புதிய இந்தியாவின் தேசத் தந்தை பிரதமர் மோடி - சர்ச்சையான பேச்சு!!

புதிய இந்தியாவின் தேசத் தந்தை பிரதமர் மோடி - சர்ச்சையான பேச்சு!!
Published on

மகாராஷ்டிர மாநிலத்தின் துணை முதல்வரான தேவ்ந்திர பட்னவிஸின் மனைவி அம்ருதா பட்னவிஸ் பேசிய பேச்சுக்கு பலத்த கண்டனக்குரல் எழுந்துள்ளது. அப்படி அவர் என்னதான் பேசினார்?

நாக்பூரில் எழுத்தாளர் சங்கம் சார்பில் ஒரு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பங்கேற்ற அம்ருதா, “பிரதமர்தான் இந்தியாவின் தேசத்தந்தை” என்று பேசினார். இவர் அப்படி பேசியது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. எழுத்தாளர்களில் சிலர், நீங்கள் என்ன சொல்கிறீர்கள். பிரதமர் நரேந்திர மோடி தேசத்தந்தை என்றால் மகாத்மா காந்தி யார்? என கேள்வி எழுப்பினர். இதனால் கதிகலங்கிப்போன அம்ருதா, பின்னர் சமாளித்துக் கொண்டு, “இந்தியாவுக்கு இரண்டு தேசத் தந்தைகள் உள்ளனர். முந்தைய இந்தியாவுக்கு மகாத்மா காந்தி தேசத் தந்தையாக இருந்தார். இன்றைய புதிய இந்தியாவின் தேசத் தந்தையாக நரேந்திர மோடி இருக்கிறார்” என்றார்.

அம்ருதாவின் இந்த கருத்துக்கு காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், திரிணமூல் காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன. மகாராஷ்டிர மாநில காங்கிரஸ் தலைவர் நானா படோல், “மகாத்மா காந்தி இந்த நாட்டின் சுதந்திரத்திற்காக போராடி உயிர்நீத்தவர். அதனால் அவரை தேசத்தின் தந்தை என்கிறோம். நரேந்திர மோடியை காந்தியுடன் எப்படி ஒப்பிட முடியும்? இந்திய மக்களுக்கு புதிய இந்தியாவும் வேண்டாம், புதிய தேசத்தந்தையும் வேண்டாம்” என்று கூறினார்.

மூத்த காங்கிரஸ் தலைவர் பிரமோத் திவாரி கருத்து தெரிவிக்கையில், பா.ஜ.க.வில் இரண்டு தந்தைகள் இருக்கலாம். ஆனால், நாட்டிற்கு தந்தை மகாத்மா காந்தி ஒருவர்தான் என குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக பிகார் முதல்வரும் ஐக்கிய ஜனதாதளம் கட்சித் தலைவர்களில் ஒருவருமான நிதிஷ்குமார், பா.ஜ.க.வினர் சொல்லுவதை நான் பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை. உதாரணமாக, நாங்கள்தான் தேசபக்தர்கள் என பா.ஜ.க.வினர் கூறுகின்றனர். தேசபக்திக்கும் அவர்களுக்கு என்ன சம்பந்தம்? இந்திய விடுதலைக்காக ஆர்.எஸ்.எஸ். என்ன செய்தது? சுதந்திரப் போராட்டத்தில் ஒரு சிறிய பங்களிப்பைக்கூட அவர்கள் செய்யவில்லை.

அம்ருதா பட்னவிஸ், புதிய இந்தியாவின் புதிய தேசத்தந்தை நரேந்திர மோடி என்று பேசியுள்ளது வன்மையாக கண்டிக்கத்தக்கது. புதிய இந்தியாவுக்காக பிரதமர் மோடி என்ன செய்துவிட்டார்?

ஒரு சில பணக்காரர்களின் நலனுக்காக உழைத்ததைவிட வேறு ஒன்றும் செய்ததாக எனக்கு நினைவில்லை. நாட்டில் ஏழைகள் ஏழைகளாகவே இருக்கிறார்கள். இவர்கள் மேம்பாட்டுக்கு மோடி என்ன செய்தார்? என்று கேட்டு என்று பதிலடி கொடுத்துள்ளார்.

இந்தியாவின் முன்னேற்றத்துக்கு பிரதமர் மோடியின் பங்கு என்ன? அவர் செய்ததெல்லாம் பத்திரிகை மற்றும் சமூக வலைதளங்கள் மூலம் தன்னை விளம்பரப்படுத்திக் கொண்டதுதான். மகாத்மா காந்தியை தாழ்த்திப் பேசுவதே அவர்களின் வேலையாகப் போய்விட்டது.

நான், இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகு பிறந்த தலைமுறையைச் சேர்ந்தவன். ஆனால் எனது தந்தை ஒரு சுதந்திரப் போராட்ட தியாகி. சுதந்திர போராட்டத்தில் மகாத்மாவின் பங்கு என்ன என்பது எங்களுக்குத் தெரியும். தற்போது மத்தியில் ஆட்சியில் உள்ளவர்கள் தங்களை விளம்பரப்படுத்திக் கொண்டார்களே தவிர வேறு எதையும் செய்யவில்லை என்றார்.

குறிப்பு: பிகாரில், கடந்த தேர்தலில் பா.ஜ.க.வுடன் சேர்ந்து கூட்டணி அமைத்து ஆட்சிக்கு வந்தவர்தான் நிதிஷ்குமார். பின்னர் பா.ஜ.க. கொடுத்த நெருக்கடியாலும், பா.ஜ.க.வின் திரை மறைவு வேலைகளைக் கண்டு கூட்டணியை முறித்துக் கொண்டு லாலுவின் ராஷ்ட்ரீய ஜனத்தாளத் துடன் சேர்ந்து புதிய கூட்டணி அமைத்தும் பிகாரில் முதல்வராகத் தொடர்கிறார் நிதீஷ் என்பது குறிப்பிடத்தக்கது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com