்த பல்வேறு நீர்பாசன திட்டங்களை பா.ஜனதா ஆட்சியில் நிறைவேற்றியுள்ளோம். நாட்டை காங்கிரஸ் பிளவுபடுத்தியுள்ளது. அந்த கட்சி திருப்திப்படுத்தும் அரசியலில் மட்டுமே ஈடுபட்டுள்ளது.
காங்கிரஸ் என்னை மீண்டும் அவமரியாதை செய்ய ஆரம்பித்துள்ளது. இதுவரை என்னை 91 முறை வெவ்வேறு வழிகளில் அவமரியாதை செய்துள்ளது. காங்கிரஸ் கட்சி என்னை ஒவ்வொரு முறை திட்டும்போது அது துடைத்து எறியப்படுகிறது.
அவர்கள் என்னை தவறாக பயன்படுத்தட்டும். நான் கர்நாடகா மக்களுக்கு தொடர்ந்து பாடுபடுவேன். அம்பேத்கரை கூட காங்கிரஸ் அவமரியாதை செய்கிறது. வீர் சாவர்க்கரை அவமரியாதை செய்வதை நாம் பார்க்கிறோம்.
சாமானியர்களை பற்றி பேசுபவர்களையும் ஊழலுக்கு எதிராக பேசுபவர்களையும் காங்கிரஸ் வெறுக்கிறது. காங்கிரசின் முறைகேடுகளுக்கு வாக்குகள் மூலம் பதிலளிக்க கர்நாடக மக்கள் முடிவு செய்துவிட்டனர்" இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்